முதிரா இரவு

7 573

சிறுகதை: சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு, உடல் உபாதையை முடிச்சுட்டு, செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பெட்டை நாய்க்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு, பேச்சுத் தோரணை. இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பாத்துட்டு ஓய்வு பெற்றவர்கள். அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு, உலகப் பேச்சு. சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயி குளிச்சிட்டு சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய? வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு, பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு. மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தபெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும், மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்க, திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு. ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும்.

இதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா?

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கணும். பெத்த பெருமாள் “ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்கு இல்ல”ன்னு முனங்கினார் பல நேரம்.

“யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை? உனக்கு எப்படி, அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும். நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ஒரே மாவுல சுட்ட இட்லிபோலத்தான்”னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லாரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

“அறுபத்தைக்கும் எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு. பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல. ராஜேந்திரன்னு சொல்லுயா”ன்னு அய்யனாரைக் கேட்க,

“பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல? போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா… அப்படித்தான் சொல்லுவார். ஒரே சிரிப்பொலி. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல, ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களைவிட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும் தென்றல் காத்தும் கனமான இதயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு போனது. எல்லாரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்லைக் கடிச்சுக்கிட்டு சுகதுக்கங்களை மறைத்து, மறந்து, பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை. மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால் ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல.

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகைநட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லாருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கைமுறை வேறு.  இவர்களின் உலகம் இலையுதிர்க்காலத்து மரம்போல. எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என “உறவுகள்” இருக்கிறார்கள், கோலார் தங்கச் சுரங்கம்போல. ஆனால் மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் பறந்து போன கூட்டைத் தேடும் குருவிபோல. உறவுகளைத் தேடுகிறார்கள், இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே. யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது. இளைப்பாறுதல் இல்லா மனநிலையில், முதியோர்களின் பயணம்.

“என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா?”

“என்ட்ட ஏன் கேட்குறீங்க?”

“நீதானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்?”

“சும்மா இருக்கமாட்டீங்க புலவரே..”

“அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க? கேரளாவும் கர்நாடகாவும்.. நல்ல பாம்பு அது; விரியம் பாம்பு இவுக. நமக்குப் பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டா பகுதிக்கும் தேவைப்படும்போது தண்ணியத் தரமாட்டாங்க. ஆனா, அங்க மழை சக்கப்போடு போடட்டும். அய்யோ, டேம பாதுகாக்கிறோம்ன்னு சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால் தண்ணியத் தொறந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.”

“புலவரே ஆனா.. பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேரா கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான். என்ன இஞ்சினியர் சார்? நம்ம, ஆம்பளப் பிள்ளையும் பொம்பளப் பிள்ளையும், கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க.”

“எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க? என்னை வம்புல மாட்டிவிடுறீக” என்று இதயராஜ் சொல்லவும் பெத்த பெருமாள்,

“புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அது அவுக நிலை. இது நம்ம நிலைமை.”

கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போயின. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார்.

“நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?”

“யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்… அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க.”

“நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு.. அய்யனார் நீங்க போயிட்டு வாங்க” என்று மாணிக்கம் முடித்தார்.

என்ன.. எல்லாப் பிள்ளைகளுக்கும் அம்மாவைப் பிடிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்கு. பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்தில தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம். பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி, தானா விலகிறவுகளும் இருக்காங்க. முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனா, பலர் பித்துப் பிடித்துப்போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்க பெரும் பேச்சு, நோயும் மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா? மாத்திரைக்கும் டாக்டருக்கும்தான் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும், சிரிப்ப விலை கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. அவுககிட்ட காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க. ஆனா, சிரிப்பு வரணுமே…

மதுரை – திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது. மாதா கோயில் மணி அடித்தது.

“நேரம் சரியாக ஆறுமணி. எல்லாரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன் (யாத்தி.23-26) ஆமேன்… ஆமேன்…”

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பிய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சு புறப்பட ஆரம்பித்தது. மீண்டும் ஹாரன் சத்தம்… ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு. ரயில் புறப்பட்டுவிட்டது.

“என்னய்யா, மணி ஆறாச்சு. இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கோம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.”

பழைய பி.ஆர்.சி.யில செக்கரா இருந்தவர் பெத்த பெருமாள்.

“சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது?”

“எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது? உங்களுக்கு என்ன?”

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

“என்னங்க சார் கொசுக்கடிக்காதா?”ன்னு கேட்டேன். அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்,

“பேரப் பிள்ளைக தராத முத்தத்த கொசுவாவது கொடுக்கட்டும்”ன்னு சொல்லவும், எல்லாரும் கொல்லுன்னு சிரிக்க, எனக்கு ஏன்டா கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக்கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக, வயதான அப்பா அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்டமாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் களைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒன்னாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக் கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா. மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில வாழ்க்கை. பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா சேராது தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னு தவளை தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி, இல்ல வா மேட்டுக்குன்னு தவளய கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு. தண்ணி தவளைக்கும் ஓந்தி மேட்டுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.

 தயிர்ப் பானையில விட்ட மத்தாட்டம், எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கின. ஆனால் யாரும் வெண்ணை எடுக்கல. வெயில் ஏறிப் போனால் மோர்ப் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின.

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம, மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. ‘மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துல போட்டாலும் அளந்து போடுங்க’ – இதுதான் சொல்லியிருப்பாரு.

“இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு. எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல” மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா. “யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் வீட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாம”

“இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே?” இது அம்மா. அம்மாவும் மகளும் அப்பனுக்குக் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“வந்தமா பேசுனமா இருந்தமானு போகவேண்டியதுதானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லிப் பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர. அங்க உங்க பருப்பு வேகாது. யார் அப்புராணி? எம் புருஷன்தானே கிடைச்சாறா?”

“ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.”

“யம்மா, உங்க காலக் கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்டா மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.”

“அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…”

“சரிம்மா, நா போன் போடும்போது சொல்லி வைக்கிறேன்.”

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா, டிபன் கேரியர்ல நாலு எருவாட்டி சப்பாத்தின்னு இருக்கும். பணம் கட்டியாச்சு.  அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும். வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது. தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா, நாய் மோந்து பாத்துட்டு காலத் தூக்கிட்டுப் போகும்.

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லார்ட்டையும் பேசிச்சிரிச்சு சாப்பிட்ட நாட்கள் இனி வருமா? வரும், ஏதாவது விசேஷக் காலம்ன்னா. வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துடா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து. உனக்குப் புண்ணியமா போகட்டும்.

கரையான் கட்டுன புத்துல கருநாகம் குடியேறுனது கணக்கா, மெத்தையில படுத்தா தூக்கம் வரமாட்டேன்னுது. நாம வாங்கிய வரம், இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே, தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னு காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேல தூக்கம் பிடிக்கமாட்டேங்குது. வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு. இரவு நீண்ட இரவாப் போச்சு”ன்னு பெத்தபெருமாள் தனக்குத்தானே மெல்ல மனசுக்குள் பொளம்புறார்.

  • சுருளி காந்திதுரை
Suvadu Book List
7 Comments
  1. Dr S Bharani says

    முதிரா இரவுகள், முதியோரின் துயரங்களைத் தங்கு தடையின்றி காற்றாற்று வெள்ளமாய் எடுத்துரைத்த உள்ளார். குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர்களை முதுமையின் விளிப்பில் புறக்கணிப்பதும் அவர்களை வீட்டில் ஒரு பொருளாகவே நினைத்து புறக்கணக்கும் நிலையை ஆசியர் பதிவு செய்த விதம் அருமை

  2. முதுமையில் தனிமை கொடுமையானது. பணி ஓய்விற்குப் பிறகு குறிப்பாக ஆண்களின் வாழ்க்கைப் பயணம் காலை மாலை நேரங்களில் நடை பயிற்சியில் கழிந்தாலும், மற்ற நேரங்களை கழிப்பது பெரும்பாடு என்பதை இச்சிறுகதை முன் வைக்கிறது. வாழ்வின் எதார்த்தத்தை உனர்த்துகிறது. பேராசிரியர் காந்திதுரை ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  3. Dr.R.THIEVANATHAN says

    இன்றைய சமகால முதியவர்களின் வாழ்வியல் எதார்த்தத்தை மிக நுட்பமாக விவரிக்கிறது இக்கதை. வசதியிருந்தும் நகரவாழ்வில் முதியவர்கள் மனச்சுமையோடுதான் இருக்கிறார்கள் என்பதை படைப்பாளர் உலகுக்கு எடுத்துரைக்குக் பாங்கு சிறப்புக்குரியது. எதார்த்த நடையோடு கருத்துச் செறிவு மிக்க கதையாக முதிரா இரவு கதை அமைந்துள்ளது. படைப்பாளிக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்

  4. Dr.Muthusamy Arunagiri says

    முதிரா இரவு எனும் சிறுகதையை வாசித்தேன். அன்று இரவு முழுவதும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது இக்கதை.எனது வாழ்க்கையை இக்கதை பிரதிபலித்ததாகவே உணர்ந்தேன். எனது நடைப்பயிற்சியின் போது என்னொத்த நண்பர்களுக்கு அனுப்பி வாசிக்கச் செய்தேன்.. அப்போது அவர்கள் கூறியது: நம்போன்றோர் மனநிலையை ஆசிரியர் நுண்ணிதின் விளக்கியுள்ளார். வயதான காலத்தில் பணம் மட்டும் மகிழ்ச்சிப்படுத்துவதில்லை.நாம் நம் குழந்தைகளிடம் எதிர் பார்க்கும் ஆறதலான உரையாடலும்,அவர்களது அண்மையில் தானே நம்மை வாழ்விக்கும் .அது கிடைக்கவில்லையே நமக்கு என்ற பேச்சு மேலோங்கி இருந்தது. உரையாடலில் கலந்துகொண்டோர் சமுதாயத்தில் பல நிலைகளில் இருப்போர்.ஆனைவர் மனதையும் ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது இச்சிறுகதை. கதாசிரியர் சு.காந்திதுரையின் நடை,அவர் பயன்படுத்தியுள்ள உவமைகள் அனைத்தும் அவரை பக்குவப்பட்ட கதாசிரியராகவே காட்டியது.எங்களது மனம்நிறைந்த வாழ்த்துகள் சு. காந்திதுரை அவர்களுக்கு!

  5. Dr.Muthusamy Arunagiri says

    முதிரா இரவுகள்

  6. K. Indrani says

    முதிரா இரவுகள், அன்றாட அனுபவம் தீராத நித்திரை.

  7. ம.ஹரிகிருஷ்ணன் says

    ஐயா, வணக்கம். மிகவும் அருமையான சிறுகதை, வாழ்த்துகள் , நன்றி

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More