பருந்து – நூல் விமர்சனம்

0 334

மனங்களைக் கொத்திப் பறக்கும்  பருந்து

வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால் இன்னும் யாரோ ஒருவரின் அரவணைப்புக்காக, தலை கோதலுக்காக ஏங்கும் சிறு குழந்தையாகவே இருக்கிறான். அந்த மனத்தின் முகம், அவனுக்கே நெருங்கிய அல்லது பிரியப்பட்டவர்களன்றி வேறு யாருக்கும் தெரிவதில்லை. அம் மனவெளியங்கும் ஏராளமான நிராசைகளும் ஏக்கங்களும் தவறிய ஒன்றின் குற்ற உணர்ச்சிகளுமே நிரம்பிக் கிடக்கின்றன. நிகழ்காலத்தில் அதில் முடிந்தவற்றை நிகழ்த்திக்கொள்கிறான்; முடியாதவற்றை வேறு ஏதேனும் செயல்களின் மூலமாக நிவர்த்தி செய்ததாக நினைத்து ஆசுவாசமடைந்துகொள்கிறான்.

பருந்து சிறுகதைத் தொகுப்பு முழுக்க ஆசைகளாலும் கனவுகளாலும் வாழ்வை எதிர்கொள்ளும் எளிய மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள்.

கதைகளை, மனிதர்களின் சுற்றங்களையும் தலையாய பிரச்சனைகளையும் வைத்துக் கட்டமைக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதனுக்கே முக்கியத்துவம் இருக்கும். அதில் அவனுடைய முக்கியமான பிரச்சனைகள் மையப்பட்டிருக்கும். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அப்படி பெரிய பிரச்சனைகளை மையப்படுத்துபவை அல்ல. ஒன்று நிகழ்வதற்கு முன், நிகழ்ந்த பின் அல்லது நடந்துகொண்டிருக்கும்போது அவனுக்குள் நேர்மறை, எதிர்மறையாகக் கிளை பரப்பும் எண்ண ஓட்டங்களை வெளிச்சமிடும் தொகுப்பாக இருக்கிறது. மனத்தின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதால் உளவியல் ரீதியாக இது நிஜம்தானே என்கிற கருத்தில் வாசகன் உடன்படுவான்.

மொத்தமாகப் பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பத்திற்கும் மேற்பட்ட கதைகள் பெண்களை மையப்படுத்தியவை. கையில் சிறு பொருளொன்றை எடுக்கும்போது அதன் தரத்தையும் வடிவமைப்பின் நுணுக்கத்தையும் பெரும்பாலானவர்கள் பார்க்கிறோமெனில் இந்த கதைகள் அந்தப் பொருளுக்கு பின் உழைத்த யாரோ ஒரு கடைநிலை ஊழியனின் பாடுகளை, உளச் சிக்கலைப் பேசுபவை. பல கதைகள் பால்யத்தின் நிராசைகளை வைத்தும் சில கதைகள் சம்சாரி வாழ்வையும் பேசுகின்றன.

தள்ளாத வயதில் மகன்களால் கைவிடப்பட்ட கரிச்சான் என்கிற சவரியடிமைக்கு தன்னுடைய முதல் காதலியின் மரணம் அவ்வளவு சோகமாக முடிகிறது ‘கரிச்சான்’ கதையில். ‘உடைமரக்காடும் அவளது வெட்டுக்கத்தியும்’ கதையில் அத் தம்பதிக்கு சொந்த வீடு கனவாகவே கலைகிறது. ‘ஆம்பக்காய்’ கவிதா யாருக்கும் எதற்கும் பயப்பட்டுவிடாமல் நம்மோடு நெஞ்சை நிமிர்த்திச் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.

’நெகிழி கனவு’ இவ்வனைத்திலிருந்தும் மாறுபட்ட கதை. ஒருவன் தன் அன்றாடத்தைக் கூடக் கழிக்க முடியாத சூழலில் எவ்வாறு தடுமாறிப் போகிறான் என்பதை அவனுடைய காலைக்கடனின் வாசனையோடு வாசகன் முடிப்பதாக இருக்கிறது. நாம் பார்க்கும் யாரும் இப்படி ஒரு பேரவஸ்தையை அனுபவிக்கக் கூடாது என ஒவ்வொரு வாசகனும் நினைக்க கூடும்.

அமுதா ஆர்த்தி விரிக்கும் புனைவுலகு இதுதான் தொடக்கமென்றும் இதுதான் முடிவென்றும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாததாக இருக்கிறது. பல கதை மாந்தர்களுக்குப் பெயர்கூட இல்லை. கொண்டாடுவதற்கும் நிராகரிப்பதற்குமான இடைக்குவியல் இது.

அவர்கள் அவர்களாகவே அகமனதிலிருந்து உரையாடத் தொடங்கிவிடுவதால் அடையாளக் குழப்பங்கள் இல்லாமல் போகிறது. ஆஹா ஓஹோவெனப் புகழ்வதற்கும் ஒன்றுமற்றதெனப் புறந்தள்ளுவதற்கும் இடையேயான அகத்தின் உணர்வுக் குவியல்கள் இக்கதைகள்.

அமுதா நாஞ்சில் நிலத்துக்காரர். ஆகவே கதைகளில் விரியும் நிலம் நாஞ்சிலின் வழக்குமொழியில் இனிக்கிறது. பெரிய சோகத்தை, வலியைத் தராதவை இந்தக் கதைகள். எதிர்பாராத முடிவுகள் இல்லை. ஆனாலும் நெஞ்சப்பரப்பில் உறுத்திக்கொண்டிருக்கும் கசடாகத் தொடர்ந்தபடியே வருபவை. இது இவரின் முதல் தொகுப்பு எனினும் அனைத்துக் கதைகளும் ஆனந்த விகடன், காலச்சுவடு, கணையாழி, அம்ருதா, பேசும் புதிய சகதி ஆகிய இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றவையே.

முதல் தொகுப்பிலேயே எளிய மனங்களை உள்ளிருந்து படித்தாற்போல் ஆணித்தரமாகத் தடம் பதித்திருக்கிறார் ஆசிரியர். அடுத்த தொகுப்பில் இன்னும் அவரிடமிருக்கும் வேறு மனிதர்களை நம்மோடு கட்டவிழ்த்துவிட வாழ்த்துவோம்.

  • சேலம் ராஜா

நூல் : பருந்து
வகைமை : சிறுகதைகள்
ஆசிரியர் : அமுதா ஆர்த்தி
விலை : ரூ. 200
எதிர் வெளியீடு
தொடர்புக்கு: 99425 11302

Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More