நரகவாய் மோகன்

4 310

அரசியல் நையாண்டிச் சிறுகதை

ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ்.

“எங்க போறோம் பாலகணேஷ்?” மகன் மோகன்ராஜா வினவினான்.

தந்தையைப் பெயர் சொல்லிதான் அழைப்பான். சகமனிதர்களை, புழுக்களைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பான். வெண்கலக் குரல்.

“சும்மா இங்க பக்கத்துல என் பிரண்டு வீட்டுக்கு!”

“பொய் சொல்ற. நீயும் உன் மனைவியும் பேசுறதை உங்க பெட்டுக்கு அடில படுத்திருந்து முழுசா ஒட்டுக் கேட்டுட்டேன்!”

“உன் க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே ராஜா?”

“உன் டிக்ஷனரிலதான் நான் செய்றதுக்கு க்ரைம் என்று பெயர். என் டிக்ஷனரில என் செயல்களுக்கு சாகசம் என்ற பொருள் இருக்கிறது!”

“வாயை மூடிக்கிட்டு வா. ஸைக்காலஜிஸ்ட் பார்ப்போம்..”

“வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணிடுவேன்”

“மிரட்டாம கம்முன்னு வா. உன் சாகசங்களை ஸைக்காலஜிஸ்ட் முழுசா தெரிஞ்சிக்கிட்டு உனக்கு அவார்டும் ரிவார்டும் கொடுக்கட்டும்!”

“ஸைக்காலஜிஸ்ட்டைப் பாக்கறதில எனக்கொன்னும் பயமே இல்லை. போங்க அவனைப் பாத்துப் பேசி மல்லாத்திறலாம்!”

கிளினிக்கின் முன்புறம் பத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மூன்று இருக்கைகளில் போய் அமர்ந்தனர். ஆறாவது ஏழாவது இருக்கையில் ஒரு தாயும் ஒரு 4 வயது மகளும் அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுமியைப் பார்த்து, காது வரை இளித்தான் மோகன்ராஜா.

“உனக்குப் பெண்கள் என்றாலே பிடிக்காதே! அந்தச் சிறுமியைப் பார்த்து ஏன் இளிக்கிறாய்?”

“பிடித்த அடிமையிடம் எஜமானன் பல்லிளிக்கத்தான் செய்வான். சதா ஏன்ய்யா என்னையே நோட் பண்ணிக்கிட்டு இருக்க? உருப்புட்டுருவ.. தக்காளி..”

உள்ளே அழைக்கப்பட்டனர். மருத்துவர் சுழலும் இருக்கையில் அமர்ந்திருந்தார். வயது 60. அறிவுஜீவிக் கண்கள். உள்ளே நடந்து வரும் தாய், தந்தை, மகனை அவதானித்தார். சிறுவன் முகமது பின் துக்ளக் படத்தில் சோ குதித்துக் குதித்து நடந்து வருவது போல நடந்து வந்தான். ‘இந்த கிளினிக் என்ன விலை? ஒரே செக்கில் ஃபுல் அமவுன்டை செட்டில் பண்ணிருவேன்’ என்கிற தோரணை சிறுவனிடமிருந்து வெளிப்பட்டது.
“உட்காருங்கள்… உங்க பையனுக்குத்தானே பிரச்சனை?”

“ஆமா சார்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“கருவாடு நாறத்தானே செய்யும்!”

“இவன் எங்கள் ஒரே மகன். இவனின் பெயர் மோகன்ராஜா. வயது பத்து. ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். இவன் ஆயிரக்கணக்கான நெகடிவ் குணங்களின் வேர் ஹவுஸ்…”

“என்னென்ன பண்ணுகிறான்?”

“வாயைத் திறந்தால் பொய்.. லாஜிக்கே பார்க்கமாட்டான். எதிராளி நம்புறான், நம்ப மாட்டிங்கிறான் என்பது பற்றியெல்லாம் துளியும் கவலைப்பட மாட்டான்!”

“இவன் சொன்ன பொய்களில் பெஸ்ட் பத்து பொய்களைச் சொல்லுங்கள் கேப்பம்..”

“ஒருநாள் மோகன் ராஜா தன் நண்பர்களிடம் ‘நண்பாஸ்! ஒரு நாள் பக்கத்துல இருக்ற காட்டுக்கு, தனியா விளையாடப் போய்ட்டேன். ஒரு டைனசார் குட்டி கிடைச்சது. வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அம்மா பாத்துட்டு பதறினாள். டைனசார் குட்டியை வீட்டுல வளர்க்கிறது படு ஆபத்து என்றாள். திரும்ப டைனோ குட்டியைக் காட்டுல கொண்டுபோய் விட்டுட்டேன்’ என்றான். இது ஒரு பொய்!”

மோகன்ராஜாவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார் மனநல நிபுணர். “கப்ஸா மன்னன்டா நீ!”

மோகன்ராஜா குரோதமாக முறைத்தான்.

“திடீரென்று ஒருநாள் சர்டிபிகேட்டைத் தூக்கிட்டு வந்து எல்லாத்துகிட்டயும் காண்பிச்சான். உலக விஞ்ஞானங்கள் அனைத்திலும் விசேஷ பட்டப்படிப்பு படித்து முடித்ததாக ஒரு சான்றிதழ். அந்தப் பட்டப்படிப்பை ஆறு வயதில் அமெரிக்காவில் படித்து முடித்தானாம். யாராவது அந்தச் சான்றிதழ் பற்றிச் சந்தேகப்பட்டால் ஃபைன் போடுவேன் என மிரட்டுகிறான்!”

“ஜித்தன்டா நீ!”

“எங்க மகனுக்கு ஒரே ஒரு ஃபிரண்டுதான் இருக்கான். அவன் பெயர் அமர்ஜித். ஒருதடவை இவன்க ரெண்டு பேரும் சேர்ந்து தெருநாய்களுக்கு விஷம் வச்சு சுமார் 22 நாய்களைக் கொன்னுட்டான்க. ஒரு தடவை இவன்க மொட்டை மாடில படுத்திருந்தப்ப திருடன் வந்து இவன்களைக் காயப்படுத்திட்டான்னு சீன் போட்டு தங்களுக்கு சிம்பதி வேவ் கிரியேட் பண்ணாங்க!”

“க்ரைம் ட்வின்ஸ்..”

“இவன்க ரெண்டு பேரும் ஸ்கூல் பசங்க கிட்டயிருக்ற எல்லா சாமான்களையும் திருடி அஜித், அஸ்ரானின்ற இரண்டு பணக்காரப் பசங்ககிட்ட ஒப்படைச்சிருவான்க. டீச்சர்களையும் பிரின்சிபலையும் கூட இவர்கள் விடுவதில்லை..”

“மலைக் கள்ளன் பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குக் கொடுப்பான். இவர்கள் ஏழைகளிடம் திருடி பணக்காரர்களிடம் தருகிறார்கள். சபாஷ் என்னதொரு கான்ட்ராஸ்ட்..!”

“நான்கு வயதில் ரோடுரோடாக சமோசா விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றியதாக புருடா விடுவான் சக சிறுவர்களிடம்..”

“சமோசா பாய்!”

“மோகன் ராஜாவுக்கு மொள்ளமாரித்தனங்களை அமர்ஜித் சொல்லித் தருகிறானா? அல்லது அமர்ஜித்துக்கு மோகன்ராஜா சொல்லித் தருகிறானா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒருநாள் ரெண்டு பேரும் சைக்கிள் ஓட்டிவந்து பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் மீது காயப்படுத்திவிட்டார்கள். கேட்டால், சிறுவர்கள் சைக்கிள் ஓட்டினால் எட்டு பாதசாரிகள் நான்கு பிளாட்பாரவாசிகள் காயப்படத்தான் செய்வார்கள் என சால்ஜாப்பு கூறுகின்றனர். உயிர்களைத் துன்புறுத்தல் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. வண்ணத்துப்பூச்சியை இறக்கைகளை பிய்த்துப் போடுவார்கள். ஓணான்களை சுருக்கில் கட்டி மின்கம்பிகளில் தொங்கவிட்டுச் சாகடிப்பர்கள். கோழிகளைத் துரத்தித் துரத்திக் கல்லால் அடிப்பார்கள்..”

மோகன்ராஜா மனநல மருத்துவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தான். ‘இருடி பாக்கெட்ல கவட்டை வச்சிருக்கேன். கவட்டையை இழுத்து உன் மண்டையை உடைக்கிறேன்..’ என நினைத்துக்கொண்டான்.

“பக்கத்து வீட்டுச் சிறுமியை வச்சு தனக்கு மேக்கப் போட்டுக்குவான். ஒரு நாளைக்கு ஆறு தடவை ட்ரஸ் மாத்திப்பான். கேமிரான்னாலே அவனுக்குக் கொள்ளைக் கிறுக்கு. திறந்தவாய் மூடாம பார்ப்பான். விதவிதமா போஸ் கொடுப்பான். ஊர் சுத்த்றதில நாட்டம் அதிகம். காலைல காளான்தான் சாப்பிடுவான்!”

“எனக்கு எல்லாமே புரியுது!”

“தனியா நின்னு என்ன வேணாலும் பேசுவான். ஆனா க்ளாஸ் ரூம்ல டீச்சர் ஒரு கேள்வி கேட்டா, தொடை நடுங்கி ஒன்னுக்குப் போய்விடுவான்!”

“ஒன்பாத் ரூம் ஃபெல்லோ!”

“யாரையாவது விரும்பிக் கட்டிப்பிடிச்சான் என்றாலோ கைகுலுக்கினான் என்றாலோ கட்டிப் பிடிக்கப்பட்டவர், கைகுலுக்கப்பட்டவர் அடுத்த ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு விபத்தில் காயப்படுவார்!”

“டாக்டர்! உங்க கையைக் குலுக்கவா?கட்டிப் பிடிக்கவா?” கை நீட்டியபடி வந்தான் மோகன்ராஜா.

“கொஞ்சம் அமைதியா இரு ஸ்மால் பாய்..”

“என்ன?”

“என் மகன் அவனோட ஃப்ரண்ட்ஸ் அமர்ஜித், அஜித், அஸ்ரானி நால்வரும் சிஎல்ஓ என்கிற தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவர்களாம்!”

“சிஎல்ஓ என்றால்?”

“சைல்ட் லிபரேஷன் ஆர்கனைஸேஷன் எனப் பொருள்!”

“அதன் நோக்கம்?”

“பெற்றோரிடமிருந்து, ஆசிரியரிடமிருந்து, குறிப்பாக மூத்த தலைமுறையினரிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பு அது. குழந்தைகள் சுயநலமாய் வளர வேண்டும் என்பது அதன் அடிப்படைக் குறிக்கோள்!”

மோகன்ராஜாவைப் பக்கத்தில் அழைத்து, கண், காது, மூக்கு, வாய், நாடித் துடிப்பு, இதஉலகநாடுகளைச்ஆகியவற்றைப் பரிசோதித்தார் மனநல நிபுணர்.

“நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?”

“நான் சூப்பர் மனிதன் நீங்கள் எல்லாம் ஆட்டுப் புழுக்கைகள்!”

“வேற?”

“உன் வேலை மயிரைப் பாத்திட்டு போ. மீறினா கொன்னுடுவோம்“

“எங்கள் மகனுக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்துகொண்டீர்களா டாக்டர்?”

“ஓ! உங்க மகனுக்கு இருக்கும் மனநோயின் பெயர் ‘ஜிடிமோ ஸின்ட்ரோம்’’ ‘நியோஹிட்லரின் ஹார்மோன்’ மிதமிஞ்சிய சுரப்பும் உங்க மகனின் மனநோய்க்கு ஒரு காரணம். சிஎல்ஓ அமைப்பும் மூன்று ‘அ’ நண்பர்களும் உங்கள் மகனின் துர்நடத்தைக்கு முக்கியக் காரணங்கள். ஜிடிமோ ஸின்ட்ரோம் கவர்ச்சிகரமானது; ஆனால் நயவஞ்சகமானது. இந்த ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள். இறுதி வீழ்ச்சி படுபயங்கரமாக இருக்கும். சிறிது காலமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஜிடிமோ ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளனர்..”

“என் மகனின் மனநோயைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா?”

“எதுவும் செய்யாமல் உங்கள் மகனை அவன் போக்கில் விட்டுவிட்டால் இரண்டு விஷயங்கள் நடக்கும்!”

“என்ன?”

“ஒருநாள் உங்கள் மகன் நாடாள்பவனாக தனிவிமானத்தில் உலகநாடுகளைச் சுற்றி வருவான். அல்லது அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி இரத்தக் காயங்களுடன் சாலையில் கிடப்பான்!”

பெரிதாய் வாய் திறந்து சிரித்தான் மோகன்ராஜா. அவனது திறந்த வாய்க்குள் நரகம் தெரிந்தது.

  • ஆர்னிகா நாசர்
4 Comments
  1. Anita Srikanth says

    “கருவாடு நாரத்தான் செய்யும்,” ,வரிகள் நச்..
    கடைசி வரி அரசியல் நையாண்டி மாதிரி தெரிஞ்சாலும் … அந்த நோயை குணப்படுத்தலாம் னு மோட்டீவ்வா பேசாத அந்த 60 வயசு டாக்டர் மேல கோவம் வரத்தான் செய்யிது…

    வித்தியாசமான கதையை படிச்ச திருப்தி வருது …

  2. புதுவை ரா. ரஜனி says

    எக்சலண்ட் கதை! என்ன ஒரு நடை, கற்பனை, நிகழ்காலத்தை செப்பும் திறன். அருமை சார்…!

  3. ம. செ. மோகன் ராஜா says

    மோடிஜி sorry, ஜிடிமோ Syndrome நல்ல வளமான கற்பனை. நாட்டுநடப்பு சிறுகதை. ❤️

  4. Nedunchezhian T says

    சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நல்ல கதை.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More