ஒரு மரணத்தின் கதை

2 1,321

சிறுகதை: ஆண்டன் பெனி

நான் தவசி தாத்தா. இன்னைய தேதிக்கு ரொம்பப் பழைய மனுச உசுரு. ஏன்னா, எனக்கு இப்போ நூத்தி அம்பத்து நாலு வயசு ஆகுது. நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம். இந்த வயசுக்கும் என்கிட்ட கணக்கு இருக்கு. பென்சன் புக்கையும் வேலைக்குச் சேர்ந்த ஆர்டரையும் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு இவ்ளோ வயசு ஆகுதுன்னு நிரூபிக்க, இன்னைய தேதிக்கு என்கிட்ட இருக்கிற ஆதாரம் அது ரெண்டும்தான். இதைத் தொலைச்சிட்டேன்னா, நான் உசுரோட இருக்கிறதுல அர்த்தமில்லங்கிறதும் உண்மை. வாரிசுபோல கூடயே இருக்குதுங்க. ஆறேழு தலைமுறைக்குப் பிறகும் உசுரோட இருக்கிறவனுக்கு, ஆதரவுன்னு ஒன்னு வேணுமில்ல? அதான்.

இதுபோக, நாலு வேட்டி சட்டை, ரெண்டு துண்டு, ஒரு தகரக் கட்டில். இதுவும் எப்பவோ வாங்கினது. என் நேரம்னு நெனைக்கிறேன், இன்னமும் பழுதாகாமக் கெடக்கு. இந்தத் தலைமுறை சனங்களுக்கு என்னையப் பத்தித் தெரிஞ்சதெல்லாம், கீழ்வீட்டுத் தாத்தா, இல்லனா காரை வீட்டுத் தாத்தா. நூறு வயசு முடிஞ்சி ஒரு பத்து வருசம் வரைக்கும், நான் பரபரப்பாத்தான் இருந்தேன். வேடிக்கை பார்க்க வர்றதும் பேட்டி எடுத்துப் போடுறதும்னு ரொம்பப் பரபரப்பாவே இருந்தேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நின்னுடுச்சி. இப்பவும் யாராவது பார்க்க வர்றாங்கன்னாலும், அடிக்கடி இல்ல. வீடே கதின்னு ஆகிருச்சி. வீட்டுக் கூரையும் எப்படி இன்னமும் விழாம இருக்குதுன்னு தெரியல. பக்கத்துல இருக்கிற வீடுகளும் பெருசு பெருசா வளர்ந்திருச்சி. இடிச்சிட்டு, புதுசா கட்டணும்னு தோனினது. பிறகு எதுக்குன்னு விட்டுட்டேன்.

எனக்கு படிப்புன்னு எதுவுமில்ல. ஆனாலும் கவர்மெண்ட் வேலை கிடைச்சது. பெரிய வேலைன்னு நினைக்க வேண்டாம். வெள்ளைக்காரத் துரைக்கு விசிறிவிடுற வேலை. அப்போ உடம்பு சும்மா கிண்ணுன்னு இருக்கும். கையும் காலும் இரும்புத்தூண் மாதிரின்னு சொல்லுவாங்க. அதனாலயே வேலை கிடைச்சது. தொடர்ச்சியா என்னால ரெண்டு மணி நேரம் விசிறிவிட முடியும். துரைக்கும் என் வேலை ரொம்ப பிடிச்சிப் போயிருச்சி. ஆபீஸ் வேலை மட்டும்தான். அதுவும் துரை ஆபீஸ்ல இருந்தா. வெளியில, வெளியூருக்கெல்லாம் கூட்டிட்டுப் போறதில்ல. ராயல் கமிசன்னு ஒன்னு, அரசாங்க வேலையில இருக்கிற எல்லோருக்கும் பென்சன்னு சொல்லிருச்சி. அப்படித்தான் எனக்கும் இந்தப் பென்சன் வருது. வெள்ளைக்காரங்க நாட்டைவிட்டுப் போனதுமே பென்சன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கத்துக்கு மனு மேல மனுப்போட்டு மினிமம் பென்சன் வாங்கினேன். துரைமாருங்க வீட்லயே இருந்ததால, கொஞ்சமா இங்கிலீசு வார்த்தைகள் தெரியும். பென்சன் பணம் ரெண்டாயிரத்துச் சொச்சம்னாலும் அப்பப்ப அதுக்கு அரியர்னு ஒன்னு கொடுப்பாங்க. அதுல வந்த காசுலதான் இந்த வீட்டு வேலைகளைச் செய்ய முடிஞ்சது. ரெண்டு துணிமணிகளும் வாங்கினேன். ஆனாலும், எனக்கு முன்னாடியே இந்த வீடு ஆயுச முடிச்சுக்கும்போல. இந்த வீடும் இல்லனா, இச்சி மரத்தடியிலதான் சின்னதா குடிசை போட்டு இருக்கணும். எனக்குன்னு யாரு வீடு கட்டிக்கொடுப்பா? இல்ல, வீட்டுலதான் சேத்துக்குவாங்க? இதுக்குப் பிறகு கட்டின எத்தனையோ வீடுக இப்ப இல்ல. என்கூடவே ஆயுச முடிச்சிக்கணும்னு இருக்குதுபோல. இப்ப கட்டுற கட்டடங்களுக்கு ஆயுசே அம்பது அறுபது வருசம்தான்கிறாங்க. இந்தக் கூரை எந்தலையில விழுந்துதான் ஆயுசு முடியும்னா, அத யாரால மாத்த முடியும்?

சாப்பாட்டுக்குப் பென்சன் பணமே போதும். என்ன பெருசா சாப்பிடப் போறேன்? காலையில ராயல் டிபன் சென்டர்ல ரெண்டு இட்லி, ஒரு காபி. மதியம் அளவு சாப்பாடு. ராத்திரிக்கி எதுவும் சாப்பிடுறதில்ல. மதியச் சாப்பாடு செரிமானம் ஆகுறதுக்குள்ள விடிஞ்சிரும். நிறைய சாப்பாடுக் கடைகள் ஊருல இருந்தாலும் ரொம்பக் காலமா எனக்கு இதே கடைதான். அறுபது வருசம் முன்னாடி பொன்னாத்தா இட்லிக் கடைன்னு இருந்தது. காலம் மாற, சரவணன் சிற்றுண்டிக் கடைன்னு மாறி, இப்போ ராயல் டிபன் சென்டர்.  சாப்பிடுறதுக்கு உயிர் வாழ்றேனா, உயிர் வாழ்றதுக்கு சாப்பிடுறேனான்னு தெரியல. வேகமா நடக்க முடியலனாலும் மெதுமெதுவா குச்சிய ஊனிக்கிட்டு இச்சி மரத்துக்கு வந்துருவேன். வீட்டுக்கு வெளியில எனக்குன்னு இருக்கிறது இந்த மரமும் சாப்பாட்டுக் கடையும். கடைக்கு லீவு விடுறதுன்னா, மொத நாளே சொல்லிடுவாங்க. அன்னைக்கு மட்டும் வேற கடை. இச்சி மரத்துலேருந்து பெரிய அளவுல நிழல் இல்லனாலும் ஓய்வு நேரங்கள்ல ஊர்கூடி நிக்க அதவிட்டா வேற வழியும் இல்ல.

இதுக்கு முன்னால ஊர் மந்தைவெளியில ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சி. பெருசுனா அப்படியொரு பெருசு. ஒரு சின்ன மழைக் காத்துக்கே விழுந்திருச்சி. அப்ப எனக்கு ஒரு எழுபது எழுபத்தஞ்சி வயசிருக்கும். அது இருந்தவரைக்கும் வெயில்தாழ சிறுசு பெருசுகெ எல்லாரும் அங்கதான் கெடப்பாங்க. ஒரு தெரு நீளத்துக்கு இருக்கும். ஊர் பஞ்சாயத்துலேருந்து சிறுசுகெ விளையாடுறதுவரைக்கும் அது நிழல்ல ஆளரவம் இருந்துக்கிட்டே இருக்கும். அது இல்லேன்னு ஆனபிறகு, வேற கதியில்லாம இந்த இச்சி மரத்துல கெடக்க வேண்டியதாப் போச்சி. ஆலமரத்தை நினைக்கும்போதெல்லாம் என் உசிர சாய்க்க அதுமாதிரி ஒரு சின்ன காத்து மழைதான் வரும்போலன்னு நினைச்சுக்குவேன்.  

எனக்கு சாவு பயம் அதிகம். தூங்குற நேரம் தவிர, சாவு நினைப்புதான் எப்பவும். சாவு பயத்தையும் தாண்டி எனக்குன்னு இருக்கிற வேலை, சாப்பிடப் போக வேண்டியது, முடிச்சிட்டா திண்ணையில உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியது, தூங்க வேண்டியது.  ஆரம்பத்துல என்கிட்ட, அந்தக் காலத்துப் பழைய கதைகளைக் கேட்டவங்களுக்கு, இப்ப நல்லது கெட்டது எல்லாமே போன்ல கிடைக்க, என் பக்கம் யாருமே வர்றதில்ல.

எப்போ பேசுறதுக்குக்கூட எனக்கு யாரும் இல்லனு ஆச்சோ, அப்பவே எனக்கு சாவு பயம் போயி, இதுக்கு மேலயும் இருந்துதான் ஆகணுமான்னு மனசு நினைக்கத் தொடங்கிருச்சி.  

வெறுமனே எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக்கிட்டே எப்படி இருக்கிறது? ஒரேமாதிரியா வாழ்க்கை போகுதுனாலும், பெருசா உடம்புக்கு முடியாமப் படுத்ததில்ல. உடம்பு சூடா இருக்குதுன்னு தெரிஞ்சாலே, ஊர் நர்சம்மாகிட்ட மாத்திரையும் மருந்தும் வாங்கிக்குவேன். அம்பது வருசமா அதே மாத்திரைதான். போட்டுட்டு படுத்தா நாள் முழுக்க படுத்தே கிடப்பேன். எங்க பெருசு நடமாட்டம் இல்லயேன்னு, ஒருநாளும் யாரும் கதவத் தட்டி என்னான்னு கேட்டதில்ல. செத்தா பொண நாத்தம் அடிக்குமில்ல, அப்பப் பாத்துக்கலாம்னு இருப்பாங்கபோல.

த்தன வயசுவரைக்கும் உசுரோட இருக்கிறது எம்மாம் பெரிய ஆச்சர்யம்ங்கிறது ஒரு பத்துப் பதினைஞ்சி வருசத்துக்கு முன்னமே முடிஞ்சிருச்சி. தவறாம பத்திரிக்கைக்காரங்க வர்றதும் டி.வி.காரங்க வர்றதுமா இருந்தது. மெடிக்கல் காலேஜ்காரங்ககூட என்னயக் கூட்டிட்டுப் போயி ஒருமாசம் வச்சி ஆராய்ச்சி பண்ணினாங்க. என்ன கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல, கொண்டுபோன கார்லயே திரும்பக் கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. வெளிநாடு, வெளிமாநிலக்காரங்களுக்கும் கண்காட்சிப் பொருளா இருந்த காலம் கடந்திருச்சி. இப்ப அவங்களுக்கும் நான் சலிச்சிப்போக, ஊரு உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இப்பெல்லாம் நானொரு வேண்டாத உசுரு. அவங்களுக்கெல்லாம் என்னோட சாவுக்குக் காத்திருக்கிற மாதிரி ஒரு பார்வை. சாதாரணமா கடந்து போயிடுறாங்க. அதனாலயே, நானே என்னை ஒரு அதிசயமான உசுரா பாக்கிற மனநிலை குறைஞ்சிக்கிட்டே போயி, இப்போ அப்படி எதுவும் இல்லேங்கிற நிலமைக்கு வந்திருச்சிங்கிறது என்னவோ உண்மைதான்.

ஆறு புள்ளைங்கள பெத்தேன்.  அதுங்களும் இல்ல, அதுங்க பெத்தது, அதுங்க பெத்ததுங்க பெத்ததுன்னு, ஒரு ஆறேழு தலைமுறைகூட இந்நேரம் கடந்திருக்கும். வாரிசுகள்ல யாருமே எழுபதைத் தாண்டல. எம்புள்ளைங்க காலத்துலயே, சின்ன மகன் தவிர மத்தவங்க, படிப்பு வேலைன்னு வெளியூர், வெளிமாநிலம்னு போயித் தங்கிட்டாங்க. நல்லது கெட்டதுன்னு வர்றப்போ பாக்கிறதுதான். பொறவு பேரன் பேத்திகெ நெனப்புல இருந்தது, அதுங்களுக்குப் பொறந்ததுகெ யாரையுமே நான் பார்த்ததில்ல.  சின்ன மகன் செத்த பிறகு, அவன் புள்ளைங்களும் வேலை அது இதுன்னு வெளியெடம் போயிட்டாங்க. அததுகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நம்ம கிளை எதுன்னு கண்டுபிடிக்கிற பொறுமை யாருக்கு இருக்கப்போகுது? தேடவும் அப்படியென்ன தேவை?  பாவம், இந்தக் கிராமத்துல வந்து என்ன செய்யப் போகுதுகெ? ஊரும் கிராமத்துக்கான அடையாளத்த தொலைச்சி, கிட்டத்தட்ட டவுன் மாதிரி ஆகிருச்சி. ஏரியில தண்ணி பார்த்து வருசமாச்சி. ஆறு இருக்கா இல்லையான்னே தெரியல. சாயங்காலமானா ஒரு மணி நேரத்துக்கு பறவைங்க அடையுற சத்தமே அப்படி சந்தோசமாயிருக்கும். இப்ப அப்படி எதுவுமே இல்ல. வெளியூருக்குப் பொழைக்கப் போன சனங்க ஒன்னு கூடுறதுக்குன்னு இருந்த திருவிழாவும் இப்ப இல்ல. ஊரு ரெண்டுபட்டதுல போட்ட பூட்டு, இன்னும் கோயில் நடைவாசல்ல தொங்குது.

நானும் எந்தக் காரியத்துக்கும் தெருக்குள்ள போறதில்ல. வீடு, வீட்டவிட்டா இந்த மரம். சாவுக் காரியத்துக்குப் போனா, சிறுசுகெ, பொணத்தைப் பார்த்துட்டு, ‘அடுத்து நீதானே’ங்கிற மாதிரி என்னையப் பாக்குதுகெ. கல்யாணக் காரியங்களுக்குப் போனா, ’எங்கே நடுவாலே நான் செத்து, நல்ல காரியம் கெட்டிருமோ’ன்னு பயப்படுறாங்க. வருசா வருசம், உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்கப் பென்சன் ஆபீசுக்குப் போனா, ’அடுத்த வருசமும் வருவியா தாத்தா’ன்னு கேக்கும்போது கஷ்டமா இருந்தாலும், எதுவும் சொல்லாம திரும்பி வந்துருவேன். சாவுக்குப் பயந்த எனக்கு, நாளும் ஒருத்தராவது சாவை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்துறாங்க. நான் வேண்டாம்னு ஒதுக்குன சாவு, இப்ப எங்கயோ தூரமா போயிருச்சி. இவங்க கேக்குறாங்கன்னு சுயமாவா சாகமுடியும்?

னக்கு வெவரம் தெரிஞ்சதலேருந்து சாவுன்னா பயம். சாகாமலே இருந்திடணும்னு நெனப்பேன். அப்படியே செத்துட்டாக்கூட, ஒரு நூறு எறநூறு அடி ஒசரத்துல ஆவியா மெதந்துக்கிட்டு, இங்க நடக்குற எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கணும்னு ஒரு யோசனை இருக்கும். சொந்தமா செத்துப் போறவங்கள நினைச்சா ஆச்சர்யமா இருக்கும், ‘ஏன் இப்படி பொசுக்குன்னு போயிடுறாங்க? திரும்பி வரவே முடியாதுன்னா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்?’னு.

ஒருகட்டத்துல சாவு பயம் அதிகமாகி, சைக்கிள்ல போறதயும் நிறுத்திட்டேன். சைக்கிள்ல போறதே அப்டீன்னா, கார், பஸ் இன்னும் பயம். நூறு வயசத் தாண்டும் முன்னாடியே “தாத்தா, உம்மோட உசுர, எமன் மொளகா வத்தல் பானையில வச்சிட்டானோ?”ன்னு ஊர்க்காரங்க பேசும்போது கோவம் வந்தாலும் ’போங்கடே’ன்னு வெரட்டி விட்டுருவேன். எதிர்பார்க்க ஆயிரம் விசயம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு, நான் எப்ப சாவேன்னு காத்துக் கெடக்குதுங்க சவங்கெ.

நடமாட்டம் இருந்தா, நமக்குத் தேவையானத நாமே செஞ்சிக்கிட்டா, வயசானவங்கள யாரும் பாரமா நினக்கிறதில்லதானே? அதுலயும், பென்சன் பணம் வந்ததால யாரும் என்னய அப்படி நினைக்கல. மருமகெமாருங்க அப்படி இப்படின்னு பேசினாலும், மகன்களும் மகள்களும் என்னைய எப்பவும் விட்டுக் கொடுக்கல. அதுலயும், மூத்த மருமகனுக்கு நான்னா அம்புட்டு இஷ்டம். ‘மாமா மாமா’ன்னு கைக்குள்ளயே இருப்பாரு. ஊருலேருந்து வரும்போது எனக்குன்னு தீனி வாங்கியாருவாரு. புள்ளைங்க, மருமகன் அளவுக்கு, பேரப்பிள்ளைங்ககிட்ட பாசத்தை எதிர்பார்க்க முடியாதில்ல? ஆனாலும், அதுங்க எம்மேல பாசமாத்தான் இருந்தாங்க. அப்பெல்லாம் இந்த போனு அது இதுன்னு வரல. ஊர்ல யாருமே டிரெங்கால் போனைக்கூட பாத்ததில்ல.

னுசனாப் பொறந்துட்டா, சார்ந்தவங்கன்னு யாராவது இருக்கணும். உறவுன்னு பெருசா இல்லாட்டியும் தெரிங்சவங்கன்னு யாராவது இல்லாம எப்படி வாழ்றது? வீட்டுக்கும் ஓட்டலுக்குமா என்ன இது வாழ்க்கை? இந்த ஊரும் முன்ன மாதிரி இல்ல. எல்லா வீடுகளும் மெத்த வீடுகளா மாறிடுச்சி. வயர்ல மாட்டிக் கெடந்த போனு, சின்னதா எல்லார் கையிலயும் வந்திருச்சி. படம் பார்க்குறாங்க, பேசுறாங்க. எனக்கும் அப்படி ஒன்னு வாங்க ஆசைன்னாலும், யார்கிட்ட பேசுறது? யாரு எங்க இருக்காங்கன்னே தெரியல. ஆயிரம் தலைமுறைக்கு முந்துனவங்கள எங்க தலைமுறைன்னு பீத்திக்கிறாங்க. இங்க என்னடான்னா, நாலஞ்சி தலைமுறையையவே என்னால தேட முடியல. அதுங்களும் என்னைத் தேடி வரல. என்னோட வாரிசுகளுக்கும் இப்படி ஒருத்தன் இருக்கேன்னு தெரியல. எத்தனை டிவி, எத்தனை பேப்பர்ல வந்தது?! எத்தனை வெளிநாட்டுக்காரங்க வந்து பாத்துட்டுப் போனாங்க?! ஆனாலும் என்னைச் சொந்தம்னு சொல்லி ஒருத்தர்கூட வரல. ஒருவேள பெரிய சொத்துபத்து வச்சிருந்தா அல்லது சீமை ராசாவா இருந்திருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ?!

அரசியல் மாறிடுச்சி, வாழ்க்கை முறை மாறிடுச்சி, இயற்கையும் மாறிடுச்சி. மழைக் காலம்னு ஒன்னு இருக்கிற மாதிரியே தெரியல. ஆலமரத்த சாய்ச்ச மழைக்காலம், அதுக்குப் பிறகு ஏன் இல்ல? கடல் தண்ணிய குடிதண்ணியா மாத்திட்டா, இனிமே மழையே தேவையில்லையோ? இதெல்லாம் நான் சொன்னா, ’வெள்ளைக்காரனுக்கு விசிறி போட்டவனுக்கு எதுக்கு இம்புட்டுப் பேச்சு’ன்னு சொல்லிடுவாங்க.

 ‘நான் இன்னும் ஏன் உசுரோட இருக்கணும்?’ வெறும் சாப்பாட்டுக்கும் இச்சி மர நெழலுக்கும் இந்த உசுரு இருக்கிறது தேவைதானா? பேச்சுத் தொணைக்குக்கூட ஆள் இல்லாத வாழ்க்க. எதிர்ல பார்த்தா, நல்லா இருக்கீங்களான்னு கேக்காத இந்த வாழ்க்க, இதுக்கு மேலயும் வேணுமான்னு தோனுது. இந்த இச்சி மரமும் எப்போ விழும்னு தெரியல. அதுவும் முடிஞ்சதுன்னா, வீடே கதிதான். மரம் விழுறதுக்கு முன்னால நான் போயிடணும்.

சாவுக்குப் பயந்ததுக்கு, இந்த இயற்கை என்னைய வாழவச்சி இப்படியொரு தண்டனைய எனக்குக் கொடுத்திருக்கும்னு நெனைக்கிறேன். உடம்பு ஒத்துழைக்காததே, இப்படி நெனைக்க வைக்குதான்னா, திடகாத்திரமா இருந்தா மட்டும் என்ன ஆகிடப் போகுது? இந்தத் தலைமுறையோட வாழ்க்க முறைக்கும் அவங்க பழக்கவழக்கத்துக்கும் என்னால ஈடுகொடுக்க முடியல. பெரிய வசதியுள்ளவனா இருந்தாலும் என்னோட இணக்கமா இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? என்னை அப்புறப்படுத்திட்டு, இருக்கிற சொத்தை அபகரிக்க அவங்களுக்கு எவ்ளோ நேரம் ஆகும்? இத்தனை வருசத்துல எத்தனை பார்த்திருப்பேன்?! சொத்துக்காகவும் பணத்துக்காகவும் கூடப் பொறந்தவங்கள, பெத்தவங்கள கொன்னு போட்டவங்கள. எதுவுமில்லாத என்னைய மாதிரி ஆளுங்களைக்கூட இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுற வாய்ப்பிருக்கு. நாலு காசு பணம் இருக்கிறவன, ‘எப்போ சாவான், இருக்கிற சொத்தைப் பங்குபோடலாம்’னு காத்திருந்தவங்கள எனக்குத் தெரியுமே.

நூறு வருசம் ஆயுசுங்கிறது போதும்னு நானே விட்டுருக்கணும். அதுக்குமேலயும் உசுரோட இருக்க ஆசப்பட்டிருக்கக் கூடாது. நூறு வயசுல சாவுங்கிறத, கல்யாணச் சாவா கொண்டாடித் தீர்த்திருப்பாங்க. இப்போ செத்தா, எடுத்துப்போட ஆள் வருவாங்களான்னு தெரியல. பஞ்சாயத்து வண்டியில் தூக்கிப்போட்டு, ஆறுக்கு மூனு குழிகூட இல்லாம, தலை மறைஞ்சாப் போதும்னு பொதச்சிட்டு வரலாம். பதினாறாவது நாள் காரியத்துக்கும் ஆளில்ல. செத்தாப் போதும்னு ஆனபிறகு, பதினாறாவது காரியம் எதுக்குன்னும் நினைக்கலாம். இந்த உடம்ப, அப்படியே நாயிக்கும் நரிக்கும் கொடுத்திற முடியாதே. கல்லறைகூட வேணாம். தலை கை கால் தெரியாம பொதச்சி, பதினாறாம் நாள் பால் தெளிக்க நமக்குன்னு ஆளிருக்கும்போதே செத்துப் போயிடணும்.

தனியா இருக்கிறதால, நடுராத்திரியில தூக்கம் கலைஞ்சிட்டா, சாவுதான் கண்ணு முன்னால வந்து நிக்குது. புள்ளைங்க அல்லது பேரப் புள்ளைங்களைத் தாண்டி, உசுரோட இருக்கிறது இயற்கைக்குப் புறம்பானதா இப்ப நினைக்கிறேன். நான் வெறுத்த அந்த சாவு, இப்ப வந்தா பரவால்லனு தோனுது. அதுவும், தூக்கத்துல சாவு வரணும். தூங்கத்துலேருந்து எழுந்திருக்க முடியாம செத்துப் போயிறணும். ஊர் ஆலமரம் செத்தது மாதிரி, வலியில்லாம செத்துருக்கணும். இந்த வாழ்க்க போதும்னு நினைச்சதும் நானே விழுந்திருக்கணும். அழுகறதுக்கு ஆள் இல்லாத சாவு என்ன சாவு?

தூக்கத்துல சாக முடியலன்னா, யாரு மடியிலயாவது, யார் கையப் பிடிச்ச மாதிரியாவது செத்துடணும். என்னோட அப்பா நாப்பது வயசுல செத்தப்போ ஊரே அழுதுச்சு. ஆனா, தாத்தா செத்தப்போ அப்படியில்ல. வீடு அழுதாலும் ஊர் சனங்க நாலு முகத் தேர் கட்டி, ஆட்டமும் பாட்டுமா கொண்டுபோய்ச் சேத்தாங்க. ஏன்னா, வாழ்ந்து முடிச்சி, இதுக்கு மேல வேண்டாம்னு செத்தாரு. அவருக்கு இருந்த போதும்ங்கிற மனசு, எனக்கு ஏன் இல்லாமப் போச்சுன்னு தெரியல. யாருக்கும் சாகப் பிடிக்காதுன்னாலும், தானா வரும்போது சரி வர்றேன்னு தாத்தா போனாரு. எனக்கு ஏன் அப்படித் தோனல?

இப்ப அந்தத் தெளிவு வந்த மாதிரி இருக்கு. யாருக்கும் பயன்படாத, ஏன் எனக்கே பயன்படாத இந்த உசுரு எதுக்கு? ஆலமரம் கடந்தும், எதுக்கு இந்த இச்சி மரத்தோட ஒட்டியிருக்கு? இச்சி மரம் விழுந்த பிறகும், இந்த வீடும் விழுந்த பிறகும், நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போறேன்?

எப்போதும் ராத்திரியில சாப்பிடுற வழக்கம் இல்லாத எனக்கு, இன்னைக்கு அதிகமா பசிக்குது. கடைக்குப் போய் வழக்கத்தவிடவும் அதிகமா சாப்பிட்டேன். சாப்பாட்டுக் காசோட சேத்து, மிச்சமிருந்த பணத்தையும் கல்லாவுல வச்சேன்.  ’ஏன் தாத்தா’ங்கிற மாதிரிப் பாத்தான். உனக்குத் தேவைப்படும்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இன்னைக்கு நடுராத்திரியில எழமாட்டேன்னு நம்புறேன். இப்பவே உடம்புக்கும் உசுருக்கும் இருந்த பிடிமானம் நழுவுற மாதிரி படுது. அந்தப் பிடிமானம் இன்னைக்குத் தூக்கத்திலேயே முழுசா நழுவிட்டா நல்லது. நழுவிடும்.

  • ஆண்டன் பெனி
2 Comments
  1. கவிஞர் ழகரம் says

    அருமை

  2. B. Vimaladevi says

    அருமை …. அருமையான கதை
    சிந்திக்க வைத்த களம் தேர்வு..

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More