விண்ணப்பம்

1 572

கல்வெட்டுக் கதைகள் – 2

” இந்த வேலையையும் விட்டுட்டு என்ன செய்ய போறீங்க “
மருதம்மா அங்கலாய்த்துக் கொண்டாள்.
“நானா விடுறேன். எப்டியும் அடுத்த மாசம் அனுப்பிருவாங்க. அதுக்குள்ள நாமளா.”
ஏக்கப் பெருமூச்சும் வலியும், செய்வதறியா கவலையும் சேர்ந்து கொள்ள காசி சொன்னான்.

ஊர்ப் பொதுக் கூட்டத்தில் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள் . விசுவநாத குருக்கள் வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் இந்த மாதக் கூலி கிடைப்பதே கஷ்டம் என்றார்கள். சிலர் பக்கத்து வயலில் கேட்டுப் பார்ப்போமா. என்று யோசித்தனர்.

” ஏங்க. அடுத்த வயல் நம்ம சோமசுந்தரம் ஐயா வயல் தான.”

” அங்க மட்டும் கிடைச்சிருமாக்கும் . அதுவும் தான போகப் போகுது ” .

மருதம்மா சொல்லில் நியாயம் இல்லாமல் இல்லை. கடந்த ஓரிரு வாரங்களாகவே வேலை போய் விடும் அபாயம் இருப்பதாகத் தான் பட்டது காசிக்கு… வயலுக்குச் சொந்தக்காரர் வயலுக்கே வருவதில்லை. சதா சர்வ காலமும் சிவன் கோவிலே கதின்னு கிடக்கார். ஐயர் வீட்டம்மா மட்டும் அப்பப்போ வந்துட்டு போறாங்க. என்னிக்கும் வராதவங்க வர்றாங்கன்னா, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது காசிக்கும் மருதம்மாவுக்கும்.

விசுவநாத குருக்கள் சிவபக்திக்குப் பேர் போனவர். நேம நிஷ்டைகள், ஆச்சார அனுஷ்டானங்களில் அவரை விஞ்ச ஆளில்லை அந்த ஊரில். ஊர் முழுக்க கோயில் பணிக்காகவே நிறைய பேர் இருந்தார்கள். இருப்பினும் காலை 4 மணிக்கு விழிக்கும் விசுவநாதய்யர் சிவனைப் பார்க்காமல் சாப்பிட்டதில்லை. தன் வயலில் என்ன நடக்கிறது. என்ன பயிர் விளைகிறது என்பதெல்லாம் அவர் கண்டுகொண்டதில்லை. எத்தனை மரக்கால் விளைச்சல் என்ற கணக்கெல்லாம் ஐயரம்மா கையில் தான். வயலை குத்தகைக்கு எடுத்தவரிடம் கறாராகப் பேசி வாங்கி விடுவாள்.

வயலில் வேலை செய்யும் குடும்பங்கள் மேல் ஐயரம்மாவுக்கு இருந்தது வாஞ்சையா, வேலை வாங்கும் திறனா, அக்கறையா என்பதை காசியால் பகுத்துச் சொல்ல இயலாமல் இருந்தது. மருதம்மா தான் ஐயரம்மாவுக்கு நெருக்கம்.

” ஏண்டி மருது. உன்னாட்டம் இருக்கும் பொண்ணுங்க எல்லாம் வயல் வேலைக்கு வர்றயில நீ மட்டும் வீட்லயே அடைஞ்சு கிடந்தா என்னடி அர்த்தம். வாரத்துக்கு ரெண்டோரு நாள் கூலிக்கு வந்தா கிடைக்குற காசை சேர்த்து வைக்கலாமில்லையா. காசிக்கு சமர்த்து பத்தாது கேட்டியா. போன வாரம் ஒரு மணி நேரம் சேர்த்து வேலை செய்யச் சொன்னதுக்கு ராமு கிட்ட வாக்குவாதம் பண்ணிட்டான்னா இருக்கான். கூட கால் மரக்கா நெல்லு கிடைச்சா கசக்குமோ “

ராமு அந்த வயலை குத்தகைக்கு எடுத்திருந்தவன். உண்மையிலேயே காசிக்கு சாமர்த்தியம் போறாது தான். இல்லையானால் கிடைக்கும் கால், அரை மரக்கால் கூலிக்கு நான்கைந்து வருஷங்களாக அதே வயலில் கிடப்பானா..

” மத்தவங்கள்ளாம் கூலி அதிகம் கேட்டு ஊர்ப் பொதுக்கூட்டத்தில் பேசுனா நீங்க மட்டும் ஊமையா இருந்தா கருங்காலிப் பட்டம் கிடைக்காதா . நாம வாழறதே கஷ்ட ஜீவனம். இதுல மூணாவதா ஒன்னு “.சொல்லி முடிப்பதற்குள் கண்ணில் நீர் திரை கட்டியது.அவர்களுக்கு மணமாகி இரண்டாண்டுகள் ஆகி இருந்தது. மூன்று மாதம் முன்பு தான் சிலையாட்டம் பெண் குழந்தை.

” நான் அதை போன கூட்டத்துலயே கேட்டுட்டேன். அந்த ராமுவுக்கும் எனக்கும் வாக்குவாதம். கூலி கூட்டிக் கேட்டா வேற வயலுக்கு மாத்திருவேன்னான். அது இருக்கு அஞ்சு கல்லு தூரத்துல. உன்னையும் பிள்ளையையும் விட்டுட்டு எப்படிப் போவேன். நீயும் தான் எப்படி கஞ்சி கொண்டாருவ . வெறும் வயித்துல வேலை பாக்குற அளவுக்கா நமக்கு தெம்பிருக்கு. ” தூங்கும் பிள்ளையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

” அந்த ராமு எப்படியோ . ஆனா ஐயரூட்டம்மாக்கு நல்ல மனசுங்க. நானும் கொஞ்சம் வந்து கூட மாட வேலை பார்த்தா கூலி சேர்த்துக் கிடைக்குமேனு சொல்லிட்டிருந்தாங்க..” என்று இழுத்தாள்…

” அடி போடி இவளே. உனக்கு குழந்தை இருக்கிறது அந்தம்மாக்கு தெரியாதா என்ன. புருசனும் பொஞ்சாதியும் ஒரே வயலுக்கு வந்துட்டா அவங்களுக்குத் தாண்டி சல்லிசு. எனக்கு கொடுக்கும் கூலியை இன்னொருத்தனுக்கு கொடுக்க வேணாம் பாரு. உனக்கு குறைச்சு கொடுத்தாலும் நான் வாயைத் திறந்து கேட்க மாட்டன்னு அவங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியாம நீ ஏதாச்சும் முடிவு எடுத்தா அவ்வளவு தான். சொல்லிட்டேன்”.

கணவன் அதிசயமாகக் கோபப்படுவதை ஆச்சரியமாகப் பார்த்தாள் மருதம்மா.

அங்கே விசுவநாத குருக்கள் வீட்டில் ராமு , ஐயரம்மாவிடம் பணிவாகப் பேசிக் கொண்டிருந்தான். ” குத்தகை முடிய இன்னும் ஆறு மாசம் இருக்குங்க. அதுக்குள்ள தொகையைக் கேட்டா எப்டி . நான் ஐயரு கிட்ட பேசிக்கிறேன். “

” தோ பார் ராமு, ஐயாவுக்கு இதெல்லாம் பாக்க பொழுதில்லே. வர்ற சிவராத்திரிக்கு ராசா பேரில் சந்திப் பூஜைக்கு ஏற்பாடு நடந்திட்டிருக்கு. அதுக்காக பெரியவாள்லாம் வர்றா. ராசாவுக்கு தமக்கை இருக்காளோல்லியோ . அவாளுக்கு நம்ம கோயில் சுவாமி மேல ஏகப்பட்ட பிரியம். அவா ஏதோ விண்ணப்பம் பண்ணி சங்கல்பம் எடுத்து அதுல ஜெயிச்சுட்டாளாம். பதிலுக்கு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைன்னு அமர்க்களப் படுத்திட்டா. அடுத்த வாரம் நம்ம கோயிலுக்கு திருவிளக்கு கைங்கர்யம் பண்றா . அதுக்காக நம்மவா நிலம் சிலதை விலைக்குக் கேட்டிருக்கா. சபையிலே சொல்லியாச்சு. மாமாவைப் பத்தித் தான் நோக்குத் தெரியுமே. சிவனுக்குக் கொடுப்பது கொடுப்பினைம்பார். என்னமோ இவருக்கு எல்லாரும் அள்ளிக் கொடுத்திட்டா மாதிரி.” கொஞ்சம் போல இடித்துத் கொண்டாள்…

உண்மையில் அரசாங்கம் இவர்களுக்கு அள்ளித் தான் கொடுத்திருந்தது. ஆனால், அவை கோயில் பணிக்காக மட்டுமே செயல்பட வேண்டும் எனும் உத்தரவுடன். விசுவநாத ஐயர் கையில் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேகத்தை இழைத்து ஈஸ்வரனுக்குக் கைங்கர்யம் பண்ணக் கூடியவர். அவரது நேர்மை கருதியே நிலமும் கொடுக்கப் பட்டது. இருப்பினும் அவரைச் சார்ந்தவர்களுக்குத் தேவைகள் இருக்குமல்லவா. அவரவர்க்கு அவரவர் நியாயம். நிலம் கையை விட்டுப் போவதன் அபாயக் குறி கொஞ்சம் அதிகப் படியாகவே அவள் முகத்தில் தென்பட்டதை இராமு கவனிக்கத் தவறவில்லை.

“மாமி. இப்போ நம்ம வயல்ல வேல பாக்குறவங்களுக்கு பதில் சொல்லியாகனும் நான். பாதி பேருக்கு மேல கூலி பாக்கி. எடுத்தோம் கவுத்தோம்னுல்லாம் செய்ய முடியாது பாத்துக்கங்க. வயல் நம்ம கைய விட்டுப் போகுதுன்னு அவங்களுக்குத் தெரிய வேண்டாம். அப்புறம் ஆளாளுக்கு கூலிய கூட்டிக் கேப்பானுங்க. இப்பவே அந்தப் பய காசி சாஸ்தி கேக்குறான். அதுவும் ஊர்க் கூட்டத்தில வச்சு. அவங்கூடச் சேர்ந்து எல்லா பயலுவளும் கேட்டா பிரச்சனை பெருசாவும். “

” கவலைய விடு ராமா. அவம் பொஞ்சாதி கிட்ட நான் பேசறேன். நீ இனிமே அவன் கேட்டா, கூட ஒரு மணி நேரம் சேர்த்துப் பாக்கச் சொல்லு. அதுவும் முடியாட்டி நம்ம கணபதியையர் வயல்ல வேலைக்கி போகிறியான்னு கேளு. அதுவும் நீ தான் பாக்கறன்னு எனக்குத் தெரியும்.” என்றாள். பெண்களுக்கு ஊரெல்லாம் கண்கள் என நினைத்துக் கொண்டான் ராமு.

இதற்கிடையில் உச்சி காலப் பூஜை முடிந்து விசுவநாத குருக்கள் வீட்டுக்கு வந்தார். வாசலில் ஜலம் விட்டு பின்னங்காலை மூன்று முறை அலம்பியவாறே இவர்கள் சம்பாஷணையைக் கேட்கும் விதமாக ” என்னப்பா ராமு. காத்து இந்தப் பக்கம் அடிக்குது. வழக்கமா ஆள் விட்டனுப்பிச்சா கூட வர மாட்டியே. ஓ மாமிகிட்ட பேசியாச்சா. பேஷ். ” .

சிவச் சின்னங்கள் பளிச்செனத் தெரிய நித்தம் நினைந்துருகி சித்ததில் சிவத்தை நிறுத்தும் வேத பாராயணி அவர். லௌகீக சம்பந்தங்களில் சிறிதும் நாட்டமில்லாத வாழ்க்கை அவருடையது. நிலம் கையை விட்டுப் போகிறது என்ற பிரஞ்ஞையே இன்றி இருப்பவர். சிவச் சொத்து சிவனுக்கே என்பார்.

” நமஸ்காரம் ஐயரே. நம்ம காணியை விற்பதற்கு ஏற்பாடாகிறது. கூடவே சோமநாதைய்யர், சுப்பிரமணியையர் காணியும். அரச கட்டளை. இருந்தாலும் ஐயர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் . ” என அங்கலாய்த்தான். அவனுக்கு அவன் தொழில் போகிறதே எனும் கவலை.

” கொடுத்தவா கேக்கறா. இதுல நீயும் நானும் பேச என்ன இருக்கு சொல்லு. நீ மாமி காதைக் கடிச்சு ஒன்னும் ஆகப் போறதில்ல புரியறதா. போய் ஆக வேண்டிய வேலையைப் பார் ” என விரட்டினார்.

விசுவநாதையர் இப்படித்தான். அதிகம் பேச மாட்டார். ஆனால் பேசினால் ஒரு வார்த்தையாய் இருந்தாலும் அது திருவார்த்தையாய் வந்து விழும். அத்தனை தீர்க்கம்.

“சரி சரி. ராமு. நீ போய் ஆக வேண்டியதைப் பார். காசி வந்தான்னா என்னை வந்து பார்க்கச் சொல்லு. ” என்றாள் மாமி. அவன் ஏமாற்றத்துடன் கிளம்பினான்.

மருதம்மா குழந்தையை மடியில் போட்டுக் கொண்டே தெருவில் போவோர் வருவோரை கவனித்துக் கொண்டிருந்தாள் . குடிசைத் திண்ணையில் பக்கத்து வீட்டு முத்தம்மாள் வந்தமர்ந்தாள் . காசியோடு வயல் வேலைக்கு வரும் அவன் கூட்டாளி கந்தன் மனைவி.

” மருதக்கா. குழந்தைக்கு மேலுக்குச் சொகமில்லையா. ஏன் ஒரு மாதிரி இருக்கு.” அரைக் கண் மூடி தூக்கத்தில் இருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“ம்ம். அதுவும் தான் என்ன செய்யும் . நம்ம ஒடம்புல ஓடுற இரத்தம் ஓடுனாத்தானே சொரக்கிறதும் சொரக்கும். அதுக்கும் வவுறு நெறையும்.

“. ஏன். காசியண்ணே வேலைக்குப் போகறதில்லையா.”
” அதெல்லாம் போயாவுது . செஞ்ச வேலைக்கு கூலி வந்தாத்தானே வீட்டில் அடுப்பெரியும். இந்த மனுசன் வாயத் தொறந்து கேட்டதுக்கு வேத்து வயல் போகச் சொன்னாராமில்ல மொதலாளி. அதுவுமில்லாம இப்ப இருக்கிற வேலைக்கும் கேடு வந்திரும் போல. நிலமெல்லாம் கைய விட்டுப் போகுதாம். புதுசா வர்றவன் நம்மை வேலைக்கு வச்சுப்பான்னு என்ன நிச்சயம். பழைய மொதலாளியே கூலி ஒழுங்கா தருவதில்ல. புதுசா வர்றவங்க மொத்தமா தொறத்தி விட்டுட்டா தெருவுல தான் நிக்கணும். போக்கிடமுன்னும் எதுவுமில்ல. எங்க கஷ்டத்தை கேக்க எந்த நாதி இருக்கு இந்த ஊரில. ” மூக்கை சிந்தினாள்.

” எங்கூட்டுக்காரரும் இதையே சொல்லித் தான் ஒருவாரமா பொலம்பறாரு. நிலத்தை அரசாங்கமே திரும்ப எடுத்துக்கப் போகுதாம். அது எப்டிக்கா நடக்கும். எனக்கு ஒண்ணுமே புரியல. ” என்றாள் முத்தம்மா.

” எது எப்படியோ. உம் புருசனுக்கும் எம் புருசனுக்கும் இனிமே வேலை இல்ல. உனக்கும் எனக்கும் நாதியில்ல.”
” அப்படியெல்லாம் மனச விட்றாதக்கா. ஆண்டவன் துணை நமக்கு என்னிக்கும் உண்டு. நானும் கேள்விப்பட்டேன். கோயில் காரவுக வயக்காட்டை எல்லாம் வாங்கப் போறாங்களாம். இதுவரை அங்க வேலைப் பார்த்தவங்க நெலமை எல்லாம் என்னாகும் “.

இருவரும் சோகம் கலந்த சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் இருந்தனர். மடியில் குழந்தை முழுதும் உறங்கி விட்டிருந்தது.

கோயிலில் பேரிகை முழங்கியது. வழக்கமாக வாசிக்கப்படும் குடமுழவின் ஒலியை மிஞ்சும் வகையில் இருந்தது மன்னரின் தமக்கை வருகைக்கான கோயில் சபையோரின் வரவேற்பு முழக்கம். பூரண கும்பம் பொலிகிறது. திரளான பக்தர்கள் வரிசை கட்டி நிற்க பின்னால் வந்தவர்கள் முன்னே சென்று காண வழிவகை செய்யப் படுகிறது.

அதிகாரத்தில் இருப்போர்க்கு எப்போதும் இவை உண்டல்லவா. பின் வந்து முன் சென்று தரிசித்தல். கூலி கேட்கவே தயங்கும் மக்கள் இதற்கெல்லம் வாய் திறப்பார்களா என்ன.
கருணையே வடிவான மூலவர் முன் நின்று சில நிமிடங்கள் கண்களை மூடி தியானிக்கிறார் அரசரின் தமக்கை.
” துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின் . “
எனப் பரவும் தேவார அடிகளைப் பாடிக் கொண்டே விசுவநாத குருக்கள் வழங்கும் திருநீற்றைக் கையிலேந்திக் கொள்கிறார்.

கூட்டத்தில் சலசலப்பு. ” அட. இருங்கப்பா. பிராட்டியார் செல்வதற்கு வழி விடுங்கள். ம்ம் வழி வழி. ” என சொல்லிக் கொண்டே வந்தார் சோமநாதய்யர்.
” அவங்க கிட்ட தான் ஒரு விண்ணப்பம் இருக்கு சாமி “. ஓரத்தில் ஒரு பெண் குரல். எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றனர். திருத்தமக்கையார் நீற்றை நெற்றியில் பூசிக் கொண்டே திரும்பிப் பார்க்கிறார்.
” இந்தாம்மா. அதெல்லாம் அப்புறமா எங்க கிட்ட சொல்லு. இப்ப அவங்க போக வழி விடு. சீக்கிரம். ” ராமு முன்னே வந்து அவசரப் படுத்தினான்.
” இருங்கள். அவள் விண்ணப்பம் என்னவென்று கேட்போம். நீ சொல்லம்மா ” என்கிறார் திருத்தமக்கை. அவர் கைகளில் கோயிலுக்குக் கொடுக்க வேண்டி வைத்திருக்கும் திருவிளக்கு ஜொலிக்கிறது.
” தாயே. வணக்கம். என் பெயர் மருதம்மாள். விசுவநாதய்யர் வயலில் கூலி வேலை செய்யும் காசியின் மனைவி. எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. கல்யாணமாகி ரெண்டு வருசம் தான் ஆவுது. செய்யுற வேலைக்கும் கூலி ஒழுங்கா வருவதே இல்லைங்க. (ராமு ஏதோ பேச முன்னே வர மெய்க் காவலர்கள் அவனை பின்னுக்குப் போகச் சொல்லி கையமர்த்துகின்றனர்) . ரொம்ப கஷ்டப்படறோமுங்க . இப்ப அந்த வேலைக்கும் ஆபத்து வந்துரும் போல. அரசாங்கம் இந்த வயலை எல்லாம் வாங்கப் போறதா பேசிகிறாங்க. எங்களுக்கு வேற வேலைக்குப் போகவும் வழி இல்லங்க. கைக் குழந்தையை வச்சுகிட்டு என்னாலும் எங்கேயும் போக முடியல. என்னை மாதிரி இங்க பல குடித்தனங்கள் இருக்கோமுங்க. இந்த வயலும் இல்லேனா நாங்க தெருவுல தான் நிக்கனும். தாயி நீங்க தான் ஏதாச்சும் செய்யணும். நாங்க எங்க போவோம் “.
கையில் குழந்தையுடன் சட சட வென கொட்டித் தீர்த்து விட்டாள்.

குருக்கள் மனைவி அந்தப் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டாள். மனதுக்குள் நிலம் போய் விடுமோ எனும் கவலை. காசி அப்போது தான் கோயிலுக்குள் வருகிறான். என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்ள அவனுக்குச் சில நிமிடங்கள் பிடிக்கின்றன.

திருத்தமக்கையார் பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்று விடுகிறார். ” ஏய். உன்ன யாரு புள்ள இதெல்லாம் சொல்லச் சொன்னது. இப்ப பாரு. பூசை பாதியில நிக்கிது. ராசா வீட்டம்மா கோச்சிகிட்டு போனாப்ல தெரியுது. இனி உம் புருசனுக்கு வேலை அமைஞ்சா மாதிரி தான் போ.”

சுற்றி நிற்கும் ஊர் மக்கள் மருதம்மாவை ஏகத்துக்கும் ஏச வெல வெலத்துப் போகிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்கிறாள். கூட்டம் கலைந்து செல்கிறது.

கந்தன் மனைவி முத்தம்மா மட்டும் அருகே வருகிறாள்.
” இதப் பாருக்கா. இதெல்லாம் ஆவுற கதையா தெரியல. நம்ம சொல்லுக்கு எல்லாம் இங்க மதிப்பே இல்ல. ஏழைச் சொல் அம்பலம் ஏறாதுங்கறது எவ்ளோ சரியாப் போச்சி பாரு. பேசாம மாமி சொன்னாப்ல காசியண்ணணோடச் சேர்ந்து நீயும் கூட மாட ஏதாச்சும் வேலை செய்யுற வழியைப் பாரு. இனி சாமி விட்ட வழி.”

விசுவநாதய்யர் அவர் வேலையைப் பார்க்கப் போய்விட , ஒதுங்கி நின்ற மாமி மெல்ல மருதம்மாவிடம் வருகிறாள். ” டீ கொழந்த. நோக்கெல்லாம் விவரம் பத்தாது கேட்டியா. அவாளுக்கெல்லாம் ஆயிரம் வேலை இருக்கும். இதெல்லாம் நமக்குள்ள முடிச்சிக்கணும் . நான் அப்பவே சொன்னேன். நீ தான் கேட்கல… இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடல. என் தம்பி வீடு அடுத்த தெரு தான். அவன் வீட்ல கொஞ்சம் வேலை பாக்க ஆள் வேணும்னு ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்கான். நான் விலாசம் தர்றேன். போய் பாக்கறியா?”

அவள் பதிலேதும் சொல்லவில்லை. கடைசி முயற்சியும் தோற்றதில் ஒரு ஆயாசம். நம்பிக்கை இழந்து விட்டாள். இந்தப் பிஞ்சை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனக் கவலையுடன் வீடு திரும்புகிறாள் .
ஒரு வாரம் கழித்து கோயில் மகா சபைக்கு ஓலையொன்று வருகிறது. அதில் அரசாங்க முத்திரை இருக்கிறது. விசுவநாதய்யர் வாங்கிப் படிக்கிறார்.
” திருக்கோயில் மகா சபையோருக்கு. அரசரின் திருவாய் மொழி (நேரடி அரசாணை) ஆணையாவது . கோயில் நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் கீழ்க்கண்ட வயல்களில், உழவுத் தொழில் சார்ந்த பணி செய்யும் மக்கள் பணி செய்யும் வயல்கள் தவிர மீதமிருக்கும் காணி நிலங்களை மட்டும் மன்னர்பிரான் திருத்தமக்கையார் கொடுக்கும் திருவிளக்குக்கு நெய் அட்ட விற்றுத் தருமாறு பேரரசரின் ஆணை.
இவண்
வானவன் மூவேந்த வேளார்

ஓலையைக் கைக்கொண்டு சாத்தம்பியார் நின்று கொண்டிருக்கிறார். அவர் அரசரின் பணிமகன் .
மறுநாள் இந்த அரசாணை ஊரில் வாய்மொழியாகப் பரவுகிறது. அங்கே இங்கே சுற்றி காசி, கந்தன் காதுகளை வந்தடைகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மருதம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலுக்கு ஓடுகிறாள். தான் நின்று புலம்பிய இடத்தில் போய் நிற்கிறாள். முழு முச்சூடாக அலங்காரங்கள் பண்ணப்பட்டு ஈசன் கருணாசுவாமியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.
” வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும்
உனகழல் விடுவேனல்லேன்.”
விசுவநாதய்யர் கணீரெனக் குரலெடுத்துப் பாடிப் பூசையைத் தொடங்கினார்.


தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கருணா சுவாமி (வசிஷ்டேஷ்வரர்) கோயிலில் முதலாம் இராஜராஜனின் 17 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று இராஜராஜன் தமக்கை குந்தவை பிராட்டியார் கோயிலுக்கு நொந்தா விளக்கு கொடுத்த தகவலைக் குறிக்கிறது. அதில் மன்னரின் நேரடி ஆணையாக அந்த விளக்குக்கு நெய் அட்டும் செலவினங்களுக்கு பிராமணர்களுக்கு உள்ள காணிகளில் எந்தெந்த காணிகளில் பிராமணர் அல்லாதோர் வேலை செய்கின்றனரோ அந்த காணிகளை மட்டும் விட்டு விட்டு மீதமிருக்கும் காணிகளை விற்று கோயில் மகாசபையிடம் பணம் கொடுக்கும் படி கூறப்பட்டதாக உள்ளது.
தொல்லியல் துறை வெளியிட்ட அந்தக் கல்வெட்டுப் படி இதுதான்.

ஸ்வஸ்தி ஶ்ரீ திருமகள் பொல பெருநிலச்செல்வியு தனக்கெ உரிமைபூண்டமை மனக்கொளக் காந்ளூர்ச் சாலை கலமறுத்தருளி வெங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலை நாடும் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை நி (க)ழ ஈழமண்டலமும் திண்டிறல் வென்றி தண்டாற் கொண்டு தன்னெழில் வள(ர்) ஊழியுள்ளெல்லா வாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டெ செழியரை தெசுகொள்
ஶ்ரீ கொவிராஜ ராஜராஜகெசரி பன்மர்க்கியாண்டு யஎ ஆவது நித்த வினோத வளநாட்டு நல்லூர்நாட்டு ப்ரம்மசபையோம் ஶ்ரீ ராஜகெசரி சதுர்வெதி மங்கலத்து ப்ரம்மசபையொம் விற்ற நிலவிலை யாவணம் நம்மையுடைய சக்ரவர்த்தி ப்ராமண ஊர்களில் ப்ராமணர்க்கு கீழ்ப்பட்ட ஜாதிகளில் காணிகளில் பணிசெய்மக்கள் பணிசெய்காணி யொழிய நின்றார் காணி விற்க வென்றருளிச் செய்ய புக்க கெழ்விப்படி அதிகாரிகள் வானவன் மூவெந்தவெளார் அடைவு குத்துவித்து வரிசை (வி)ட்டபடி விற்றுக் காசு தண்டுக வென்றருளிச் செய்து உடையார் பணிமகன் சாத்தம்பியாரை எவ இச்சாத்தம்பியார் தண்ட மஹாசபையொம் விற்ற நிலவிலையாவணம் நம்முடைய சக்ரவர்த்தி ஶ்ரீபராந்ததெவர் திருமகளார் ஶ்ரீகுந்தவைப்பிராட்டியார் இந்நித்தவினோதவளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் புறம்படி வடவாற்றின் வடகரை கருந்திட்டைகுடி தெவர்க்கு திருநொந்தா விளக்கு வைய்ப்பதற்காக ஶ்ரீபராந்ததெவர் திருமகளார் ஶ்ரீ குந்தவைப் பிராட்டியார்க்கு மஹாசபையொம் விற்றுக்குடுத்த நிலமாவது….

  • சரண்யா சச்சிதானந்தம்
    கல்வெட்டு ஆர்வலர், தஞ்சாவூர்
Suvadu Book List
1 Comment
  1. Saraswathy says

    மிகச்சிறப்பான முயற்சி. அழகான பாடல் கோர்ப்பு. சிறப்பான விவரணைகள். வசனங்களில் இன்னமும் சிறிது கவனம் செலுத்தினால் மிகவும் சிறப்பாக அமையும். கோயில் கல்வெட்டு காணப்படும் இடம், புகைப்படங்கள் இணைத்தால் பயணப்பட உதவும்.

    வாழ்த்துக்கள் சரண்யா.

    சரஸ்வதி சுவாமிநாதன்

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More