திருத்தமுடியாத தீர்ப்புகள்

5 413

இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’  என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில்  மூச்சடைத்தது.

“செந்திலண்ணா.. வாங்க..வாங்க..” என்றபடி கதவைத் திறந்தேன்.

“நல்லாருக்கியாம்மா.. பையன் எங்க காணும்..?”

“டியூஷன் போயிருக்கான். அவரு வாறப்ப கூட்டிட்டு வருவாரு. எல்லோருஞ் சொகந்தானே..?” கேட்டுக்கொண்டே சமையலறையில் நுழைந்தவளிடம்,

“ஏம்மா.. எதுவும் வேண்டாம்.. இங்க வா.. ஒரு நல்ல சேதியோட வந்துருக்கேன்” என்றபடி கையில் வைத்திருந்த மஞ்சள் பையைப் பிரித்து, அழகான விநாயகர் ரூபம் பதித்த அழைப்பிதழை எடுத்தபடியே..

“தர்ஷிணிப் பாப்பா பெரிய மனுஷியாயிட்டா. சீர் வச்சிருக்கேன். ஒரு வாரந்தான் ஆகுது. மாசம் போறதுன்னால உடனே வச்சுட்டோம். கணபதி மண்டபத்திலதான். மாப்பிள்ள வந்தா சொல்லு. குடும்பத்தோட வந்துரு..” என்றபடியே  நீட்டியவரிடம்,

“தர்ஷிணியா..! அவ்வளவு பெரிய பொண்ணாயிருச்சா..?!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவளிடம்,

“பின்ன.. வருஷம் பன்னெண்டாச்சே…” என்றபடி  மற்ற கேள்விகள் என் வாயிலேயே இருக்க, சிரித்தபடியே  விடைபெற்றுக்கொண்டார்.

செந்திலண்ணன் எங்க அம்மா வீட்டுக் குடித்தனக்காரர்களில் ஒருவர். அவர் அங்கே குடி வரும்போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அண்ணா வேலை செய்துகொண்டிருந்த வொர்க் ஷாப்  பக்கத்தில் இருந்ததால், எங்க வீட்டின் முன்புறம் இருந்த ஒற்றை அறையில் தங்கி இருந்தார். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான் என்றாலும் அண்ணாவிற்கு பிளஸ் டூவுக்கு மேல் படிப்பு ஏறாததால், எங்கள் ஊரின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் கிரைண்டர் உபரி பாகங்கள் செய்யும் கம்பெனி ஒன்றில் நுழைந்துகொண்டார்.

தங்கமான குணம். நல்ல உழைப்பாளி என்பதால் நான் அண்ணாவென்று அழைத்தால்கூட, அவர் எங்கள்  சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் அம்மாவிற்கு என் தங்கையை அவருக்குக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் ஒருதடவை அண்ணாவைப் பார்க்க வந்த அவருடைய அம்மா, பேச்சுவாக்கில், அண்ணாவிற்காக அவருடைய அத்தை பெண் காத்திருப்பதாகவும் அந்தப் பெண் ஜீவிதா கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதால் அந்த வருடக் கடைசியில் திருமணம் என்றும் சொல்லவே, அந்த ஆசை எங்கள் மனத்திற்குள்ளாகவே புதைந்து போய்விட்டது.

சொன்னது போலவே அந்த வருடத்தின் கடைசியில் அத்தைப் பெண்ணுக்குப் பரிசம் போட ஊருக்குப் போனவர், சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தார். பவுன் போடுவதில் பிரச்சினையாகி, பேச்சு வார்த்தை முறிந்துவிட்டதாக சோகத்துடன் சொன்னார். ஆனாலும் அண்ணாவுடைய அம்மாவின் ஆசைக்கேற்ப, அடுத்த வருடமே ‘மலர்கொடி’ நல்ல சொத்துக்காரியாக, பூங்கொடியாக அண்ணனின் கைப்பிடித்தாள். ஊரில் தோட்டத்தில் பெரிய பந்தல் போட்டு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்கள்.

அதற்குப்பிறகு எங்கள் ஒண்டிக்குடித்தனம் எதற்கு? ஊரின் நடுவில் இருந்த பெரியமருத்துவமனையின் காண்டீன் காண்ட்ராக்ட்டைப் பிடித்துக் கொடுத்துவிட்டார் அண்ணாவின் மாமனார். ஒரு பெரிய வீட்டை வாங்கி பெண்ணுக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டதில்,  மலர்கொடியுடன் மஹாலட்சுமியும் குடிபுகுந்து விட்டாள்.

வருடங்கள் ஓடியதில், பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில், கடைசியாக என் தங்கையின் திருமணத்தில் பார்த்தபோது என் கண்ணையே நம்ப முடியாமல், மலர்க்கொடி பூங்கொடி சைசில் இருந்து கொடிப்பூசணி சைசுக்கு மாறி இருந்தாள். என் பையன் படிக்கும் பள்ளியிலேயே அவர்கள் மகளும் படித்ததில் அதற்கப்புறமும் இரண்டொரு முறை பார்க்க நேர்ந்தாலும் புன்னகையுடன் தலையாட்டலாகவே  முடிந்தது.

அதற்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். என் கணவர் வந்தவுடன் சொன்னதில்,

“நா எங்கம்மா அங்கெல்லாம் பழக்கமில்லாம.. நீ வேணா உங்கம்மா போனாங்கன்னா போயிட்டு வந்துரு” என்றார் ஆண்களின் அரிச்சுவடிப்படி.

சீர் ஏழு மணிக்கு என்று போட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே  மண்டபத்திற்குப் போய்விட்டேன். அவ்வளவு சீக்கிரம் போகக் காரணம் என் அம்மா வீட்டுப் பழைய குடித்தனக்காரர்கள் சகுந்தலாக்கா, மாலாக்கா வருவார்கள். அவர்களுடன் அரட்டை அடிக்கலாம் என்ற குதூகலம்தான். இப்போது வெவ்வேறு இடங்களில் குடி இருந்தாலும்  ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்களும் சீக்கிரமே வந்திருந்தார்கள்.

முன்புறம் செந்திலண்ணன் மட்டுமே வரவேற்பில் நின்றிருந்தார்.

“எங்கண்ணா.. மலர்கொடி தர்ஷினிக்குப் போட்டியா அலங்காரமா?” என்றேன் சிரித்துக்கொண்டே.

“அதையேம்மா கேக்கற.. இந்த ஒரு வாரமா எம் பொண்ணையும் பொண்டாட்டியையும் தேட வேண்டியதா இருக்கு. பேஷியல்ங்கறாங்க, பிளீச்சுங்கறாங்க.. ஒன்னுமே புரியல போ..” என்றார் முகம் மலர.

வரிசையாக சகுந்தலாக்கா, மாலாக்கா என்று வந்ததில் சந்தோஷம் குதி போட சிரிப்பும் பேச்சும் களை கட்டின. சரியாக ஆறு முப்பதுக்கு சடங்குகள் ஆரம்பமாகின. பூக்களால் மயில்போல அலங்கரிக்கப்பட்ட மேடையில்  தர்ஷிணி அமர வைக்கப்பட்டு சீர்  தொடங்கியது. பின்னாலேயே அண்ணன் சொன்னது போல உற்றுப் பார்த்தால்தான் அடையாளம் தெரியுமளவிற்குப் பெரிய கரை வைத்த சிகப்புக் காஞ்சிபுரம் தகதகக்க, தலையை நுண்ணிய முறையில் பின்னி பந்துப் பூ வைத்து, கழுத்து கொள்ளா நகைகளில் மலர்கொடி ஜொலித்தாலும் முகம் மட்டும் புன்னகையின்றி இருந்ததோடு, பார்வையும் அவ்வப்போது எங்கேயோ வெறித்துக்கொண்டே இருந்தது.

“என்னது இது.. எதாவது உடம்பு சரியில்லையா?” என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டே இருக்கையில்,

“அம்மா வூட்டு தாத்தா சீருங்க.. வைர நெக்லஸ் ஒரு செட், பட்டுச்சேலை ஐம்பதாயிரம்..” என்று உரக்கச் சொல்லி தர்ஷிணியின் கையில் கொடுத்தார்கள். கீழே விழுந்து வணங்கிப் பெற்றுக்கொண்ட பெண்ணை, உடுத்திக்கொண்டு வர உள்ளே கூட்டிப் போனார்கள்.

“அண்ணனுக்கு மாமனார் வூடு வாச்சிருச்சு..” என்றேன் சகுந்தலாக்காவிடம்.

“ஆமா.. போ.. உனக்கு வெசயமே தெரியாதா..? பாவம் செந்திலு.. மலர்கொடிக்கு.. அதென்னவோ சொல்றாங்களே.. ஹிஸீட்டிரியாவோ என்னவோ.. அதாம்மா.. கலியாணத்துக்கு முன்னாடியே ஆடித் தீத்துருவாளாம். ஆசுபத்திரிக்கு அங்கியும் இங்கியும் கூட்டிட்டுப் போயி எதோ கொஞ்சம் கொணப்படுத்தி அலுங்காப்படி மறச்சு செந்திலு தலயில கட்டிட்டாங்களாம். தர்ஷிணி பொறக்கற வர பரவலாம்மா இருந்தது இப்ப ரொம்ப மிகுந்து போச்சாம்.. அதுவும் அவ இப்புடி குண்டடடிச்சுக் கெடக்கறதுல எந்தப் பொண்ணுட்ட பேசினாலும் ரொம்பவே சந்தேகமாம். பேயி புடிச்ச மாரி ஆடுவாளாம். காசுக்கு ஆசப்பட்டு அனுபவிக்கறாங்க. நல்ல வேள.. நாம எல்லாம் தள்ளி வந்துட்டோம்”.

“அதுவும் செந்திலோட அத்த பொண்ணு ஜீவிதா, புருஷனோட பொழைக்காம விவாகரத்து வாங்கிட்டு பையனோட தனியா வந்துட்டாளாம். அதுலர்ந்து இன்னும் சந்தேகமாம். சரி.. செந்துலுந்தான் எத்தன நாளு பொறுத்துட்டு இருப்பான். அவம் மட்டும் ஆம்பள இல்லையா என்ன..?! அப்பப்ப போயிட்டு வந்துட்டு இருக்கிறதா கசமுசான்னு பேசிக்கறாங்க..”

“சேச்சே.. என்னக்கா..” என்ற  என்னைப் பார்த்து..

‌”ஆமா.. நீ நம்பு போ.. எந்தப் புத்துல எந்தப் பாம்போ..” என்றார்கள் அக்காக்கள் ஒரு சேர.

அவர்கள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று மனத்திற்குள் இரு கூறு இருந்தாலும்  அருமையான விருந்துச் சாப்பாட்டை சாப்பிட்டு, பரிசுப் பொருளைக் கொடுக்கப் போனோம். அண்ணன், மலர்கொடி இருவருமே இல்லை. அண்ணாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டு இறங்கி வருகையில் கையிலிருந்த மொபைல் தவறி பின்புறமாகக் கீழே இறங்கிய படிக்கட்டில் நழுவிவிட்டது. பரபரப்பாக ஓடி எடுத்துக்கொண்டு வரும்போது மாடிப்படியின் கீழே,

“என்ன ஜீவி.. தனியா பேசணும்னு கூப்பிட்ட..” என்றது செந்திலண்ணன் குரல்.

‘அங்கே அத்தனை ஜனம் இருக்க, இங்கே இவளிடம் என்ன தனித்த பேச்சு? ஒருவேளை அக்காக்கள் சொல்வதுபோல்..’

“ஒன்னும் இல்ல செந்திலு.. மலருக்கு இப்புடி இருக்குதே.. அதுக்கு சேலத்து பக்கத்துல மலையில ஒரு ஆசிரமம் இருக்குதாம். அங்க கூட்டிட்டுப் போனா ஒரு மண்டலத்தில குணப்படுத்திராங்களாம். ரோசன பண்ணி உம் மாமனாருகிட்டயும் கலந்து சொல்லு. போனுல சொல்லாம்னா அவதான் பொம்பளன்னு  யாருகூட நீ பேசினாலும் ஆடறா.. இதுக்கு பயந்துகிட்டே நீயும் எங்க வூட்டுப் பக்கம் வாரதே இல்ல.. அதான் இங்க வந்து சொன்னேன்..”

“சரி பாக்கலாம் ஜீவி.. இந்த சென்மத்துல அவ கொணமானாலோ  ஆகாட்டியோ எம் பொண்டாட்டிதான். தர்ஷிணி மாதிரிதான் அவளும் எனக்கு. என்ன.. ஒவ்வொரு சமயம் இவ பண்றதுல குழந்த சுருங்கிப் போயிறா.. பயத்துல அவ நடுங்கறத பாக்கவே பாவமா இருக்கு. அதான் இது மாத்தி அது, அது மாத்தி இதுன்னு எதோ ஒரு வைத்தியம். இந்த சீருகூட இவ்வளவு ஆடம்பரமா வேண்டாம்னு சொன்னேன். புடிவாதமா ‘ஏன்.. எங்கூட சோடியா நின்னா எளப்பமாயிருமோ..’ன்னு ஒரே சத்தம் போடறா மலரு. அதான் வச்சுட்டாங்க. சரி நீ போ.. தனியா பேசறத யாராவது பாத்து அது வேற அவ காதுக்குப் போச்சுன்னா தொலஞ்சேன்..”

கேட்டுக்கொண்டிருந்த நான் சத்தமே இல்லாமல் மேலே வந்தேன். “ஏம் புள்ள.. கெடச்சுருச்சில்ல.. இதுக்குப்போயி கண்ணு கலங்கிருக்க..” என்று அம்மா சொன்னபோதுதான் என் கண்களில் நீர் வழிந்திருந்ததே புரிந்தது.

இப்போது மேடையில் மீண்டும் மலர்கொடி நின்றுகொண்டிருந்தாள். யாரையோ பார்த்து சிரித்துக் கையசைத்துக் கூப்பிட்டாள். செந்திலண்ணன்தான் வேகமாக மேடையேறிக்கொண்டிருந்தார். குடும்பமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படம் எடுப்பவர், “இன்னும் கொஞ்சம் ஒட்டி நில்லுங்க..” என்று சொல்லவே,

“வாம்மா..” என்றபடி அவள் தோளணைத்துத் தன் பக்கம் நெருக்கமாக நிற்கவைத்துக்கொண்ட செந்திலண்ணனைப் பார்க்கப் பார்க்க, ‘மலர்கொடியைக் கடவுள் சரியான ஆளிடம்தான் ஒப்படைத்திருக்கிறார்’ என்று தோன்றியது.

“நல்லாவே நடிக்கிறான் செந்திலு. இல்லன்னா ரவைக்கு ஆடித் தீத்துருவாளே..” என்றனர் என் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த அக்காக்கள் இரண்டு பேரும்.

அவர்களைப் புன்னகையுடன் பார்த்த நான், “சரிக்கா.. கிளம்பலாம்..” என்றபடி மேடையைப் பார்த்தேன். ‘ஓ..’வென்ற கூச்சலுடன் வண்ணக் காகிதங்கள் பறக்க கேக் வெட்டிக்கொண்டிருந்தனர். ஒருகணம் அங்கே இருந்த அத்தனை பேரும் மலர்கொடி போலவே தெரிந்தார்கள் எனக்கு‌.

  • விஜி முருகநாதன்
5 Comments
  1. GOMATHISANKARR says

    சபாஷ்

  2. ரிஷபன் says

    மிக அருமை. உணர்வுகள் கனகச்சிதம்.

  3. miyav says

    அருமை

  4. சுதர்சனம்.E.S says

    அருமை!

  5. சுதர்சனம்.E.S says

    அந்த 2 அக்காக்கள் தான் இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு!😃

    புறக்கணித்து மகிழ்வாக வாழ செந்திலண்ணன் உதாரணம் 🤷🏻‍♂️😍

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More