அவன் என்னைப் போலவே இருப்பான்

0 383

சிறுகதை

கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் கோஷா ஆஸ்பிடல் என்றால் சின்ன குழந்தைகூட வழி சொல்லிவிடும்.

கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இது ஓய்வின்றி இயங்கிவருகிறது. அன்றைய மெட்ராஸில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் இங்கே பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இது அரசு இலவச மருத்துவமனையாக இருப்பதால் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதம் எனலாம். அந்த கம்பீரமான சிவப்புக் கட்டடத்திற்கு வெளியே உள்ள மேடைகளிலும் பெஞ்சுகளிலும் இரவும் பகலும் தங்கள் பெண்களைப் பிரசவத்திற்காக அனுமதித்துவிட்டு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்று தங்கள் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

அங்கே பார்வையாளர்கள் நேரம் என்பது காலை ஏழிலிருந்து ஒன்பது, மாலை நான்கிலிருந்து ஆறு என்பது பெயருக்குத்தான். வாசலில் இருக்கும் வாட்ச்மேனிடம் காசைத் திணித்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு. இரவில் யாரும் பேஷண்டுடன் தங்குவதற்கு அனுமதியில்லை. ஆனாலும் வார்டுகளை ஒட்டியுள்ள வராண்டாக்களில் வார்டு ஆயாக்களை கவனித்துவிட்டு ஒளிந்து அமர்ந்து தங்கள் பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் பெண்மணிகளைக் காணலாம்,. அவர்களை விரட்டுவதுபோல் விரட்டிக் காசு வாங்கும் ஆயாக்கள் சரியாக மாலை ஆறு மணிக்கெல்லாம் கையில் ஒரு சிறு கம்பினால் கட்டில்களைத் தட்டிக்கொண்டு வந்து “யாரும்மா அங்கே..? டைம் முட்ஞ்ச்சி போச்சி.. போ..போ.. அட இன்னாமா.. நா சொல்லிகினே கீறேன்.. குந்திகினே கீறே.. டாக்டரு வந்தா நா தான் மாட்டிக்கிவேன். போ..போ..” என்று கூவிக்கொண்டே வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வராண்டா சுவருக்குப் பின்னால் ஒளியும் தாய்மார்களின் அருகில் வந்து, “ஐய.. நீ இங்க ஒளிச்சிகின்னா.. இன்னா.. எனக்குத் தெலியாதா?  எம்மாங் காலமா ஆஸ்பத்திரில குப்பை கொட்டிக்கினு கீறேன்.. கெளம்பு கெளம்பு..” என்றதும் அவர்கள், “எம்மா எம்மா.. பச்சப் புள்ளம்மா.. கொஞ்சம் இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும்..” என்று கெஞ்சிக்கொண்டே தங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் காசை எடுப்பார்கள். அதைப் பார்த்ததும் “சரி சரி.. பச்சப் புள்ளனு சொல்ற.. பாவமாதான் கீது.. இன்னிக்கி ஒரு தபா மட்டும்தான்.. ராத்திரி டாக்டர் ரவுன்ஸ் வரப்போ கக்கூசுல போயீ டபாய்ஞ்சுக்கோ.. இன்னா பிரிதா..? என்ன மாட்டி வுட்றாத..” என்று சொல்லிவிட்டு 50 ரூபாயைப் பிடிங்கிக்கொண்டு போய்விடும்.

டெலிவரி வார்டின் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. ‘டப் டப்’பென்று டியூப் லைட்டுகளை நிறுத்திக்கொண்டே சென்றாள் ஒரு ஆயா. இப்போது மெலிதான நைட் லேம்புகள் மட்டும் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. ஸ்டாப் நர்ஸ் ஒவ்வொரு பெட்டுக்கும் சென்று அதில் மாட்டியிருந்த சீட்டைப் பார்த்து மாத்திரைகளை கொடுத்துக்கொண்டே சென்றாள்.

“ம்ம்.. மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுகிட்டு படுங்க” என்று சொன்னபடி நகர்ந்தாள். அந்த வார்டின் கடைசி பெட்டின் அருகில் வந்தவுடன்,

“ஏம்மா உன் பேரு தானே செவப்பி..” என்றாள்.

தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை அரவணைத்தபடி படுத்திருந்த செவப்பி,

“ஆங்.. நா தான் சிஸ்டர்..” என்றதும்

“என்ன நீ.. சரியா மாத்திரை போட மாட்டேறேன்னு டே டியூட்டி நர்ஸ் சொல்லிட்டுப் போறா.. இத பாரு.. மாத்திரைதான் குடுக்க முடியும். அதை நீதான் ஒழுங்கா போட்டுக்கணும். அப்பதான் உனக்கும் நல்லது உன் பிள்ளைக்கும் நல்லது.. தெரியுதா? இந்தா மாத்திரை.. எழுந்திரு.. சாப்பிட்டியா . மாத்திரையை என் முன்னாடியே போடு.. உன்னை நம்ப முடியாது” என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை அவள் கையில் கொடுத்தாள்.

அதை எழுந்து உட்கார்ந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தவள், சரிந்து தன் குழந்தையின் அருகில் ஒருக்களித்துப் படுத்தாள்.

அப்போது வார்டின் சுவர்க் கடிகாரம் ‘டங்க்.. டங்க்.. டங்’கென்று பத்து முறை அடித்து ஓய்ந்தது. அந்தக் கடிகாரத்தின் சத்தம் அவளின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.

ஆறு வருடங்களுக்கு முன்னால் சாந்தோம் தேவாலயத்தின் மணி இதேபோல் ஒலிக்க, சர்ச்சின் இசைக் குழுவினர் இசைக்க, அந்த இசை மனத்திலும் உடலிலும் ஒருவித சிலிர்ப்பைக் கூட்ட, நீலப் பட்டுடுத்தி தலையில் வெள்ளை ரீத்தும் மெல்லிய பூக்கள் கோர்த்தது போல் கிரீடமும் அணிந்து, காற்றில் மிதப்பது போல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வந்து, மைக்கேல் ராஜூவோடு ஃபாதர் செபஸ்டியன் முன் சென்று மண்டியிட்ட காட்சி நெஞ்சில் நிழலாடியது. ‘ஃபாதர் செபஸ்டியன் இருவர் கைகளையும் இணைத்து வைத்துப் புனித நீர் தெளித்து, “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லவும், அந்த வார்த்தைகள் சாந்தோம் தேவாலயச் சுவரின் எல்லாப் பக்கங்களிலும் பட்டு எதிரொலித்ததே அது என்னவாயிற்று?!’ என்று நினைத்தவள் கண்களில் வெளிப்பட்ட கண்ணீர் அவள் காதுகளைத் தாண்டித் தலையணையை நனைத்தது.

செவப்பி என்று அவளுக்குப் பெயர் வைத்திருந்தாலும் அவள் சற்றே கறுத்த நிறம்தான். ஆனால் வடித்து வைத்த சிலைபோல் அழகான முகமும் மினுமினுப்புக் கூடிய வடிவமும் கொண்டவள்.

மைக்கேல் ராஜூவும் அப்படியொன்றும் வெளுத்த நிறமுடையவன் இல்லைதான். ஆனால் செவப்பியைவிடச் சற்று வெளுத்த தோலுடன், கடலில் வலைவீசி வீசி இறுகிய கட்டான தேகம் கொண்டவன். அவன் தீவிர எம்,ஜி,ஆர் ரசிகன் என்பதால் எப்போதும் கலர்கலராகப் பூப்போட்ட மினுமினுவென்ற முழுக்கைச் சட்டை போட்டு, அதைத் தன் புடைத்த புஜங்கள் தெரியுமாறு சுருட்டி விட்டுக்கொள்வான். வாத்தியார் ரசிகனாக இருந்துகொண்டு பீடி சிகரெட்டு, குடிப்பழக்கம் எல்லாம் கூடாது என்ற கொள்கை உடையவன். அவனுக்கு அப்பா இல்லை, அம்மா ஆரோக்கிய மேரி மட்டும்தான்.

மைக்கேலைக் கரம்பிடித்து, சாந்தோம் சர்ச்சின் பின்னால் இருந்த மீனவக் குப்பத்தில் இருக்கும் பழைய ஹவுசிங் போர்டின் மூன்றாவது தளத்தில உள்ள அந்தச் சிறிய வீட்டிற்குக் குடிவந்த பிறகுதான் ‘வாழ்க்கை இத்தனை இனிமையானதா!’ என்று தெரிந்துகொண்டாள் செவப்பி. மைக்கேலும் அவளை ஒருநாளும் கோபமாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. மைக்கேலுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை.

ஆரோக்கிய மேரியும் ஆரம்பத்தில் அவளை மிகவும் அன்பாகத்தான் பார்த்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அக்கம்பக்கத்தார்,

“இன்னா ஆரோக்கியம்.. உம்புள்ளைக்கி நல்லா வஜ்சிரம்மாட்டம் வெளுப்பா மருமவ கொண்டாருவேனு பாத்தா.. கறுத்த வௌவாலு மாதிரி புட்சாந்து கீறியே..” என்று சீண்டுவார்கள்.

உடனே ஆரோக்கியத்துக்குக் கோவம் மூக்குக்கு மேல் வந்துவிடும்.

“அடியேய் செவத்த சிறுக்கிய.. செவப்ப்பு என் காலு பாதத்தில கீதுடி.. என் மருமவ கருப்பு வுங்க கண்ணில கீதுடி.. போங்கடி போக்கத்தவகளே.. போயி வேலையைப் பாருங்கடி.. வந்துட்டாளுங்க என் மருமவள பத்தி பேச.. ஆய்ஞ்சு பூடுவேன் ஆய்ஞ்சி..” என்று வாயடிப்பாள்.

அப்படி இருந்தவள், ஆண்டுகள் இரண்டு மூன்று நான்கு என்று ஓடியும் செவப்பி உண்டாகாமல் இருக்க, “ஏசப்பா.. இது வுனுக்கே நாயமா கீதா.. நேத்து கண்ணாலம் கட்டிக்கிட்ட சிறுக்கியெல்லாம் கையில ஒன்னு வவுத்துல ஒன்னுனு இஸ்த்துகினு திரியுதுங்க.. எம் மவனுக்கு இன்னாயா கொறச்சலு..? பாவி மவ வவுத்துல ஒரு புழு பூச்சி இல்லியே.. ஏசப்பா.. நீ எப்பதான் கண்ணு தொறப்பியோ..” என்று வாசற்படியில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“அடியே உன் வவுத்துல இன்னாடி கல்ல கட்டி வைச்சினுகிரியா..? அல்லாரும் இன்னா இன்னுமா உம் மருமவ உண்டாகலனு கேக்கறப்போ அவுமானமா கீதுடி” என்று செவப்பியிடமும் சிடுசிடுப்பாள்.

ஆனால் அதற்காக ஒருநாள்கூட ஆரோக்கியத்தை எதிர்த்து ஒரு சொல் சொல்லமாட்டாள் செவப்பி.

“இன்னாதான் சொல்றுதுனு தெலியல.. எம்மாந் திட்னாலும் கம்முனு பூட்ற.. வேற எவளா இருந்தா இன்னேரம் பிலுபிலுனு புட்சிக்குவாலுங்க.. சட்டிய தூக்கினு தனியா பூட்றனுவாளுங்க..  ஏசப்பா ஏந்தான் வுனுக்கு ஒரு புள்ளைய குடுக்காத சோதிக்கிறாரோ.. தெலியலயே” என்றும் சொல்லுவாள். அதற்கும் மௌனமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு,

“அயித்த வா.. கொயம்பு கொச்சிட்சி.. சூடா துன்னு வா” என்று கூப்பிட்டு தட்டில் சோற்றைப் போடும்போது அவள் முகத்தைப் பார்த்து அப்படியே கண் கலங்குவாள் ஆரோக்கியம்.

செவப்பிக்கு மட்டும் பிள்ளை பெற்றுகொள்ள ஆசையில்லையா என்ன? தினமும் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சர்ச்சுக்குப் போய் தோமையர் கல்லறையில் மண்டியிட்டு ‘ஒரு புள்ளையைக் கொடு’ என்று மனத்தாலேயே மன்றாடுவாள்.

அப்படித்தான் ஒருநாள் கல்லறையில் கண்ணை மூடிக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் இருந்துவிட்டாள். அதற்குள் இருட்டிவிட்டது. ‘இவ்வளவு நேரமாகியும் செவப்பி வரலையே..’ என்று கலவரப்பட்ட ஆரோக்கியம்,

“அடியே சுந்திரி… என் மருமவள பாத்தியா? அடேய் அந்தோணி மவனே.. என் மருமவள காணோம்டா.. ஓடிப்போய் மைக்கேல கூட்டியாடா.. ஐயோ நா என்னா பண்ணுவேன்..” என்று ஒப்பாரி வைத்து குப்பத்தையே கலக்கிவிட்டாள். இவள் போட்ட கூச்சலில் ஆளுக்கொரு பக்கமாக ஓடி செவப்பியைத் தேட ஆரம்பித்தார்கள். சிலர் சர்ச்சுக்கும் ஓடிப்போய்த் தேடினார்கள். ஆனால் யாருக்கும் பின்னால் இருக்கும் கல்லறைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை.

சேதி கேட்டு ஓடிவந்த மைக்கேலுக்கு, தன் வீட்டின் முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கியது. கும்பலை விலக்கிக்கொண்டு வாசல்படியில் காலை விரித்துக்கொண்டு தலைவிரி கோலமாக அரற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியத்திடம்,

“எம்மா.. இன்னாமா ஆச்சி..? ஏம்மா கூவிகினு கீற..?” என்றவனைப் பார்த்து

“ஐயோ நா என்னத்த சொல்லுவன்.. செவப்பி எங்கியோ பூட்டாடா.. எல்லா எட்திலயும் தேடிட்டோம்.. எங்கிமே இல்லடா.. ஏசப்பா நீ தாம்ப்பா அவள கண்ணுல காட்டணும்” என்று ஓவென்று புலம்பி அழுதாள்.

“ஆமா.. அல்லாம் உன்னாலதான்.. எப்பப்பாரு புள்ள பெத்துக் குடுக்கலனு அவள திட்டிக்கினே இருந்தா.. எத்தினி நாளிக்கித்தான் பொறுத்துப்பா.. இப்ப எங்கியோ பூட்டா.. போம்மா” என்றவன் மூளையில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஃபாதர் செபஸ்டியனைப் பார்த்தால் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் வேகமாக சர்ச்சை நோக்கி ஓடினான்.

ஃபாதர் செபஸ்டியன், அப்போது கல்லறை வாசல் விட்டிறங்கி சர்ச்சை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர் முன் மண்டியிட்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டு,

“ஃபாதர்.. ஃபாதர்.. எஞ் செவப்பி.. எஞ் செவி..” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் தேம்பினான். அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட ஃபாதர் செபஸ்டியன், சிரித்துக்கொண்டே “மைக்கேல்.. என்ன ஆச்சு உனக்கு..? அழாம சொல்லு” என்றார்.

“செவப்பியைக் காணோம் ஃபாதர்..” என்றவனைப் பார்த்து, அவன் தோளைப் பிடித்து எழுப்பி,

“மைக்கேல், கர்த்தர் நம்மை எப்போதும் தவிக்க விடமாட்டார். நான் இப்பதான் அவளைக் கல்லறையில பார்த்தேன். போ.. அவ எங்கயும் போகல.. அங்கதான் இருக்கா” என்றார். அவருக்கு நன்றி கூடச் சொல்லாமல் தபதபவென்று கல்லறைப் படிகளில் இறங்கி ஓடினான். நிசப்தமான கல்லறையில் அவன் ஒடிவந்த சத்தம் பயங்கரமாக ஒலிக்கவும், அங்கிருந்த சிஸ்டர்,

“மைக்கேல் என்ன இது..? இங்கே இப்படி சத்தம் போடக்கூடாதுனு உனக்குத் தெரியாதா?” என்று அதட்டினார்.

சிஸ்டரின் குரல் கேட்டு உணர்வுக்கு வந்த செவப்பி, சட்டென்று சிலுவையை மார்பில் போட்டுக்கொண்டு ஓடி வந்தாள். அங்கே மைக்கேலை “போ வெளியே” என்று கோபமாக அதட்டிக்கொண்டிருந்த சிஸ்டரிடம் சென்று,

“தோத்திரம் சிஸ்டர்.. மன்னிச்சிடுங்க.. அல்லாம் என்னாலதான்” என்றவள், மைக்கேல் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கல்லறைப்படிகளில் ஏறி வாசலுக்கு வந்தாள்.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர்த் தடங்களைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

“யோவ் மாமா, இன்னாயா..? நீயா அயுவுற? இன்னாயா?” என்றதும் அப்படியே துக்கத்தில் வெடித்தான் மைக்கேல்

“செவி.. செவி.. ஏன் செவி இப்டி பண்ண?” என்றவன் அப்படியே அவளைக் கட்டிக்கொண்டு குலுங்கினான். அவளும் அவன் அணைப்பில் அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்.

அதற்குள் குப்பத்து ஜனங்கள் அவர்களைச் சுற்றிக் கூடிவிட்டார்கள். அதில் ஒருத்தி,

“டேய் மைக்கேல்.. அயுதது போதும்.. அவள கூட்டிகினு வூட்டுக்குப் போடா.. அங்க ஆரோக்கியம் கூவிக்கினே கீது” என்றாள்.

“வா செவி” என்றவன் செவப்பி கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

“மருமவ சர்ச்சுக்கு பூயிட்டு வர்துக்குள்ள இன்னா கல்ட்டா பண்ணிட்ச்சி பாத்தியா இந்த கெய்வி?” என்று அங்காலாய்த்தபடி கூட்டம் கலைந்து சென்றது.

அன்றிரவு எல்லோரும் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவி வைத்தபின்னர், குளித்துவிட்டு புடவையில் தன் உடலைச் சுற்றிக்கொண்டு படுக்கையறைக்குள் வந்து கதவைத் தாளிட்டாள்.

கைகளைத் தன் தலைக்குக் கீழ் வைத்து மல்லாந்து படுத்திருந்தான் மைக்கேல். ரூமில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு வந்து அவன் அருகில் படுத்தாள் செவப்பி.

காற்றுக்காக வைத்திருந்த ஜாலியின் வழியே ரோட்டு விளக்குகளின் மெல்லிய ஒளி கசிந்துகொண்டிருந்தது. அவ்வப்போது தூரத்தில் லைட் ஹவுசின் ஒளி சுற்றிச் சுற்றி வரும்போது தாளகதியில் ‘பளிச் பளிச்’சென்று மின்னிச் சென்றது.

‘தான் வந்து படுத்தும் தன்னைக் கவனிக்காமல் இப்படி ஏன் உம்மென்று இருக்கிறான்’ என்று யோசித்தவள்,

“யோவ் மாமா.. இன்னாயா மோட்டுவலயப் பாத்துக்கினு கீற..? நா ஒருத்தி பக்கத்துல வந்து படுத்துக்கினு கீறேன்ல்ல.. இப்டி திரும்புயா..” என்று அவன் முகவாயைப் பிடித்துத் திருப்பியவள், அப்போது பளீரிட்ட லைட் ஹவுஸ் வெளிச்சத்தில் அவன் கண்களில் கண்ணீர் தளும்புவதைப் பார்த்துப் பதறி,

“யோவ் ஏன்யா அயுவுற..? இன்னாயா ஆச்சி?” என்று கிசுகிசுத்தாள்.

“போ.. நீ ஒன்னும் எங்கிட்ட பேசவும் வாணாம்.. கொஞ்சவும் வாணாம்..” என்று சொல்லிக்கொண்டே அவள் கையை உதறினான்.

“யோவ்.. ஏன்யா கத்தற.. பக்கத்துல ஆத்தா இருக்கே.. அது காதுல வுயப் போவுதுயா.. நா இன்னா தப்பு செஞ்சேனு என்ன இப்டி மூஞ்சால அடிக்கிற?” என்று நா தழுதழுக்கக் கேட்டவுடன் மைக்கேல் அப்படியே உடைந்து விசும்பினான்.

“யோவ்.. யோவ்.. இன்னாயா ஆச்சி இன்னிக்கு வுனுக்கு..? இன்னாயா இப்டி கொயந்த மேரி அயுவுற.. எனுக்கு வுன்ன வுட்டா யார்யா கீறா?” என்று அவள் சொன்னதும்..

“செவி.. செவி.. இன்னிக்கி நீ காணாம பூட்டேனு அல்லாரும் குபார் பண்ணப்ப நா எப்டி துட்ச்சிப் போயிட்டன் தெலியுமா?” என்றவாறே அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவனைச் சற்று விலக்கி

“யோவ்.. யாரு வோணா இன்னா வோணா சொல்ட்டும்யா.. நா வுன்ன வுட்டுப் போவேனு நீ நெனிக்கலாமாயா..? இம்மா நாள் நீ எங்கூட குடித்துனோம் பண்ணி என்ன பிரிஞ்சிகிட்டது அவ்ளோதானாயா?” என்றாள் கோபமாக.

“செவி.. நீ என்ன வுட்டுட்டு போவ மாட்டனு தெலியும்.. ஆனா அப்ப மன்சு எப்புடி துட்சிச்சி தெலியுமா?” என்றவனைப் பார்த்து

“செரி செரி.. அதான் நா வந்துட்டன்ல்ல.. பின்ன இன்னாத்துக்கு சும்மா அயுதுகினே கீற..? இந்தா மூஞ்சியை தொட்சிக்கோ” என்று தன் முந்தானையை எடுத்து அவன் முகத்தைத் துடைத்தாள்.

அப்போதுதான் பளிச்சென்று அடித்த லைட் ஹவுஸ் வெளிச்சத்தில் அவள் வெற்றுடம்பைக் கவனித்த மைக்கேல்,

“ஏய் செவி.. இன்னா இது இன்னிக்கி இப்டி பேஜார் பண்ற?” என்றவன் வாயைப் பொத்தி,

“கூவாதேனு சொன்னா கேக்க மாட்டியா? யோவ் நீ எம்மேல எம்மாம் பாசம் வைச்சிருந்தா அல்லார் மின்னாலயும் அப்டி அயுதிர்ப்ப? எம் மன்சே ஒரு மாரி ஆய்ட்ச்சியா.. நா வுனக்கு திலுப்பி இன்னாயா செய்ய மிடியும்? இந்த சிறுக்கிகிட்ட இன்னாயா கீது..? அதான் இன்னிக்கி வுனுக்கு.. வுனுக்கு.. போய்யா.. எனுக்கு வெக்கமா கீது” என்றவளின் புடவையை உருவி வீசியவன் அப்படியே அவள் மேல் படர்ந்தான்.

மேலே கறுக் கறுக்கென்று ஓடும் பழைய சீலிங்பேன் சத்தத்தோடு அவளின் முனகல் கலந்து கரைந்தது. சற்று நேரம் பொறுத்து மல்லாந்து படுத்தவன் மார்பின்மீது தலை வைத்துப் படுத்த செவப்பி,

“யோவ் எனுக்கு வுங்கிட்ட ஒன்னு கேக்கணும்னு ரொம்ப நாளா மன்சில கீது.. கேக்கட்டா?” என்றாள். 

“ஏய் செவி.. நீ கேக்காம.. யாரு என்னண்ட கேக்கப் போறா.. கேளு.. கேளு” என்றான் மைக்கேல்.

“என்னால ஒரு புள்ளையக்கூட பெத்துக் குடுக்க முடியல வுனுக்கு.. ஆனா எம்மேல இம்மாம் உசுரா கீறீயே.. எப்டியா?” என்று கேட்டாள். அதைக் கேட்டதும் தன் மார்பின்மீது படுத்திருந்த அவளின் கன்னத்தை வருடியபடியே,

“இதமாரில்லாம் கேட்டா நா இன்னா சொல்றுதுனு எனுக்குத் தெலியாது. எனுக்கு புள்ளையே வாணாம்.. கால்துக்கும் நீயும் நானும் இப்டியே இர்ந்துகினா போதும் செவி. நீதான் எனுக்கு புள்ளை பொஞ்சாதி அல்லாமே..” என்றவுடன், ஒரு கையை ஊன்றி அப்படியே தலையை உயர்த்தி அவனைப் பார்த்த செவப்பி,

“யோவ் எப்ப எங்கையில ஒரு புள்ளைய பெத்துக் குடுக்கப் போறேனு கேக்குதே கெய்வி.. அதுக்கு இன்னாயா ஜவாப் சொல்றது?” என்றாள்.  ஆனால் அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் அவள் உட்கார்ந்த நிலையில் அந்த மெல்லிய ஒளியில் தெரிந்த அவளின் திரண்ட மார்பகத்தை முறைத்துப் பார்த்தான். அதைக் கவனித்த அவள்,

“சீ.. நீ லொம்ப மோசம்யா” என்றாள் வெட்கத்துடன். அப்போது மைக்கேல்,

“செவி.. எனுக்கு ஒரு ஆசை. சொல்ட்டா” என்றான்.

“இன்னாயா.. சொல்லு” என்றாள்

“செவி.. நா அடுத்த சென்மத்துல வுனுக்கு மவனா பொறந்து இடுப்பிலய குந்திக்கினு பால் குட்சிக்கினே இருக்கோணும்னு ஆசையா கீது” என்றவனைப் பட்டென்று அடித்தவள், அப்படியே அவன் மேல் சரிந்தாள்.

“ஏய் யாருடி அது.. கொழந்த அழுவுறது கூடத் தெரியாம அப்படி தூங்கறது?” என்ற ஸ்டாப் நர்சின் குரலும் வீறுவீறென்று அலறிய குழந்தையின் குரலும் அந்த வார்டின் அமைதியைக் குலைக்க, நினைவுகள் அறுந்து சட்டென்று விழித்தாள் செவப்பி. தன் அருகில் படுத்திருந்த தன் மகனும் இந்தச் சத்தத்தால் விழித்து, கையையும் காலையும் ஆட்டி உடலை முறுக்குவதைக் கண்டவள் மெதுவாக அவனைத் தட்டினாள். அப்படியே அவளும் அவளை அறியாமல் தூங்க ஆரம்பித்தாள் ஆனால் அவள் மனம் தூங்கவில்லை, பழைய நினைவுகள் மீண்டும் கனவாய் மலர்ந்தன.

விடியற்காலையில் கட்டுமரத்தில் வலைவீசப் போனால், பத்து பதினொரு மணிக்கெல்லாம் திரும்பிவிடுவான் மைக்கேல். ஆனால் அன்று, போன வேகத்தில் திரும்பிவந்து தகரப் பெட்டியிலிருந்து லுங்கி சட்டையெல்லாம் ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்த செவப்பி,

“யோவ்.. எங்கயா போற..? துணிலாம் எத்துக்கினு..” என்றவளிடம்,

“பீட்டர் அண்ணன் ஆள் ஒருத்தன் வர்லியாம். போட்டுக்கு கூப்ட்டாரு.. பூயிட்டு வந்துட்றன்.. இந்தா அட்வான்ஸ் பத்தாயிரம் குட்த்தாரு..” என்றவனை ஆரோக்கியமும் செவப்பியும் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து குப்பமே ‘குய்யோ முறையோ’ என்று கூச்சலிட்டுக் கதறியது. பதறியடித்து எட்டிப் பார்த்த செவப்பியைப் பார்த்து, “ஐயோ.. மோசம் பூட்டோம்டி.. சிலோன்காரப் பாவிங்க சுட்டதில பீட்டர் அண்ணன் படகுல போனவங்கல்லாம் செத்துட்டாங்களான்டி.. டீவில சொல்றானே..” என்றதும், அப்படியே இடிவிழுந்தது போல் உட்கார்ந்தவள்தான்.

அதன்பிறகு என்னென்னவோ நடந்தது. மினிஸ்டர், கட்சித் தலைவர்கள் என்று யார் யாரோ வந்தார்கள். மீடியாக்காரர்கள் பேட்டியெடுத்தார்கள். எதற்கும் ஒரு வார்த்தை பேசாமல் அப்படியே பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் செவப்பி. ஒருவாரம் கழித்து மூட்டைபோல் கட்டி ஆம்புலன்ஸில் எல்லா சடலங்களும் வந்தன. கண்ணாடிப் பெட்டியில் முகம் மட்டும் தெரியும் மைக்கேலின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் செவப்பி.

“அடியே செவப்பி.. வாய வுட்டு குமுறி அயுவுடி.. இல்லனா நெஞ்சு வெட்சிடும்டி..” என்று அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள் ஆரோக்கியம்.

“ஒத்திப் போப்பா, ஃபாதர் வர்றார்.. பூசை வைச்சிட்டு சீக்கிரம் தூக்கணும்” என்ற குரல் கேட்டதும் அதுவரை சிலைபோல் இருந்தவள், ஃபாதர் செபஸ்டியனைப் பார்த்து வெறிப்பிடித்தவள் போல் ஓடி, “ஃபாதர்.. ஃபாதர் நீங்கதானே எனுக்கும் மாமாவுக்கும் கண்ணாலம் பண்ணி வைச்சீங்க.. அப்ப இன்னா சொன்னீங்க..? இரிவன் என்ச்சதை மன்சன் பிலிக்ககூடாதுனு சொன்னீங்கல்ல..? இப்போ பிலிச்சுட்டானுங்களே.. பிலிச்சிட்டானுங்களே..” என்று அவர் அங்கியைப் பிடித்து உலுக்கிக் கதறினாள்.

“விடும்மா.. விடும்மா.. ஃபாதர் பூசை வைக்கட்டும்.. ரவுசு பண்ணாத” என்றவர்களைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிய ஃபாதர் செபஸ்டியன், அவள் தலை மேல் கையை வைத்து,

“கர்த்தரே இந்தப் பெண்ணை ஆசீர்வதியும்..” என்றதும் அப்படியே உணர்ச்சிவசத்தால் மயங்கிச் சரிந்தாள்.

எல்லாம் முடிந்தது. அதிலிருந்து வீட்டைவிட்டு வெளியே வராமல் அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் நீர் தாரை தாரையாய் வடிந்துகொண்டிருந்தது. அவள் மனத்தில், “இனி நான் யாருக்காக வாழ வேண்டும்?’ என்ற கேள்வி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் தலைமுடியை இழுத்து முடிந்தவள், பட்டென்று கதவைத் திறந்தாள். தரையில் புலம்பிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்த ஆரோக்கியம், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

“செவப்பி எங்கடி போற?” என்று பதறினாள். அவளுக்கு பதில் சொல்லாமல் சுவற்றில் மாலை போட்டு மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கேலின் படத்தின் முன் நின்று கைகூப்பினாள். கண்களில் நீர் கோர்த்து, கன்னத்தில் வழிந்து அவள் முந்தானையை நனைத்தது. தன் கைகளால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டு முந்தானையை இழுத்துச் செருகிக்கொண்டு வாசலை நோக்கிச் செல்ல முனைந்தாள்.

குறுக்கே வந்து தடுத்த ஆரோக்கியத்தை விலக்கியபோது கிர்ரென்று தலை சுற்றுவதுபோல் தோன்றியது செவப்பிக்கு. தன் இருகைகளிலும் மண்டையைப் பிடித்தவள், ‘குபுக்’கென்று ஆரோக்கியத்தின் மேல் வாந்தி எடுத்தாள்.

“செவி.. வுனுக்கு இன்னாமா ஆச்சு..? ஏசப்பா.. ஏன்தான் இப்டி பண்றயோ தெலியலையே..” என்று அலறவும், அவள் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்தார்கள். அதே நேரம் இன்னும் இரண்டு முறை வாந்தி எடுத்த செவப்பி அப்படியே மயங்கி விழுந்தாள்.

“ஐய்யய்யோ.. புருஷன் பூட்டானு மருந்து கிருந்து குட்சிட்ச்சிசா இந்தப் பொண்ணு..  தூக்குங்க தூக்குங்க.. டேய்.. ஆட்டோ புட்றா..” என்று குப்பத்து ஜனங்கள் அடித்துப் பிடித்து கோஷா ஆஸ்பிடலுக்குக் கொண்டு சென்றார்கள்.  எமர்ஜென்சி வார்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ஆயா ஓடிவந்து,

“யாருமா செவப்பி பேஷண்டு கூட வந்து கீறது? டாக்டரம்மா கூப்பிடறாங்க..” என்றதும் ஆரோக்கியமும் இன்னொரு பெண்ணும் அவள் பின்னால் ஓடினார்கள்.

ஆரோக்கியத்தைப் பார்த்ததும் டாக்டரம்மா ஆயாவிடம்,

“இவங்கதானா அவுங்க?” என்றார். ஆரோக்கியம் பதற்றத்துடன்,

“இன்னாமா.. எப்டிமா கீறா என் மருமவ..? அவுளுக்கு ஒன்னும் இல்லியே?” என்றாள்.

“ஓ! மருமவளா? அதனாலதான் முழுகாம இருக்கிற பொண்ண இப்படி பட்டினி போட்டியா? உன் பொண்ணா இருந்தா செய்வியா?” என்றாள். ஆரோக்கியத்தால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை.

”ஏசப்பா..” என்று அழ ஆரம்பித்தாள். “ஏம்மா அழுவுற.. அவளுக்கு டிரிப்ஸ் போட்ட்டிருக்கேன். சரியாயிடும்.. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்.. இனிமேலாவது கவனமாக பாத்துக்க” என்றதும், இன்னும் குரலெடுத்து ஆரோக்கியம் அழுதாள்.

“ஏம்மா.. நல்ல விஷயம்தானேம்மா சொல்லியிருக்கேன்.. இதுக்கு எதுக்கு கூச்சல் போடற?” என்றதும், கூட வந்திருந்த பெண்மணி,

“ஐய்யோ.. கோச்சுகாதீங்க டாக்டரம்மா.. அவங்க புள்ள இப்பத்தான் செத்துட்டாரு.. ஆறு வருஷமா உண்டாகாம இருந்த மருமவ முழுவாம கீறா.. ஆனா புள்ள இப்ப இல்லீயேனு அழுவுது..” என்றதும்,

“ஓ பிட்டி.. சரி, இனிமே மாசாமாசம் இங்கயே செக்கப்புக்குக் கூட்டியாந்திருங்க” என்றபடி எழுந்து சென்றார். 

கொஞ்ச நேரத்தில் செவப்பி வெளியில் வந்தாள். ஆரோக்கியத்தை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

“ஐய.. அயுதது போதும் ஆரோக்கியம். உம் மவனே வந்து வுனுக்கு பேரனா பொறக்கப் போறான். ஏறிக் குந்து ஆட்டோவுல” என்றாள் உடன் வந்த பெண்மணி. ஆட்டோ சாந்தோம் நோக்கிப் பறந்தது.

‘டங்க் டங்’கென்று நான்கு முறை வார்டின் சுவர்க் கடிகாரம் அடிக்கவும் சட்டென்று விழித்தாள் செவப்பி. பக்கத்தில் படுத்திருந்த அவள் மகன், தன் பிஞ்சுக் கைகளால் அவள் நைட்டியை இழுத்தான். வாய் பாலுக்காக மார்பகத்தைத் துழாவியது.

“யோவ் மாமா.. பசிக்குதா?” என்றவள் தன் நைட்டியை நீக்கி குழந்தையை மார்போடு அணைத்தாள். அவள் மனக்கண்ணில் மைக்கேல் கண் சிமிட்டினான்.

  • வைகறையான்
Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More