ஐயாவின் கம்பு

8 522

கல்வெட்டுக் கதைகள் – 1

ஆக்கம்: சரண்யா சச்சிதானந்தம்

“மழக்காத்தடிச்சு வெள்ளம் வந்தா இந்த வீடும் கரைஞ்சிருமே ஐயா, என்ன பண்ணுவேன்..”.. பொன்னி ஓரமாக அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவளது வீடு சின்னஞ்சிறிய குடிசை. கனமான கீற்று தான். நான்கைந்து மழையைப் பார்த்து விட்டது. ஒழுகி ஒழுகி கீற்றின் வாசமும் தரையிறங்கி அவள் மெழுகி வைத்திருந்த சாணம் தெளித்த தரையின் வாசனையைக் கூட்டி இருந்தது. கூடவே கொஞ்சம் முடை நாற்றமும்..

” .ம்மா.. ஐயாவின் கம்பை எனக்குத் தர்றேன்னு சொன்னியே, எப்பமா தருவ.” வளவன் குளித்து முடித்து வந்து கேட்டான்.

பதினைந்து வயதுக்கே உரிய துடுக்கான மெல்லிய மீசை. அவனது ஐயா மணியனைப் போல் அத்தனை ஆஜானுபாகுவாய் வருவான் என்றெல்லாம் தோன்றவில்லை பொன்னிக்கு. தாயைப் போல பிள்ளை. இவள் கொஞ்சம் கட்டை .

வளவனின் ஐயா மணியன். வள்ளுவன் மாணிக்கன் மணியன்.. அந்த ஊர்க் காவற்காரர்களில் தலைமகன். 

அஞ்சு வருஷத்துக்கு முன்ன,  காட்டுக்கு காவலுக்கு போகும் போதெல்லாம் துரட்டிக் கம்பை வழி நெடுக தரையில் நிரடிக் கொண்டே போவான். அவன் தெருமுனையைத் தாண்டும் வரை பொன்னிக்கு அந்த நிரடல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். வேலைக்குப் போகும் கணவன்  கொண்ட பொறுப்புகள் ஒருவகையில் பெண்களுக்கு கொஞ்சம் பெருமிதத்தையும் தரவே செய்யும். ஊர்க்காவல் படைனா சும்மாவா. 

“ஏய் பொன்னி. அதென்ன உங்கூட்டுக்காரரு கம்பெடுத்து காவலுக்குப் போனா மட்டும் களுக்குன்னு சிரிச்சிக்குற. பழைய நெனப்போ .”

பக்கத்து வீட்டு மங்கா, நாரத வாய்க்காலுக்குப் போகையில் இடிப்பாள். சேர்ந்து போய் தான் குளித்து வருவார்கள்… நாரத வாய்க்கால்.. அங்கே தான் மணியனும் உச்சிப் பொழுதில் இளைப்பாற வருவான். அவர்கள் வீட்டிலிருந்து அந்த வாய்க்கால் சில நிமிடங்கள்தான். பொன்னியும் வந்து விடுவாள். கணவனுக்கு கஞ்சிக் கலயத்தோடு. 

ஏனோ மணியன் வெயில் சாயும் வரை வீட்டுக்கு வருவதை விரும்ப மாட்டான். மழையோ, புயலோ, வெயிலோ, நாள் முழுக்க அவனுக்கு ஊர் ஞாபகம் தான் நெஞ்சில் நிற்கும். காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது. பின்னே மணியடித்தாற் போல் வீட்டுக்கு வந்து உண்டுறங்க முடியுமா என்ன.?

அந்தக் கம்பு அவனுக்கு ஒரு பேராயுதம். துணை. வழிகாட்டி. சுமை தாங்கி. எல்லாம். ஊர்க் காவலர்களில் தலைவனுக்கு மட்டுமே கொடுக்கப் படும். மற்றவர்க்கு குறு வாள் மட்டும் தான். இவனும் வாள் வைத்திருப்பான். ஆனாலும் உறைக்குள் மறைந்திருக்கும். தேவைப்படுகையில் மட்டும் வெளியே வரும் . இதுவரை இரண்டு முறை வந்திருக்கிறது.

வளவனுக்கு அப்போது பத்து வயது. ஐயாவின் கம்பும்,  வாளும் இவனுக்கு ஐயாவின் அங்கங்கள் போலவே பரிச்சியமாகி இருந்தன. கம்பில்லாத ஐயா இவனுக்கு அந்நியம். உறங்கும் போதும் விரிப்புக்கு அருகில் வைத்திருப்பார். மணியன் உறங்கியதும் இவன் போய் தொட்டுப் பார்ப்பான். சொர சொர என்றிருக்கும். தரையில் தேய்த்துத் தேய்த்து முனை இன்னும் கூர்மையாக. “ ஒருவேளை ஐயாவுக்கு கூர்ப்பு பத்தலன்னு நிரடிகிட்டு போறாரா அம்மா ?” என்பான் பொன்னியிடம். அவள் சிரித்துக் கொள்வாள். மணியனோடு சேர்த்து அவ்வூரில் ஏழு பேருக்கு காவல் பணி .  நாளும் ஒவ்வொரு தெருவை ஒவ்வொருவர் காவல் காக்க வேண்டும். 

சீவல்லப மங்கலத்தில், வீர நாராயணர் கோயில் தெரு, கல்லுடைச்சான் தெரு, வண்ணார் தெரு, தேரடி வீதி, படைத் தெரு, கொல்லந் தெரு. இப்படி.

சன்னிதித் தெருவுக்கு மட்டும் மணியன் தான் ரெண்டு நாளுக்கு ஒருமுறை காவலுக்கு வர வேண்டும். அது அரசாணை. மீற முடியாது. அவன் மீறவும் விரும்ப மாட்டான். 

சன்னிதித் தெருவில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பூக் கைங்கர்யம் செய்வோர், நீராட்டுக்கு தீர்த்தம் கொண்டு வருவோர், சுவாமி புறப்பாட்டுக்கு அலங்காரம் செய்வோர் என அத்தனை பேரும் ஒருங்கே வாழ்ந்து வந்தார்கள்.

கருவறையில் வீற்றிருக்கும் சுவாமி வீர நாராயணர். பெயரிலேயே வீரம். நூறு வருசத்துக்கு முன்ன, பராந்தக வீர நாராயண ராசா இந்தக் கோயிலக் கட்டுனாருன்னு மணியனின் தாத்தா சொல்லுவாராம். மணியனை அந்தத் தெருவில் வாழ்பவர்கள் நித்தம் காவல் காக்கும் வீர நாராயணனாகவே கற்பனை செய்து கொள்ளலாம். அங்கிருப்பவர்கள் அத்தனை பேரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன் மணியன். 

முணுக்கென்றாலும் மணியன் பெயர் தான். ” மணியா.. தோ பாரு. தேரடியில நேத்து யாரோ பாம்பை கொண்டாந்து விட்டுட்டா . அது சர சரன்னு கோயில் வாசல்லயே ஏறிடுத்து. தெருவுல எல்லாரும் மணியா மணியா ங்கறோம். உன்னைக் காணல .” எனக் கடிந்து கொண்டார் கோயில் பட்டர். 

“. மன்னிக்கணும் சாமி. வாய்க்கா பக்கம் இருந்துட்டேன். பொன்னி கை மணத்துல ரெண்டு வாய் அதிகமாக் கொண்டுட்டேன். கொஞ்சமா அசதி. இனி சரியா வந்துடரேணுங்க.”

” பாழாய்ப் போச்சு போ. உண்ட மயக்கமா. ஒன்னு செய். நாளைல இருந்து பொன்னிய இங்கேயே கொண்டு வந்து தரச் சொல்லிடு.  தெனமும் பாம்ப தொரத்த நான் போயிட்டா யார் சுவாமியைப் பாக்கறது .?. வாஞ்சையும் லேசான கட்டளைத் தோரணையும் கலந்து சொன்னது போல் தான் இருந்தது மணியனுக்கு.

மறுநாள் முதல் பொன்னி அவள் பிள்ளை வளவனுடன் சன்னிதி தெருவுக்கே கஞ்சி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். 

“ஏன்டிம்மா பொன்னி. மணியனைக்  கொஞ்சம் அந்தக் கம்பை ஓரமா வச்சிட்டு வரச் சொல்லேன். கொழந்தேள்லாம் பயப்படறா ” என்றார் ஒரு மாமி.

“ஏன் மாமி. அவர் கம்பை கீழே வச்சுட்டா வர்ற பாம்பை உங்க வீட்டு மாமா அடிப்பாரா .” எனச் சொல்லிச் சிரிப்பாள்.

“ஏய் புள்ள. என்னதிது ஐயரூட்டம்மாட்ட வம்பு. ” என்பான் மணியன்.

” அட சும்மாருங்க. நாளைக்கே அவங்களுக்கு ஒன்னுன்னா நீங்க போய் நிக்க மாட்டீங்களா என்ன. போன வாரம் கூட பறை கொட்டுச்சே மறந்துருச்சா. வேணாட்டு ராசா குதிர மேல ஆளு கம்போட வாராராமே. நீங்க என்கிட்டக் கூடச் சொல்லல . அந்தம்மா தான் சொன்னாங்க. ” எனப் பொரிந்தாள். மணியனுக்கும் மனைவியிடம் சொல்லக் கூடாதென்ற எண்ணமெல்லாம் இல்லை. நித்தம் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும் அவள் கண்களில் கண்ணீரைப் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. 

கொடுத்த பொறுப்பை கையிலெடுத்து விட்டால் அவனை விஞ்ச ஆளில்லை…. அந்தக் கம்பைக் கையில் எடுக்கும் போதெல்லாம் செவிகளில் சென்ற சமரில் சாவின் விளிம்பைக் கண்டு வந்த மக்களின் குரல் ஒலித்த படியே இருக்கும்…. 

“எங்களைக் காப்பாத்த நீ தான்யா இருக்க… அந்தத் தைரியத்தில் தானே கோயில் பூசையே நடக்குது… “

செவிப்பறைகளில் இன்னும் அந்தச் சொற்கள்…

காவல் பணி என்பதென்ன…. ஆயுதம் ஏந்தி நிற்பதா… இல்லை.. மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பது… அச்சத்தைப் போக்குவது… ஊர் முழுதும் கண்ணுறங்க இரண்டே இரண்டு விழிகள் எப்போதும் விழித்திருக்கும் எனும் உத்திரவாதம்… அதை மணியனால் தர முடிந்தது.. மக்கள் நம்பினார்கள்… உயிரென்றும் பொருளென்றும் வந்து விட்டால் பேதங்கள் தங்கிடுமோ.. தடை தான் சொல்லுமோ… என்னாளும் கோயில் பூசைக்கு மணியனை அவர்கள் அழைத்ததில்லை… இவனும் கேட்டதில்லை… வீட்டுக்குள் அமரச் சொன்னதில்லை… அது அவனுக்கொரு பொருட்டாகவே இருந்ததில்லை… 

வேலையில் அர்ப்பணிப்பு என்பது தனக்குக் கொடுக்கப்படும் மதிப்பினால் வருவதா… வழங்கப்படும் ஊதியத்தால் வருவதா… சமூகம் வழங்கும் வெகுமதிகளால் வருவதா… இல்லை… அது மனத்தின் கண் ஒழுகும் ஒழுக்கத்தால் வருவது… செய்யும் வேலைக்கு உண்மையாய் இருத்தல் எனும் நேர்மையால் வருவது… இட்ட பணியை முட்டாக முடித்தல் ஒரு வாழ்வியல் கூறு.. அதை அனுபவித்தவர்களுக்கு ஒரு போதை… பாதை வழுவ மாட்டார்கள்.. புறக் காரணிகள் அவ்வொழுக்கத்தை குலைக்காமல் பார்த்துக் கொள்வார்கள்… அது மணியனுக்கும் இருந்தது… மாணிக்கத்தின் வெளிச்சம் போல்… 

…வேணாட்டுப் படைகளும் ஆய் நாட்டுப் படைகளும் சீவல்லப மங்கலத்தில் இதுவரை விளைவித்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதோ நாளை படையுடன் வந்து விடுவார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்குக் கண்ணாய் காவல் காக்கும் ஊரை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என மணியன் யோசித்துக் கொண்டே இருந்தான். பொன்னிக்குத் தெரிந்திருக்கக் கூடும். இம்முறை அவர்களது குறி கோட்டைகள் அல்ல. கோயில் தெருக்கள் என்று. 

ஓர் ஊரை அழிக்கப் பல வழிகள் உண்டு. விளைநிலங்களை அழிப்பது. கால்நடைகளை அழிப்பது. காவல் அரணை அழிப்பது.. அதே ஊரின் பெருமைகளை அழிக்க வேண்டுமென்றால் கலைகளை அழிப்பது. இலக்கியங்களை அழிப்பது. கலைஞர்களை அழிப்பது. 

எதிரிப் படைகள் இவை இரண்டையுமே செய்து விட்டன. மணியனின் குறு வாளுக்கு அந்த இரு முறைகளிலும் வேலை வந்தது. குறைந்தது நூறு இதயங்களையாவது அந்த வாள் கிழித்துப் போயிருக்கும். அதன் பின்னர் தான் கிடைத்தது தலைமைக் காவலன் பதவி. அந்தக் கம்பும். இம்முறை அவர்கள் கண் வைத்திருப்பது மக்களின் நம்பிக்கையை. வழிபாட்டை. விக்கிரகத்தை. கோயிலை சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் அழித்தொழிக்க சூளுரைத்திருக்கிறானாம் எதிரி நாட்டுத் தளபதி. கோயில் என்றால் கோயில் மட்டுமா. அது பொக்கிஷம். கோயில் பண்டாரங்களில் இருக்கும் நகைகள் மட்டும் பல கோடி பெறும். அது போக அரசாங்கச் சொத்துக்கள் கூட ஆங்காங்கே கோயில்களில் தானே பூட்டி வைக்கப் படுகின்றன. ஆண்டவன் இருக்கும் இடத்தை யாரும் நெருங்கி கைப்பற்ற மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்களோ என்னவோ. 

போர் முரசு கொட்டுகிறது. ஜனங்கள் இங்கும் அங்கும் சிதறி ஓடுவதைக் காண்கிறான். சங்கொலி கேட்கிறது. அது வீர நாராயணர் கோயில் சங்கல்ல என்பது மணியனுக்கு நன்றாகப் புரிகிறது. தூரத்தில் குதிரைக் குளம்பொலிகள். வந்துவிட்டார்கள்.

“.பொன்னி. நீ வீட்டுக்குப் போ. வளவனையும் கூட்டிட்டுப் போ. இந்தக் கம்புக்கும் வாளுக்கும் அடுத்த வேலை வந்து விட்டது ” என்கிறான் மணியன்.. அவள் போகவில்லை. எப்படிப் போவாள்? கணவனை சாக்காட்டில் விட்டு வீடு திரும்ப எந்தப் பெண் தான் நினைப்பாள்..? குதிரைகள் நெருங்கி விட்ட சத்தம். கோயில் பூட்டப் படுகிறது. ஓடுவதற்கு எத்தனிக்கையில் கத்தி முனையில் எதிரிகளால் நிறுத்தப்படுகிறார் கோயில் பட்டர். 

” பாவிகளா. எத்தனை முறை தான் ஊரைக் கொள்ளையடிப்பீங்க. உங்களால் எத்தனை உயிர் போனது. இன்னும் வெறி அடங்கவில்லையா. மிச்சமிருப்பது எங்கள் உயிர் மட்டும் தான்..” அழுகைக்கும் அச்சத்துக்கும் கோபத்துக்கும் இடையில் சன்னிதித் தெரு வாசிகள் கதறுகின்றனர்.  அனைவரும் வாள் முனையில் மண்டியிட வைக்கப் படுகின்றனர். மணியனைக் காவலர்கள் பிணைக் கைதி போல் எதிரி நாட்டுத் தளபதி முன் இழுத்துக் கொண்டு வருகின்றனர்.

“. அடேய். நீதானே சென்ற முறை எங்கள் வீரர்கள் நூறு பேரை நெஞ்சு கிழித்துக் கொன்னு போட்ட வீரன். எங்கே உன் கம்பும் வாளும். அதோ. ஏய். யாரங்கே. இவனைப் பிடித்து தூணில் கட்டுங்கள் ”.. தடுப்பதற்கு முன்னே பாய்ந்த பொன்னியும் வளவனும் பிடித்து இழுக்கப் பட்டு கோயில் மதில் சுவரில் தலை மோதத் தள்ளப் படுகின்றனர். இரத்தம் வழிய கீழே சரிந்து விழுகிறாள் பொன்னி. அருகில் வளவன் அழுது கொண்டே தந்தைக்கு நடப்பதைக் கண்ணுறுகிறான். 

தூக்கி வளர்த்த தந்தை யாருக்காக இப்படி சண்டையிடுகிறார்… தனக்காகவா… தன் அன்னைக்காகவா… இல்லை.. இல்லவே இல்லை… அவரை நம்பி இருந்த ஊருக்காக… இதோ இந்த சன்னிதித் தெரு மக்களுக்காக… இது மணியனை ஒருநாளும் சமமாய்ப் பார்த்ததில்லை.. தொட்டுப் புழங்கியதில்லை… இவையெல்லாம் பத்து வயது பாலகன் வளவனுக்குப் புரியாது தான்… ஆனால் ஒன்று புரியும்… கதறிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்களுக்காக அவர் கம்பேந்தி நிற்கிறார்.. மணியனின் கம்பு ஒரு கௌரவம்.. ஒரு நம்பிக்கை… அடையாளம்… அதைக் கையில் எடுத்துவிட்டால் எமனே வந்தாலும் சமர் புரிய வேண்டும் எனும் மறைமுக ஆணை.. ஒரு தார்மீகப் பொறுப்பு… பதவியில் இருக்கும் அத்தனை பேருக்கும் அது இருக்கும். இருக்க வேண்டும். 

காவலர்கள் நெருங்கும் முன்னே, மணியனைக் காக்க, அதுவரை பயத்தில் மண்டியிட்டு அமர்ந்திருந்த சன்னிதித் தெருப் பெண்கள் எழுந்து ஓடி வருகின்றனர். தளபதியின் கட்டளையை நிறைவேற்ற இடையூறாக வந்த பெண்களை எரிச்சலுடன் ஓங்கி அறைகிறான் ஒரு வீரன். சுருண்டு போய் மணியன் அருகில் விழுகின்றனர் அப்பெண்கள். அந்தப் பெண்களின் காதுகளில் மின்னும் பொன்னணிகளின் மீது அந்தப் படை வெறியர்கள் சிலரின் கண்கள் போகின்றன. 

மனைவி ஒரு பக்கம் மயங்கிக் கிடக்கிறாள். தனக்காகப் பதறி வந்த பெண்கள் இன்னொரு பக்கம் சரிந்து விழுகின்றனர் . மணியன் மூளைக்குள் தீப்பொறி பறக்கிறது. இரத்தம் சூடேறுகிறது. தன்னைச் சுற்றிக் கட்டி இருக்கும் தளைகளை திமிறிக்கொண்டு அறுத்தெறிகிறான். கை குறுவாளைத் தேடுகிறது. அது பத்தடிக்கு அப்பால் உருண்டு விழுந்து கிடக்கிறது.

எங்கே ஆயுதம்.. ஆ.. இதோ கம்பு.. பல நாள் இரவும் பகலும் காவல் காத்த கம்பு.. பொன்னிக்கு தான் எந்த சுகத்தையும் வாழ்வில் தந்து விடவில்லை எனினும் அவள் நினைத்து நினைத்துப் பெருமை பட்டுக் கொள்ள இருக்கும் ஒரே கம்பு. சன்னிதித் தெரு மக்களிடம் தனக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்த கம்பு. எழுந்து நின்று அந்த நீண்ட கம்பைக் கையில் ஏந்துகிறான். மாதண்ட நாயகன் போல். சிலம்பம் போல் மணியனின் கம்பு சுழல்கிறது. சுற்றி நின்ற வீரர்கள் இதைச் சற்றும் எதிர்பாராத வகையில் தலையில் அடிபட்டு தூரச் சென்று விழுகின்றனர். தளபதிக்கோ ஆத்திரம். 

“. ஏய் பதரே. இந்தப் பெண்களைக் காக்கவா என் வீரர்களை கீழே சாய்த்தாய். இதோ உன் கண் முன்னே இவர்கள் அத்தனை பேரின் தாலியும் காதும் அறுத்துத் தள்ளுகிறேன் பார்க்கிறாயா. உங்கள் ஊர் அழியும். பெண்கள் அழிவார்கள். ஆண்கள் அழுவார்கள். உங்கள் குடிப் பெருமை ஒழியும். பெருமை பேச ஒருவரும் மிஞ்ச மாட்டீர்கள். மிச்சம் இருப்பவர்கள் அறுந்த காதுகளோடு இருக்கும் பெண்கள் தான். அவர்கள் பாடுவார்கள் உன் புகழை. என்ன சம்மதமா.” என கர்ஜித்துக் கொண்டே சன்னிதித் தெரு பெண்களின் தாலியும் காதும் அறுக்கப் பாய்கிறான் எதிரி. 

இதுவரை எந்தப் படையானாலும் சன்னிதித் தெருவாசிகளைத் தொட்டதில்லை. மணியன் தொட விட்டதில்லை. முதன் முதலாக அப்பெண்களின் காதுகளும் தாலியும் அறுக்க வீரர்கள் பாய்வதைப் பார்க்கிறான்.. அவ்வளவு தான். இதற்கு மேல் பொறுமை காப்பது வீண் என முன்னே பாய்கிறான் மணியன். கையில் கம்போடும் நெஞ்சில் சினத்தோடும்.. இம்முறையும் வீரர்களை இவன் குறு வாளுக்கு இரையாகக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு வந்த தளபதி இம்முறை மாணிக்க மணியனைக் கொன்று விடத் துணிகிறான். அருகிலிருக்கும் வீரனின் ஈட்டியையும் தன் பெரு வாளையும் நேராக வந்து பாயும் மணியனின் நெஞ்சில் கூராக இறக்குகிறான். 

சுற்றி நின்றவர்களுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று விட்டது போல் இருந்தது. அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளும் முன்னே அடுத்த கத்தி மணியன் மேல் பாய்கிறது. மாற்றி மாற்றி வீரர்கள் அவனைச் சூழ்கிறார்கள். எத்தனை தூரம் அவன் உடலைக் கிழிக்க முடியுமோ கிழிக்கிறார்கள். வீர நாராயணன் சன்னதி முன்பு அந்த மாபெரும் வீரன் மரிக்கிறான். 

“ஐயய்யோ . ” அலறல் ஒலி நாற்திசைகளிலும் இருந்து கேட்கிறது. சன்னிதித் தெரு அன்று மணியனுக்காக அழுதது. தங்கள் குடிப் பெருமை காத்த வீரனுக்காக அழுதது. தாலி காத்த தங்கள் தளபதிக்காய் அழுதது. ஊர்க் காத்த கருப்பண்ண சாமிக்காய் அன்று பட்டர்கள் அழுதனர். அழுகை சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு பொன்னி கண் விழித்துப் பார்க்கிறாள்.. தாக்க வந்த கூட்டம் ஊரழித்து முன்னேறுகிறது. கணவன் அங்கே இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சி கண்டு திக் பிரமை பிடித்தவள் போல் சமைகிறாள். கையில் சிறு பாலகனாய் வளவன். செய்வதறியா நெஞ்சம் பதைக்கிறது. அழுகை முட்டி நிற்கிறது. யாரிடம் போய் முறையிடுவது. எங்கே போய் கேட்பது.  ஐயோ..

ஆண்டுகள் நகர்கின்றன. வளவன் வளர்கிறான். பொன்னிக்கும் மணியனுக்குமாக இருந்த ஒரே வீடும் எதிரி நாட்டுக் கயவர்களால் சூறையாடப் பட்டு பாழானது. கிடைத்த இடத்தில் குடிசை போட்டு வாழ்கையை ஓட்டினார்கள். தினமொரு வேலை. கிடைத்ததைச் செய்வாள். சில நாள் கூலி. சில நாள் சோறு. பல நாள் அதுவுமில்லை. 

மணியன் இத்தனை காலம் காத்த சன்னிதித் தெருவும் பாழாகி கயவர் கூட்டத்துக்கு இரையானது. மிச்ச மீதியை சுருட்டிக் கொண்டு வேறிடம் நோக்கி நகர்ந்தவர்களால் பொன்னி மேல் பரிதாபம் தான் பட முடிந்தது. ஆனாலும் மணியன் சாவு அவர்கள் மனதில் வெறுமையைக் கொடுத்திருந்தது.. ‘ஏதாவது செய்ய வேண்டும் ‘

எங்கோ ஒரு தூரத்தில் சிறு வெளிச்சம் . கோயில் சபை மறுபடி கூடுகிறது. மணியனின் சாவைத் தாங்க மாட்டாத ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு மனதாக முடிவு செய்கிறார்கள். “.மணியனுக்கு ஏதாவது செய்யணும்.”

என்ன செய்வது. “என் புருஷன் சண்டைல செத்துட்டார். எனக்கும் என் மகனுக்கும் இருக்க வீடில்ல .” என தானாகப் போய் சன்மானம் கேட்க பொன்னியின் தன்மானம் தடுக்கிறது. கணவன் விட்டுச் சென்ற கம்பு ஒன்றே ஊன்றுகோல் அவளுக்கு. மிச்ச வாழ்க்கையை ஓட்ட அது போதும். ஆனால் மகனுக்கு?

வளவனுக்கு இப்போது 15 வயதாகி விட்டிருந்தது. தந்தையின் தியாகமும் தாயின் கஷ்டமும் ஒரு சேர அவனை வாட்டிக் கொண்டிருந்தமைக்கு விடிவு வந்துவிட்டதென நம்பினான்.  ஓடினான் கூட்டத்தின் உள்ளே. . 

“ஐயா, என் பெயர் வளவன். மாணிக்க மணியனின் மகன். சன்னிதித் தெருவில் எதிரிகள் நுழைந்த போது அவர்களுடன் சண்டையிட்டு அதில் ஐயா  செத்தும் போனார். என் தாயும் நானும் இருக்க இடமின்றி குடிசைகளை மாற்றி மாற்றிக் கட்டி அதில் வாழ்ந்திருந்தோம். இப்போது அதுவும் மழையில் போய் விடும் போல் இருக்கிறது ” என்றான். நிலமோ, பொருளோ வீடோ அவன் கேட்கவில்லை. வாழ வழி காட்டுங்கள் என்பதை இதற்கு மேல் எப்படிச் சொல்வது.. கூட்டத்தில் ஒரு பெண் வளவன் பேசும் போதே தன் மாங்கல்யத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். கண்ணில் நீர் மல்குகிறது அவளுக்கு. பேச நா எழாமல் தழு தழுக்கிறது. 

மகாசபையோருக்குப் புரிகிறது. கோயிலையும் மக்களையும் காக்க நடந்த சண்டையில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த மணியன் பெயரில் பொன்னிக்கும் வளவனுக்கும் நிலம் வழங்கப்படுகிறது. அது கோயில் மகாசபை கொடுக்கும் நிலம். வீர நாராயணர் மண்ணையும் பெண்களையும் காத்தமைக்கு மணியனின் உதிரத்திற்கு கிடைத்த பரிசு. ” உதிரப் பட்டி தானமாக ஸ்ரீவல்லப மங்கலத்து திருவரங்கநேரியில் மணியன் குடும்பத்தாருக்கு நிலம் தந்தோம். இதை கோயில் கருவறைச் சுவற்றில் கல்லில் வெட்டுக..” , என்றது ஊர்ச் சபை.

“ஏம்மா.. எவ்ளோ நேரம் கேட்டுட்டே இருக்கேன். எப்பம்மா ஐயா கம்பை எனக்குத் தருவ?” 

மகனின் குரலால் சுய நினைவு வந்தவளாக பொன்னி நிகழ் காலத்திற்கு வருகிறாள் . 

“ உங்கையா சம்பாதிச்சு வச்சுட்டுப் போனதென்னவோ நல்ல பேரு தான். ஆனாலும் அதை வச்சு ஒழுகும் குடிசைல எவ்வளவு நாள் தான் இருப்பது. நமக்கு கிடைச்சிருக்கே நிலம். அங்க ஒரு வீட்டைக் கட்டுவோம். நீ வளர்ந்து கட்டுவ. அது எனக்குத் தெரியும். தம் பொஞ்சாதியை மவன் நல்லா பாத்துக்குறான்னு உங்கைய்யா ஆவியும் சாந்தமாகும். அப்போ வந்து கேளு. தர்றேன். “

*******

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை இராஜகோபால சுவாமி கோயிலில் சோழ மன்னர் முதலாம் இராஜராஜனின் 25 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று .. இராஜகோபால சுவாமி கோயில் (அப்போதைய சீவல்லப மங்கலத்து) மகா சபையோர்  அண்டை நாட்டுப் படைகள் ஊருக்குள் நுழைந்து பிராமணர்களை படைக்களத்தில் அழித்தும், பிராமணப் பெண்களை தாலியும் காதும் அறுத்தும் ஊரழிப்போம் என வந்தனர்.

அப்போது வள்ளுவ குலத்தைச் சேர்ந்த மாணிக்கக் மணியன் (கவறை இகற்சி மயில் ஒப்பன் என்றும் அழைக்கப்பட்டவர்) எதிரிகளோடு சண்டையிட்டு பிராமணப் பெண்கள் தாலியும் காதும் அறுபடாமல் காத்து, உயிர் நீத்துள்ளார்.

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் இறந்த வள்ளுவன் மாணிக்க மணியன் குடும்பத்திற்கு ஶ்ரீ வல்லப மங்கலத்து மகா சபையோர் கூடி முடிவு செய்து நிலம் வழங்குகின்றனர். போரில், சண்டையில் நாட்டைக் காக்க, நாட்டு மக்களின் நலனைக் காக்க இறந்த வீரர்களுக்கு கொடுக்கப் பட்ட நிலங்களுக்கு ‘ உதிரப்பட்டி ‘ எனப் பெயர்.

வள்ளுவ குலத்தைச் சேர்ந்த ஒருவர் பிராமணர் குலத்தைச் சேர்ந்த மக்களின் நலன் காக்க உயிர் விட்ட தகவல் தமிழகத்தில் வேறெங்கும் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை நாம் கண்டிராத புதுச் செய்தி. முதன் முதலில் அதை ஆய்வாளர் தொ. பரமசிவன் தனது ‘ பாளையங்கோட்டை வரலாறு ‘ நூலில் பதிவு செய்திருக்கிறார். 

சுவடு பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட தொ.ப. ஆய்வுலகம் முழுத்தொகுப்பிலும் இந்நூல் இருக்கிறது.

இக்கதை அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவு. 

  • சரண்யா சச்சிதானந்தம், கல்வெட்டியல் ஆர்வலர், தஞ்சாவூர்
8 Comments
  1. சரஸ்வதி சுவாமிநாதன் says

    மிகச்சிறப்பான முயற்சி. கல்வெட்டுக்கள் பலவற்றை இப்படி சிறுகதைகளாக ஆக்கும் முயற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு தேடலை, பயண ஆர்வத்தைத் தூண்டும். இதற்கு முயற்சித்த சகோதரிக்கும், வெளியிட்ட சுவடுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல கதைகள் வெளிவந்து தொகுப்பாக மலரட்டும்.

    சரஸ்வதி சுவாமிநாதன்

    1. Saranya says

      நன்றிகள் ஐயா. மேலும் பல கதைகள் எழுதும் முயற்சியில் இருக்கிறேன்.

  2. சரஸ்வதி சுவாமிநாதன் says

    கல்வெட்டுக்களை கதையாக்கல் ஒரு நல் முயற்சி அதனை துவக்கி வைத்திருக்கும் சகோதரிக்கும், கதையை வெளியிட்ட சுவடுக்கு் எனது அன்பும் நன்றியும்.

  3. Krishnakumar says

    கல்வெட்டு செய்தியை கொண்டு அருமையான புனைவு ,மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள், சிறப்பு!!! வாழ்த்துகள் சரண்யா!!!

    1. Saranya says

      மிக்க நன்றி.. வாய்ப்பிருந்தால் நெல்லை பாளையங்கோட்டை செல்லும் போது இந்தக் கல்வெட்டைக் கண்டு வாருங்கள்

      1. Krishnakumar says

        Interesting sure will try

  4. Rasal says

    வள்ளுவ குல மாணிக்க மணியன் வரலாற்றை ‘ஐயாவின் கம்பு’ சிறுகதை மூலம் மிக அழகாக வடித்துவிட்டீர்கள்; மனதில் பதித்துவிட்டீர்கள். வரலாற்றை கதையோடு சொல்லும் போது அது மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதை நிறைவாக… அழகாக… சிறப்பாக செய்துவிட்டீர்கள். ‘குறுவாளை விட கம்பு சிறந்தது தான்’, ‘வேலைக்கு உண்மையாக இருத்தல் தான் சிறப்பு’, ஊரின் பெருமைகளை அழிக்க கலைகளை அழிப்பது, இலக்கியங்களை அழிப்பது, கலைஞர்களை அழிப்பது என மனதை ஈர்க்கும் வரிகள் 👌👌👌 ‘மணியனின்’ இறப்பு என்னையும் வெறுமை அடையச் செய்தது. தொடர்ந்து ‘கல்வெட்டுகள்’ களமிறங்கட்டும் 🌹🌹🌹

    1. Saranya says

      மிக்க நன்றி.. மகிழ்ச்சி

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More