நிர்பந்தங்கள்

0 702

சிறுகதை

கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார் இவ்வளவு வேகமாக கதவைத் தட்டுகிறார்கள்..! இன்னும் சற்று நேரத்தில் தர்காவில் வாங்கு சொல்லிவிடுவார்கள். நான்கு மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்கினால்தான் ஒன்பது மணிக்குள் சமையல் முடித்து மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியும்.

‘இப்படி மூன்றுமே பெண்ணாக பிறந்துவிட்டதே, ஒரு ஆண்குழந்தை இருந்தால் கணவனின் டீக்கடைக்கு எத்தனை உதவியாக இருக்கும்!? அதுனாலென்ன? ஊரில் உள்ள பிள்ளைகள் மாதிரியா என் குழந்தைகள் அடம்பிடிகின்றன? எத்தனை பொறுப்பு இந்தக் குழந்தைகளுக்கு! எத்தனை அறிவு! முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்த மாதிரி, எத்தனை விதமாக நான் சோர்ந்திருக்கும் வேளைகளில் என்னைத் தேற்றுகிறார்கள்! மூத்தவள், இதோ இன்றோ நாளையோ, தென்னம்பாளை வெடிப்பதுபோல் சமைந்து உட்கார்ந்துவிடப் போகிறாள். ‘பெண் வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒன்னு’ என்பார்களே. அய்யோ! மூத்தவள் வயதுக்கு வந்துவிட்டால் சடங்கு செய்ய வேண்டுமே. பணத்திற்கு என்ன செய்வது? கணவன் குணசேகரனின் டீக்கடை மூலம் கிடைக்கும் வருமானம் மூன்று வேளை சாப்பிடுவதற்கே போதவில்லை.’

கணவனின் நினைவு வந்ததும் அரைத் தூக்கத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்தவளின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. ‘எத்தனை அழகன்! சந்தன நிறமும் அடர்ந்த மீசையும் வறுமையின் சாயல் சிறிதும் தெரியாத முகமும்.. டீக்கடையிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஒரு ஜிப்பாவும் செயினும் போட்டுவிட்டால் போதும்; சினிமா கதாநாயகர்களெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். நல்லவேளை.. மூன்று குழந்தைகளுமே அப்பாவின் சாயலில் தங்க விக்கிரங்களாகப் பிறந்திருக்கின்றன’ என்று எண்ணி உடம்பு மகிழ்ச்சியில் பூரித்தது செண்பகத்திற்கு.

தீடிரென வீட்டிற்கு நடுவே உள்ள சிறிய முற்றத்தில் கல் வந்து விழுந்த சத்தம் கேட்டது. நன்றாக முழித்துக்கொண்டாள் செண்பகம். அய்யோ! கதவைத் தட்டுவது கணவனாகத்தான் இருக்கும். ஆமாம்.. செண்பகம் என்று கூப்பிடும் குரல் வேறு கேட்கிறது. அவன்தான் ரொம்பத் தாமதமாக வரும் வேளையில், இதுமாதிரி கதவைத் திறக்காமல் செண்பகம் அசந்து தூங்கும் சமயத்தில், முற்றத்தில் கல்லை வீசி எறிவான்.

அவசர அவசரமாக அவிழ்ந்திருந்த புடவையை ஏனோதானோவென்று உடலில் சுற்றிக்கொண்டு போய் கதவைத் திறந்தாள் செண்பகம்.

“இல்லேங்க.. ரொம்ப அசதியா இருந்துச்சி. டீக்கடை பாத்திரமெல்லாம் படு கறுப்பா இருந்துச்சி. சபீனா வாங்கக் காசு இல்ல. அதான் செங்கல்லை உடைச்சு கல்தூளைப் போட்டு வெளக்குனேன். அதான்ங்க ரொம்ப அசதியாயிட்டு. தூக்கத்திலேர்ந்து எழும்பவே முடியலேங்க. நீங்க சரக்கெடுக்க வெளியூர் போறதால்ல சொல்லிட்டுப் போனீங்க? திடும்முன்னு வந்து நிக்கிறீங்க? ஏன் மூஞ்செல்லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?” என்று வினாக்களாகக் கேட்டுக்கொண்டே, பதில் சொல்லாமல் வீட்டிற்குள் நுழையும் கணவனை ஏறிட்டாள் செண்பகம்.

கைகளில் கொண்டு வந்த மஞ்சள் பைகளையும் சாக்குப் பையையும் தூக்கி ஓரமாக வீசினான் குணசேகரன்.

அவன் ஒருநாளும் இப்படி வீசி செண்பகம் பார்த்ததே இல்லை. சிறிது தள்ளாடிக்கொண்டே வந்தவன், செண்பகத்தைப் பார்த்துக் கண்களை கீழிறக்கிக் கொண்டு லேசாக எச்சில் வழியுமாறு சிரித்தான். முதன்முதலாக குணாவின் சிரிப்பு வேட்டைக்குப் புறப்படும் விலங்கொன்றின் உறுமுகிற கோரைப்பற்களின் சாயலாகத் தெரிந்தது செண்பகத்திற்கு. அவனுடைய சாம்பல் நிறச் சட்டையின் மேல் அங்காங்கே லேசாக அணைந்த நெருப்பில் பூத்த சாம்பலாய் மணல் திட்டுக்கள் அப்பியிருந்தன. அவன் மேலே சாராய நெடி வீசியது. செண்பகத்திற்கு விவரம் தெரிந்து குணா சாராயம் குடித்து அவள் பார்த்ததே இல்லை. அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவளின் கைகளைப் பிடித்துத் தரதரவென்று அடுப்படிக்கு இழுத்துக்கொண்டு போனான். அந்தச் சிறிய வீட்டில் படுக்கும் இடத்தையும் அடுப்படியையும் ஒரு மெல்லிய திரைச்சீலைதான் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்தது.

அப்படியே அவளைக் கீழே தள்ளியவன், படுவேகமாக அவளின் மேலேறி இயங்கத் தொடங்கினான். அத்தனை ஆங்காரமாக அவன் இதுவரை நடந்துகொண்டதே இல்லை. மூன்று குழந்தைகள் வந்ததும் அத்திப் பூத்தாற்போல் என்றாகிவிட்டது. ஒருநொடி அதிர்ந்தவள், அவனின் வேகத்தின் ஒத்திசையோடு உடன்படத் தொடங்கினாள். குணா அவள் கூந்தலைப் பற்றிக்கொண்டு கீழே அழுத்த, இதுவரை இப்படி வலியோடு கூடிய உறவை அனுபவித்தேயிராத செண்பகத்திற்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. மேலும் அவன் மேல் வீசிய சாராய வாடை வேறு வயிற்றைக் குமட்டியது.

வலியினால் சிறிது சுருங்கியிருந்த நெற்றியும் இறுக்கி மூடியிருந்த கண்களும் அவனை இறுக்கிப் பற்றியிருந்த விரல்களும் அவனை மேலும் வேகத்தோடு அவளைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்படத் தூண்டின. கைகளில் ஈரம் பட்டதும் கண்கள் சொருகியவாறே கிறக்கத்திலும் வேகத்திலும் இருந்தவன், செண்பகத்தின் முகத்தை நோக்கினான். கண்களை மூடியபடியே இருந்த அவளை நோக்கி, “என்னை விட்டுப் போகாதடி.. என்னை விட்டு தயவுசெஞ்சு போயிடாதடி.. அதை என்னால தாங்கமுடியாது” என்று புலம்பியவாறே, வெள்ளம் வடிந்த அருவிக்கரையைப்போல கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்த குணா, அவள் மேலிறந்து இறங்கி அப்படியே வயிற்றில் தலைவைத்து செண்பகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான்.

இது அத்தனையும் செண்பகத்திற்குப் புதிது. வலித்த உடலின் பாகங்களைத் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டாள். இந்த ஆவேசம் அவளுக்குப் பிடித்திருந்தது. இதுவரை இந்த உடலுக்குப் பழக்கமில்லாத ஒன்று இது. எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான பழக்கம் சுவாரஸ்யம் குறைவுதானே! மூன்று குழந்தைகள் பிறந்தும் ஒவ்வொரு உறவுக்கு முன்பாகவும் உனக்கு உடம்பு நல்லாருக்கா? செய்யலாமா? என உத்தரவு கேட்பவனைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கும் செண்பகத்திற்கு.

‘இது என்ன கேள்வி? உன் மனைவி நான். வாடீ.. படு..ன்னு சொன்னா படுக்கப்போறேன்.’ இன்னமும் உரிமை எடுத்துக்கொள்ளாமல் உத்தரவு கேட்கும் கணவனை எண்ணி மனத்திற்குள் சில சமயம் குமைந்திருக்கிறாள்.

‘மாமா பொண்ணு என்ற முறையில் கட்டிவைத்துவிட்டார்களே என வாழ்கிறானோ?! உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையா? ஆனால் பிடிக்காமல் போயிருந்தால்கூட அதை எந்த விதத்திலும் குறைசொல்ல முடியாது. குணசேகரன் எவ்வளவு அழகாக இருக்கிறான்! கறுப்பாக, நச்சலாக, சிறிது பல் எடுபட்டு இருக்கும் தன்னைப் பார்க்கவந்த இரு மாப்பிள்ளைகளும் வேண்டாமென்று சொல்லிவிட்டுப்போக, எந்தக் குறையும் சொல்லாது, அம்மா சொல்லிவிட்டாள் என்பதற்காக மறுபேச்சில்லாமல் தன்னைக் கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிது. என்ன பிரச்சினை வந்திருந்தாலென்ன? இது மிகவும் பிடிக்கிறது. இது மாதிரி உரிமையோடு உறவோடு, இது மாதிரி வயிற்றில் தலைவைத்து குணா படுத்திருப்பது மிகவும் பிடிக்கிறது’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவனின் தலையை வயிற்றோடு அழுத்தி, தலைமுடியை அமைதியாகக் கோதிக்கொண்டிருந்தாள்.

‘என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. குணா குடித்திருக்கிறான். வியாபாரத்தில் ஏதாவது நஷ்டம் வந்திருக்குமோ? இதற்கெல்லாமா நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன்?! அதென்ன புதிதாக வாடி போடி என்கிறான்?! என்னை அப்படி அழைக்கமாட்டானே! குடித்திருப்பதால் அப்படி அழைக்கிறானோ!?’ என யோசித்துக்கொண்டே வெளியே மழை பொழியும் ஓசையை வெறுமனே நிரம்பிக்கொண்டிருக்கும் கிணறுபோல கவனித்துக்கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு குணா செண்பகத்தைப் பார்த்து, “ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு கேக்கமாட்டீயா?” என்றான், அமைதியாக அவளைத் தன்பக்கம் இழுத்துப் பிடித்துக்கொண்டே,

“சத்தம் போடாதீங்க, மெதுவா பேசுங்க. புள்ளைங்களுக்கு நீங்க தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கறது தெரிய வேணாம். எதுக்கு இப்படி குடிச்சிட்டு கீழ விழுந்து எந்திரிச்சி வந்துருக்கீங்க? சட்டையெல்லாம் மண் அப்பிக் கிடக்கு. நிதானம் இல்லாம இருக்கீங்க. கண்ணெல்லாம் கோவைப்பழம் மாதிரி சிவந்து கிடக்கு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி இரகசியமாகக் கேட்டவளைப் பார்த்து,

“நீ நல்லவ செண்பகம். மூனு வேளை சோத்துக்கு மேல ஒரு புடவைக்குக்கூட நீ ஆசைப்பட்டதில்ல. ஆனா நான் அப்படி இல்ல. ஒரு வருசத்துக்கு முன்னாடி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்துல, நான் திருவிழா கடை போடும்போது கோவிலிலேயே தங்கியிருந்தேன்ல்ல? அவள அங்கதான் முதல்முறையா பார்த்தேன்.

நான் பொதுவாவே பெண்களை அதிகமாக ரசிப்பவன் இல்லைங்கிறது உனக்கே தெரியும். என் வாழ்வின் வறுமை, அதைத் தீர்க்க நான் படும்பாடு, எனது சுபாவம், எதுவுமே நான் இன்னொரு பெண்ணை ரசிப்பதற்கு இடம் தருவதாக இல்லை.

அன்று காலை வழக்கம்போலப் பாலை ஊற்றி சட்டியில் காய்ச்சிக்கொண்டிருந்தபோது முதல்நாள் பெய்த மழையினால் கோவிலுக்கு எதிரே உள்ள இடமெல்லாம் சகதியாகியிருந்தது. அப்பொழுதுதான் கோவிலைத் திறந்து அலசிக் கோலமிட்டுக்கொண்டிருந்தார்கள். நீலநிறக் கருக்கல் மின்னிக்கொண்டிருக்கும் தங்க வளையல்கள் அணிந்த கையொன்றைப் பார்த்தேன். கோவிலின் வாசலைக் கூட்டிக் கோலமிட்டுக்கொண்டிருந்தது. முகத்தைக்கூட நான் சரியாகப் பார்க்கவில்லை. ஏதோ வேண்டுதலென எண்ணிக்கொண்டு வடை போடுவதற்கான வேலையை கவனித்துக்கொண்டிருந்தேன்.

பழக்கமில்லாத வேலை போல. ‘ஆ..’வென சத்தம் போட்டவாறே அவள் சேற்றில் வழுக்கி விழுந்திருந்தாள். அதிகாலை நேரமாதலால் கோவிலில் யாருமே இல்லை. வயதான பெண்ணொருத்தி அவளைத் தூக்கமுடியாமல் அவளோடு சேற்றில் திணறிக்கொண்டிருந்தாள்.

சட்டென்று வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி அங்கே ஓடிச்சென்று அவளைத் தூக்கியவன் அப்படியே நின்றேன் செண்பகம். அவ்வளவு அழகியை நான் அருகில் கண்டதே இல்லை. எத்தனை மென்மை, வழவழப்பு! அதிகாலை வெளிச்சம் பட்டு மின்னும் கன்னங்கள், பதட்டத்தில் ஆடும் ஜிமிக்கி. என்னால் முடியவில்லை. எத்தனை அழுத்தமாக நீரில் அழுத்திவைத்தாலும் அடங்காமல் பீறிட்டெழும் பந்தாய், நான் அவளிடம் மறைக்க முயன்றாலும் முடியாமல் மயங்கி நின்றேன். இவளுக்காகத்தான் இத்தனை வருடம் காத்திருந்ததாகத் தோன்றியது.

அவளைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளைத்தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாமெனத் தோன்றியது. உன்னை மறந்தேன். நம் குழந்தைகளை மறந்தேன். இந்த உலகில் உள்ள அத்தனையும் மறந்து நின்றேன்.

அவளை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருந்தது. நெளிநெளியான அலை மாதிரியான கூந்தல். விளக்கு மாவை உருட்டி வச்ச மாதிரி முகம். தீபம் மாதிரி கண்கள். துடைச்சு வச்ச குத்துவிளக்கு மாதிரி அப்படியொரு பிரகாசம். என்னை மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்த விநாடியிலேயே அவள் கண்டுபிடிச்சிட்டா, எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு. திருவிழா நடந்த பத்து நாட்களும் அவள் தொடர்ந்து கோவிலுக்கு வர, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கதையும் எனக்குத் தெரியவந்தது.

கோவிலூர் பஞ்சாயத்துகாரர் மாணிக்கவேலோட மனைவி அவள். பதினைந்து வயதிலேயே அவளுடைய அழகைப் பார்த்து மாணிக்கத்தின் வீட்டில் பெண் கேட்க, ‘வசதியாக வாழப்போகிறாளே’ என இரண்டாம் தாரமாக வயசு வித்தியாசம் பார்க்காமல் கொடுத்துவிட்டார்கள். முதல் தாரம் குழந்தை இல்லையெனத் தற்கொலை பண்ணிக்கொண்டதாகவும் குழந்தை இல்லையென மாணிக்கமே ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாகவும் பேச்சிருக்கிறதாம். இவளுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தை இல்லை.

அதனால்தான் கோவிலுக்கு வாசல் கூட்டிக் கோலமிட்டால் குழந்தை பிறக்குமென யாரோ சொல்ல, வேண்டுதலுக்காக வந்திருக்கிறாள். எப்படியோ இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. பத்து நாட்களில் அவளின் பேச்சும் நிறமும் அசைவுகளும் அவளில்லாமல் நானில்லை என்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டன. என்ன செய்யலாம் என யோசிக்கும்பொழுதுதான் அவள் ஒரு வழி சொன்னாள்.

அவள் தந்தை இறந்துவிட்டதால் அம்மா மட்டும் அவள் வீட்டில் தனியாக இருப்பதாகவும் அங்கே வாய்ப்பு கிடைக்கும்பொழுது வந்துவிடுவதாகவும் நானும் ஜாக்கிரதையாக அங்கே வந்துவிட்டால் இருவரும் சேர்ந்திருக்கலாம் எனவும் கூறினாள். எனக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எனக்கு அவள் வேண்டும் என்பது மட்டும்தான் எனது முழு எண்ணமாக இருந்தது.

தனித்திருக்கும் தாய் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம், ஒரு வயதான அம்மாவிடம் துண்டுச் சீட்டில் என்னை வரச்சொல்லி அழைப்பு விடுப்பாள். எனக்கு அந்த வயதானவள்தான் அவளின் அம்மாவோ எனச் சந்தேகம் உண்டு. ஏனெனில் இருவருக்கும் ஒரேமாதிரியான கண்கள். நாங்கள் இருவரும் அவளுடைய அம்மா வீட்டில் சந்திப்போம். உன்னிடம் சரக்கு வாங்குவதாகச் சொல்லிவிட்டு அவளைப் பார்க்கத்தான் சென்றுகொண்டிருந்தேன் செண்பகம். எல்லா உரிமையில்லாத விசயங்களும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும்?! நான் அவளை உரிமையாக நினைத்தேன். அவளைக் குறைசொல்ல முடியாது. அவளின் சூழ்நிலை வேறு. அவளுக்கும் என்னோடு வாழத்தான் ஆசை. முடியவே முடியாததற்கு ஆசைப்பட்டு என்ன செய்வது? அவள் புத்திசாலி. இருவரில் ஒருவராவது அறிவு வசப்பட்டு இருக்கவேண்டும். இருவருமே உணர்ச்சி வசப்பட்டு இருந்தால் இருவரின் வாழ்வும் வீணாகிவிடும்.

நேற்றும் துண்டுச்சீட்டு வந்தது. ஆசையாகப் போனேன். அவள்தான் எத்தனை அழகு! எத்தனை கொடுத்துவைத்தவன் நான்! ஓடிவந்து கட்டிக்கொண்டவள், என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவள் கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னாள். நான் அப்பாவாகப்போவதாகச் சொன்னாள்.

ஒரு பை நிறைய பணமும் சில நகைகளும் என்னிடம் தந்து, இனி அவளைப் பார்க்க வரவேண்டாம் எனக் கூறிவிட்டாள். இனியும் நான் அவளைப் பார்ப்பது இருவர் உயிருக்குமே ஆபத்து எனக் கூறிவிட்டாள். அவள் அப்படிக் கூறியபிறகு என்னால் என்ன செய்யமுடியும் செண்பகம்? உனக்கு நான் துரோகம் செய்தேன். சூழல் எனக்குத் துரோகம் செய்துவிட்டது.

மன்னிச்சிடு.. என்னை மன்னிச்சிடு செண்பகம்..” எனக் கூறிக்கொண்டே, அவளது கால்களைப் பிடிக்கப் போனான் குணா. அப்படியே குடிபோதையில் அவளது காலிலேயே மயங்கி உறங்கத்தொடங்கினான். அவனது முகம் சற்றுத் தள்ளி இருக்கும் சர்ச்சில் குற்றத்தைப் பாதிரியாரிடம் ஒப்பித்து பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டு விடுதலையான உணர்வோடு சாலையில் நடந்து செல்லும் பாதசாரியின் முகத்தினை ஒத்திருந்தது.

அழுதழுது களைத்துப் போயிருந்தாள் செண்பகம். உணர்ச்சிப் பெருக்கில் அழுகை கடும் மழையைப் போலப் பொழிய ஆரம்பிக்க, அது நின்றதும் தேவையில்லாத உணர்வுகள் கண்ணீரோடு அடித்துச் செல்லப்படபிறகு மூளை செயல்பட ஆரம்பிக்கும்.

இடையில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலை காற்றில் மெதுவாக அசைந்து அசைந்து நீல நிற வெளிச்சத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை இவளுக்குக் காட்டிக் காட்டி மறைத்தது. மூன்று குழந்தைகளும் ஒன்றின் மேல் ஒன்றாகக் கால்களையும் கைகளையும் போட்டுக்கொண்டு நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்படியே பார்வையை நகர்த்தி குணாவைப் பார்த்தாள். குழந்தைகளைப் போலவே அதே அச்சில் வளர்ந்த குழந்தையாக உறங்கிக்கொண்டிருந்தான் குணா. சட்டெனச் செண்பகத்திற்கு ஒரு புள்ளியில் மனம் இளகியது. இப்பொழுது என்ன செய்வது?

அவளுடைய அப்பா காசிருக்கும் சமயத்திலெல்லாம் கீழத்தெரு பெண்மணியோடு போய்விடுவதாக அவளுடைய அம்மா பலமுறை கூறி அழுதிருக்கிறாள். குணா ஒன்றும் அப்படி ‘பணத்தைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிடவில்லையே’ என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ள முனைந்தாள். சரி.. எப்படியாவது இந்த உறவு உடைந்தவரை நல்லது. கடவுள் தன்பக்கம் இருப்பதாக நம்பினாள். கீழே விழுந்து கிடந்தவனைக் கைத்தாங்கலாக நிமிர்த்தி இழுத்துக்கொண்டுவந்து பிள்ளைகளுக்கு அருகே படுக்கவைத்தாள்.

“செண்பகம்.. எல்லாம் சரியாகிடுமா செண்பகம்?” என போதையில் உளருபவனிடம் “சரியாகிடும்” என சமாதானப்படுத்தி உறங்கவைத்தாள்.

பணமும் நகையும் கொடுத்தாள் என்றானே?! பரவாயில்லை.. மூத்தவள் வயதுக்கு வந்துவிட்டால் அதை உபயோகப்படுத்திக்கொள்லலாம்’ என்று எண்ணிக்கொண்டே ‘எதுவும் நஷ்டமாகிவிடவில்லை, எல்லாம் வந்தவரை லாபம்தான் என எண்ணிக்கொண்டாள்.’ எப்படியோ கணவன் தன்னிடம் வந்துவிட்டான் என்பதில் அவளுக்கு நிம்மதியிருந்தது.

அசதியாக இருந்தது. கலைந்து கசங்கிக் கீழே விழுந்திருந்த முந்தானையைச் சரி செய்கையில், ‘இப்படித்தான் குணா அவளை ஒவ்வொரு முறையும் ஆசையாக அலுக்க அலுக்க உறவு கொண்டிருப்பானோ?!’ என்று எண்ணும்போது, அவன்மீது சொல்லமுடியாத அளவிற்கு வெறுப்பு வந்தது செண்பகத்திற்கு.

  • தேவி லிங்கம்
Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More