அரச விருந்தாளி

2 293

நகைச்சுவைச் சிறுகதை

முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன்.

மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார்.

அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார்.

“நீதானே நண்டு ராக்கப்பன்?”

“நீதானே பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்?”

“மரியாதை இல்லாம பேசக்கூடாது”

“நீ மட்டும் பேசலாமா?”

“சரிங்க நண்டு சார். விஷயத்துக்கு வருவோம்…”

“வந்துக்க”

“12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் போனாயா?”

“போனேன்”

“போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன டானாக்காரருக்கு மீசையும் நாமமும் வரைஞ்சு விட்டியா?”

“சமத்தா நின்னார். மீசையும் நாமமும் வரைஞ்சேன்”

“போலீஸ்காரர்னு உனக்குத் துளியும் மரியாதை இல்லை”

“சரியா வரையாம விட்ட மீசையை எச்சில் துப்பி அழிச்சேனே… அதைச் சொல்றீங்களா? நான் மீசையும் நாமமும் வரைஞ்சதை அந்தப் போலீஸ்காரர் செமத்தியா என்ஜாய் பண்ணினார் தெரியுமா?”

“அடுத்து என்ன பண்ணின? ஸ்டேஷனுக்குள்ள திமுதிமுன்னு எருமைமாடு மாதிரி புகுந்த”

“ஆமா… எவ்வளவு நேரம் வெளிவாசல் டானாக்காரர்கிட்டயே நிக்றது? உள்ளே நடந்தேன்”

“கொண்டு வந்த மீன் கழிவுகளை ஸ்டேஷனுக்குள்ள விசிறியடிச்சே”

“அஞ்சு கிலோ இருக்கும். கழிவுகளைக் கொட்ன பிறகு ஸ்டேஷன் பூராவும் கலீஜான நாத்தம்.. மீன் மார்க்கெட் அட்மாஸ்பியரை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வந்திட்டேன்ல்ல..”

“அட்ரோஸியஸ்..”

“டைரக்டர் அட்லி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..”

“ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மரியசூசை ஓடிவந்து, ‘ஏய்யா மீன் கழிவுகளைக் கொட்டின?’ அப்டின்னு கோபமா கேட்டார்”

“பழைய ரயில் கரி இன்ஜின் போலப் புசுபுசுத்தார்”

“அவரை நீ என்ன பண்ணின?”

“அவரை மடிலபோட்டு ரோரோன்னு கொஞ்சினேன்”

“பொய்.. அவரைத் தாறுமாறா அடிச்சு, சட்டையைக் கிழிச்சு, தலைமுடியைப் பிய்ச்சு, அவர் மூஞ்சில சாணிய அப்பிட்ட… இன்ஸ்பெக்டர் ஐஸியூல இருந்து போன வாரம்தான் டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்டேஷன் ஆளுக வந்து உன்னையும் இன்ஸ்பெக்டரையும் விலக்கிவிடலைன்னா இன்ஸ்பெக்டர் அடி தாங்காமச் செத்திருப்பார்”

“என்னை ரொம்பப் புகழாதிங்க பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்”

“நீ வெளிவாசல் டானாக்காரரைத் தொந்திரவு பண்ணினது, இபிகோ 353 பிரிவின்படியும் இன்ஸ்பெக்டரைத் தாக்கிக் கொல்ல முயன்றது இபிகோ 307 பிரிவின்படியும் குற்றம். இதோட உன் க்ரைம் நின்னுச்சா? இல்லையே…”

“எதையும் அரைகுறையா செய்றது என் பழக்கமில்லை”

“ஸ்டேஷனுக்குள்ள இருந்த பெண் போலீஸைக் கட்டியணைச்சு இங்கீலிசு முத்தம் கொடுத்திருக்க.. பெண் போலீஸிடம் அத்து மீறி, பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணின. அந்தப் பொண்ணு வாங்கின முத்தத்தோட தப்பிச்சு ஓடிருச்சு”

“அந்தப் பொம்பளை போலீஸ் எனக்குப் போதிய ஒத்துழைப்புத் தரல… ரேப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“பணியில் இருந்த பெண் போலீஸைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இபிகோ 376 பிரிவின்படி ஏழுவருடக் கடுங்காவலுக்குரிய குற்றம். பெண் போலீஸின் கழுத்துச் செயினைத் திருடினாய். இது இபிகோ 511 பிரிவின்படிக் குற்றம்..”

“அந்தப் பெண் போலீஸ் மாடு கட்டுற கயிறு மாதிரி இருந்துச்சு. அந்தச் செயினை விலைக்கா வாங்கிப் போட்டிருக்கும்? லஞ்சம் வாங்கித்தான் போட்டிருக்கும். அதான் லஞ்சப் பொருளைப் பறிமுதல் பண்ணினேன்…”

“உன் அடுத்த க்ரைம்.. எழுத்தர் மேஜைக்கு ஓடி அவரின் கம்ப்யூட்டரை உடைத்தாய். அவரின் மேஜையிலிருந்த கோப்புகளைக் கிழித்துப் போட்டாய்..”

“போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லேன்னா ஆட்டோமாட்டிக்காக குற்றங்கள் குறைஞ்சிடும். ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டான். நேஷனல் பெர்மிட் லாரிக்காரன்கள் நிம்மதியா லாரி ஓட்டுவான்க. நடைபாதை வியாபாரிகள்கிட்ட கோயில் யானை மாதிரி பிச்சை கேட்பது நின்றுவிடும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்காது..”

மாஜிஸ்டிரேட் குறுக்கிட்டார்.

“விட்டா நீதிமன்றங்களும் தேவை இல்லைன்னு சொல்வ போல…”

“நீதிமன்றங்கள்ல நேர்மை இருந்தா சாமானியர்களுக்கு எளிமையா நீதி கிடைச்சிரும். ஆனா அதனால நமக்கென்ன லாபம் மொதலாளி? இதுல தொழில் ரகசியம் என்னன்னா.. கி.. கி.. கி..”

உசிலைமணியைப் போலவே மிமிக்ரி செய்து நீதிபதியை நக்கல் அடித்தான் ராக்கப்பன்.

“உன் பேச்சு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971இன் பிரிவு 2(சி), உன் துர்நடத்தைக்குத் தகுந்த தண்டனை தரும்”

பப்ளிக் பிராஸிக்யூட்டர் தொடர்ந்தார்.

“காவல்நிலையப் பணிகளைச் செய்ய விடாதது, காவல்நிலைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை இபிகோ 425இன் படி குற்றம்”

“குற்றம் குற்றம்னு ஏன் பினாத்றீங்க?” கத்தினான் ராக்கப்பன்.

“இதோட குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனின் குற்றங்கள் முடிவடையவில்லை. லாக்கப் ரூம் சாவியை எடுத்துத் திறந்து, லாக்கப்பில் இருந்த ஆறு கைதிகள் தப்பித்து ஓட உதவியிருக்கிறார்”

“உங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா ராக்கப்பன்?”

“ஒத்துக்கிட்டா அவார்டா தரப் போறீங்க?”

“நேரடியான பதில் தேவை…”

ராக்கப்பன் சார்பாக வாதாடும் வக்கீல் எழுந்தார்.

“யோவ் தேங்காமூடி வக்கீல்… நீ எனக்காக வாதாடி இன்னும் தண்டனையைக் கூட்டிராத. கம்னு உக்காரு”

மாஜிஸ்டிரேட் ஒருகணம் யோசித்தார்.

“மிஸ்டர் பிபி, அக்யூஸ்ட்டின் நடவடிக்கைகள் முழுக்க மனநிலை பிறழ்ந்த ஒருவரின் நடவடிக்கைகளாகத் தெரிகிறது. நாம் ஏன் இவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது?”

“ஏய் ஜட்ஜு.. யாரைப் பாத்து மென்டல்னு சொன்ன? நீதான் மெண்டல். நான் நல்லாத்தான் இருக்கேன்.. என்னால வேணுமின்னா பத்து பேரு மெண்டல் ஆவானுக”

“போலீஸ் உன்னை அடித்தார்களா?”

“அவனவன் பொண்டாட்டிக மேல இருந்த கோவத்தை என்னை அடிச்சுத் தீர்த்துக்கிட்டான்க. நான் வடிவேலுமாதிரி. என்னை ஆயிரம் அடி அடிச்சாலும் நல்லா இருந்துச்சு மசாஜ்னு எந்திரிச்சு வந்திருவேன்..”

“உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது”

“நான் பரிதாபப்படச் சொன்னேனா? நீ உன் வேலையப் பாரு மாஜிஸ்..”

“உன் தண்டனையைக் குறைக்கலாமா?”

“எதுக்கு? இபிகோ என்ன சொல்லுதோ அந்த தண்டனைகளை என் மீது விதிச்சிட்டுப் போ..”

மாஜிஸ்டிரேட் தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

“இபிகோ 353, 376, 425, 511 மற்றும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி)இன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனுக்கு மொத்தமாக 17 வருடக் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை…”

“டாங்ஸ் மாஜிஸ் செல்லாக்குட்டி”

“உனக்கு அப்பீல் செய்ய அவகாசம் வேண்டுமா? சொந்த ஜாமீன் தரட்டுமா?”

“அய்ய.. நேரா என்னைப் புழலுக்கு அனுப்பு அம்மணி..”

***

புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்தான் ராக்கப்பன்.

“என்னய்யா… நுணலும் தன் வாயால கெடும் என்பதுபோல, குற்றங்களை எல்லாம் பெருமையா ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு வந்திட்ட?” என்றார் வார்டன்.

“நான் போட்டு வைத்த ஜெயில் திட்டம் ஓகே கண்மணி” பாடினான் ராக்கப்பன்.

“என்னது.. திட்டம் போட்டியா?”

“ஆமா.. திட்டம்தான். மூன்று வேளை ராஜ உணவு- வாரத்திற்கு ஒரு புது சினிமா- மாதம் ஒருமுறை மனைவியுடன் மூன்று மணிநேரம்- செல்போன் இன்கம்மிங் கால் வசதி- ஆறுமாதத்துக்கு ஒரு வாரம் பரோல்- ஏசி அறை ஈரோப்பியன் கிளாசெட்டுடன். சிறைக்குள் கிடைக்கும் வசதி வாய்ப்பெல்லாம், மாதம் நாப்பதாயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்காது. தினம் மீன்வெட்டிச் சுத்தப்படுத்திக் கொடுத்தா பிச்சைக்காசு இருபது முப்பது ரூபாதான் கிடைக்கும். அதனால திட்டம் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, வெரைட்டி வெரைட்டியா க்ரைம் செய்து கைதாகிவிட்டேன். அடுத்த 15-18 வருஷத்துக்கு நான் மாமியார் வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை.. செம என்ஜாய் கரோதான்”

வார்டன் தோள்களைக் குலுக்கி அங்கலாய்த்தார்.

“அட கிறுக்குப் பயலே.. எனி ஹவ், அரச விருந்தாளிக்கு என் கண்ணிய வரவேற்பு..”

வெல்கம் ட்ரிங்க்காகக் கொடுக்கப்பட்ட மட்டன் சூப்பைக் குடித்தபடி கண் சிமிட்டிய ராக்கப்பன் சொன்னான்,

“சுதந்திர தினத்திற்கு பீஃப் பிரியாணி போட்ருங்க..”

  • ஆர்னிகா நாசர்
Suvadu Book List
2 Comments
  1. Anita Srikanth says

    உண்மைலயே சிறை அப்டி சொகுசா இருக்கும் போல..
    அதான் தப்பு செஞ்சிட்டு உள்ள போனவுங்க சாப்டு சாப்டு சொகுசா இருக்காங்க போல..
    நகைச்சுவையாய் உண்மையை சொல்லி இருக்கார் எழுத்தாளர்…

    படிக்கும்போது ஏனோ மணிப்பூர் நிகழ்வுகள் மனசுல வந்து போகுது…

  2. Anita Srikanth says

    சட்டங்களும் தண்டனைகளும் கடுமையா இருந்திருந்தா ராக்கப்பன் ஒழுங்கா மீன் வெட்டிட்டு இருந்திருப்பான்…
    நகைச்சுவை கதை இல்ல..
    வேதனை படவேண்டிய கதை…

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More