இரைச்சல்

1 469

சிறுகதை

நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம்.

வேலைக்கு என்றும்  பஞ்சம் பிழைக்க என்றும் ஒற்றைப் பெண் குழந்தைகள் பின்னால் வாழப்போனவர்கள் என்றும் மனிதர்கள் ஊரைப்போல் நிற்காமல் நகர்ந்துவிட்டார்கள். சேவலுக்கும் பந்தங்கள் உண்டு. ஆனால் மனுசன் வாய் சும்மா இருக்காது. இரண்டொரு உறவுகள் நிலைத்திருக்க, பொய்யும் வேசமும் அவசியம் என்பதை வார்த்தை அளவுக்குக்கூட சரி என்று ஏற்றுக்கொள்ளாதவர் அருகில் யார்தான் இருப்பார்கள்?

கிழவியைக் காடு சேர்த்ததும் தனிமையைத் துணையாக்கிகொண்டு நாள் கடத்தினார். எப்போதாவது பேச்சுச் சத்தம் கேட்கும். இரண்டு மூன்று தடவை எட்டிப் பார்த்தவர்கள், தனியாகப் பேசிக்கொள்கிறார் என்பதறிந்து விலகிக்கொண்டார்கள்.

லாடம் கட்டும் மேட்டுப்பட்டித் தாத்தாதான் சேவலின் கூட்டாளி. பொடி டப்பாவை நடுவில் வைத்துவிட்டு இருவரும் குத்துக்கால் போட்டு அமர்ந்து பேசத் தொடங்கினால், அடைக்கோழி ஆகிவிடுவார்கள். லாடக் கயிறு முடி அவிழ்ந்து முன்னாங்கால் எலும்பில் சீனிக் காளை விட்ட அடியில், மேட்டுப்பட்டித் தாத்தாவும் இப்போதால்லாம் வருவதில்லை.. எலும்பு முறிவுக் கட்டோடு இரண்டு தரம் காலை இழுத்துக்கொண்டு வந்தவர்தான். பிள்ளைக்கு வாக்கப்பட்டுக் கஞ்சி குடிப்பவர் வேறென்ன செய்யமுடியும்? நடையை நிறுத்திக்கொண்டு அடங்கிப்போனார். சேவலின் கஞ்சிக்கு மூனு குறுக்கு கிணத்து வயக்காடு இருந்தது.

வழக்கமான சித்திரை வெயிலைவிட, முன்னதாகப் பங்குனி வெயில் காய்ச்சி எடுத்தது. மூனாவது வாரத் திருவிழாவிற்கு இளவட்டங்கள் ஊர் வசூலுக்குக் கிளம்பினர்கள். வழக்கமான வசூல்தான். பெரிய தலைக்கு ஆயிரம் என்றால் சின்ன தலைக்கு நூறு வரையில்கூட இறங்கும். ஆனால் வசூல் கேட்காமல் வரக்கூடாது என்பது சம்பிராதாயம்.

‘சேவல் வீட்டுக்குப் போனீங்களா?’ என்ற கேள்விக்கு, ‘அவரு என்னத்த குடுப்பாரு?’ என்பதுதான் பதிலாக வந்தது.

“என்னத்தையும் குடுக்குறாரு.. இல்லைங்குறாரு… நீ போனயாடா.?”

“இல்ல மாமா”  என்றான் வண்டி முத்தையா மகன். 

“கூறு கெட்டவனே.. நாள பின்ன ஊரு மந்தையில யாருடா வசவு வாங்குறது..? போங்கடா.. கேட்டுட்டு வாங்க..” என்று அனுப்பிவைத்தார் நல்லசிவம்.

வண்டிப் பாதையில் இருந்து இறங்கி ஒத்தயடிப் பாதைக்கு வந்ததும் அவ்வளவு அமைதி.

“பெருசே…” என்ற வார்த்தைக்கு எந்த பதிலும் இல்லாததால், தட்டியை விலக்கிப் பார்த்தான். மலையைச் சுற்றிய காட்டருவி போல வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்தார்.

திரும்ப ஒருமுறை “தாத்தே…” என்றவனின் குரல் அடங்கும் முன் விருட்டென்று எழுந்தவர், தலைக்கு வைத்த துண்டை எடுத்து அவன் முகத்தில் எறிந்தார்.

“எடுபட்ட பயலே.. எதுக்கு கத்துற..? செத்தா போய்ட்டேன்…” என்றவாறு எழுந்தார்.

வரி கேட்கப் போன வண்டி முத்தையாவின் மகன் வெலவெலத்துப் போனான். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்தது. வரி கேட்காமல் போனால் நாட்டாமை பழைய பாட்டு திரும்பப் பாடுவார். ஊரு சோலியில் தலையிடுவது கொள்ளிக்கட்டையில் மண்டையைச் சொரிவது போலத்தான். கிழம் வாயைத் திறப்பதற்கு முன்னால்,

“’முத்தையா பையன் வந்துருக்கேன்.. கோவில் கொடைக்கு வசூல் கேட்டாக..”

“நீ பெரிய மசுரு.. வந்துட்ட வசூல் பண்ண.. என்னைக்கிடா கொடை? சித்திரை பவுர்ணமிக்கு இன்னும் நாள் இருக்குள்ள… அதுக்குல என்ன.?”

“அப்போ… நா வேணா போய்ட்டு செத்த நாள் கழிச்சி வர்றேன்..”

“ஆமாடா.. முந்நூறு மூட்டை நெல் இருக்கு.. நீ செத்த நாள் கழிச்சி வந்து வண்டி ஏத்து..”

மௌனமாக நின்றான்.

“சரி.. அந்த கோளாய் சத்தம் இந்த வருசமும் உண்டா..?”

குழாய் ரேடியோவைத்தான் சொல்கிறார் என்று முத்தையாவின் மகனுக்கு விளங்கியது.

போன வருசம் கொடை நடக்கவில்லை. அதுக்கு முந்தின வருசக் கொடையில் சேவல்தான் ஊர் வாயில் நிறைந்திருந்தார். வழக்கம்போல லிங்கம் சீரியலும் ரேடியோவும் கட்ட, அதில் ஒன்று சேவல் வீட்டருகில் இருந்த கரண்டு கம்பத்திலிருந்து வாசலைப் பார்த்துப் பாடியது. வழக்கமான இடமில்லை என்றாலும் அரசாங்கம் ஒரு கம்பத்தை மிச்சப்படடுத்த, லிங்கம் ஒரு குழாய் ரேடியோ வசூலை விட மனமில்லாமல் சேவல் வீட்டுக் கம்பத்தில் கட்டிவிட்டான்.

‘விநாயகனே..’ என்ற முதல் பாடல் முடியும் முன்னால் லிங்கத்தை சரவெடியின் நடுவில் நிறுத்தி வெடித்துகொண்டிருந்தார் சேவல். கூட்டத்தில் இருந்த விடலை ஒன்று,

“உம்ம சத்தத்தை விடவா அந்த ரேடியா சத்தம் இருக்கப்போகுது?” என்று கேட்ட நொடியில் விறுவிறுவென்று வீடு பார்த்துப் போனவர் சாணியைக் கரைத்துக் குழாய் ரேடியோவில் விசிறி நிறுத்திவிட்டார். ஒருவழியாக லிங்கத்தைச் சமாதானப்படுத்தி திருவிழாச் செலவில் மிச்சம் இருந்ததைத் தந்தனுப்பினர்கள்.

“ஏ….. அதே.. அதெல்லாம் இருக்கு.. ஆனா இங்கன கட்ட மாட்டாக… போதுமா..?”

“அப்போ நாளைக்கு வந்து உன் வசூலை வாங்கிக்கோ…” என்று முத்தையாவின் மகனை அனுப்பிவைத்தார்.

வம்பிழுத்துப் பழகிய இளவட்டங்களுக்கு விவகாரமான விசயங்கள்தான் முதலில் ஞாபகம் வரும். சேவல் விஷயமும் அப்படித்தான் ஞாபகம் வந்தது. கூடவே அதற்கான திட்டங்களையும் தயார் செய்தார்கள். ‘அம்மன் கண் திறக்கும் நடுச்சாமத்தில் மட்டும் சேவல் வீட்டருகில் ரேடியோவைக் கட்டி அலறவிட வேண்டும். விடியற் காலையில எல்லாரும் பொங்கல் வைக்க மைதானத்தில இருக்கும்போது கழட்டிவிடலாம்’ என்பது யோசனை. இதில் வண்டி முத்தையாவின் மகனுக்குத்தான் அதிகப் பங்கிருந்தது.

அதீத குடும்ப உறவுகளுக்குள்ளாக வாழ்ந்து பழக்கப்பட்ட மனிதர்தான் சேவல். ஒரே மகள் தன்னுடைய பங்குதான் முக்கியம் என்று இரட்டைக் காளைகளையும் ஊர் மந்தைக் காட்டையும் எழுதி வாங்கும்போதுகூட மனிதர் கலங்கவில்லை. சாவு முதல் என்று அப்பா வைத்திருந்த நிலம், அவள் நிலம் ஆகும் வரை விடக்கூடாது என்று எல்லாக் கூத்தையும் நடத்திப் பார்த்தாள். ஒன்றும் பலிக்காமல் ஊர் மந்தைக்கு விவகாரம் வந்தபோது சேவல் பேசிய வார்த்தை இதுதான்.

“வேலை பார்த்த பண்ணையில அவன் வீட்டுச் சொத்தா இருந்த உங்க அம்மையை விரும்பிக் கட்டும்போது எங்களுக்குன்னு ஒரு கன்னுக்குட்டிகூட அவனுங்க அவுக்கல. அதுமாதிரி உன்ன அனுப்பக் கூடாதுன்னுதான் உனக்குப் பங்கு விரிச்சது. இந்தச் சொத்து இல்ல.. நீ வச்சிருக்கிறதும் அவ வேர்வைலயும் என் உழைப்புலயும் வந்ததுதான். நம்ம புள்ளதானன்னு கை ஏந்தித் திங்கிறதுக்கு நான் பழக்கப்படல.. எனக்கு அப்புறமா இந்த மசுரு யார்க்கு வேணாலும் போகட்டும்” என்று சொல்லிவிட்டு வீடு அடைந்தவர், எப்போதாவது வரும் சத்தத்தோடு உலகைச் சுருக்கிக்கொண்டார்.

வசூல் தந்த நாளைக்கூட மறந்து போனார் சேவல். திடல் பக்கம் கொட்டுச் சத்தம் கேட்பதை மட்டும் காதை ஒருபக்கமாகச் சாய்த்து உறுதிப்படுத்திக்கொண்டார், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல.

இரண்டாம் நாள் இரவுக்கு ஊரே திடலில் இருந்தபோது இளவட்டங்களின் வேலை தொடங்கியது. முளைப்பாரி முடிந்த இரவுதான் இளசுகளுக்கான நேரம். தன்னுடைய சத்தமே பிடிக்காத சேவலுக்கு ஊர்ச் சத்தம் எப்படி ஒத்துப்போகும்? கயிற்றுக் கட்டிலை வீட்டுக்குள் தூக்கிப் போட்டுப் படுத்துக்கொண்டார். கம்பத்தில் இரவில் ஒலித்த ரேடியோ சத்தம் அவரைக் கோபமடையச் செய்யும் என்றுதான் நினைத்தர்கள்.

ஆனால் எல்லாச் சத்தமும் இரைச்சலாக மாறி ஒருவரை அடையும்போது கொன்றுவிடும் வல்லமை உடையது என்று யாரும் அறியவில்லை. சேவல் அதை உணர்த்திவிட்டு செத்துக்கிடந்தர்.

‘கொடை நடக்குறப்பவா சாவு விழணும்..?’ என்று பேசிக்கொண்டார்கள். ஊரே அமைதியாக இருந்தது, சேவலுக்காக.

  • முத்து ஜெயா
Suvadu Book List
1 Comment
  1. தமிழன் காசி says

    சிறப்பு… தனிமையில் உழலுகிற தளர்ந்தவர்களின் வாழ்நிலை எதார்த்தத்தை நம் கண்முன்னே காட்டியிருக்ஙிறார் முத்து ஜெயா. கிராமத்து சொல்லாடல் அருமை.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More