மர(ற)ப்பேனா?

1 242

சிறுகதை

அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு பூரிப்பு அடைக்கிறாள். அக்குழந்தையின் முதல் சிணுங்கலில் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு ஆண் உணர வேண்டுமென்றால், அவனும் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே முடியும். படைப்பாளர்கள் தங்கள் படைப்பை எழுதி முடித்தபின் ஏற்படும் மனநிலையை ஒத்தது அந்தத் தாயின் மனது.

உணர்வுகளுக்கும் மூளையின் எண்ணங்களுக்கும் இடையில் விரல்கள் படும்பாட்டை அவ்வளவு எளிதில் எந்த எழுத்தாளனாலும் கூறிவிடமுடியாது. அப்படி ஒரு மனநிலையில்தான் இருந்தேன். எழுதும்போது நான் நினைக்காத சிலவற்றையும் என் விரல்கள் எழுதியதாக உணர்ந்தேன். விரல்களும் படைப்பாளிகள்தானே!

தொடுதிரை, தட்டச்சு என வந்துவிட்டாலும், மை சிந்தும் பேனா முனையும் காகிதமும் முத்தமிடும்போது வரும் நறுமணம், நாசியில் ஏறி மூளையைக் கிளறி, பற்றி எரியவிட்டு, மனத்தைக் குளிர்விக்கும். அந்த போதையை வென்ற ஒரு “….” இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

எழுதிமுடித்தபின் அந்தப் பேனா முனையைப் பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தேன்.

இந்தப் பேனா எனக்கு அவள் கொடுத்தது. அவளுக்குத் தெரியாது நான் ஒரு எழுத்தாளன் ஆவேன் என்று. இந்தப் பேனாவுக்கும்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் வாழ்க்கையில் பரிசாகக் கிடைத்த இரண்டாவது பேனா இது. அதன்பின் நான் யார் பேனா கொடுத்தாலும் வாங்கிக்கொள்வதில்லை. சிலரின் அன்பைத் தட்டமுடியாமல் பெற்றாலும் அதை யாருக்காவது கொடுத்துவிடுவேன்; பயன்படுத்துவது கிடையாது.

இந்த இரண்டாவது பேனாவை அவளிடம் இருந்து பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. இதுவும் அந்த முதல் பேனா போன்றே மரத்தாலான பேனா. என் முதல் பேனாவின் கதை எனக்குக் கோர்வையாக ஞாபகம் இல்லை.

அப்போதுதான் பலப்பக் குச்சியில் இருந்து பென்சிலுக்கு மாறியிருந்தேன். ஔவையார் ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு. கடற்கரையை ஒட்டிய வீடு என்பதால் உப்புக் காற்றால் கறுத்துப்போன நிறம் எனக்கு. என் அம்மாவும் இதே பள்ளியில் படித்தவர் என்பதாலும் என் ஆசிரியை அவர் பள்ளிக்கால நண்பர் என்பதாலும் சற்று கவனிப்பு அதிகம்தான், எல்லாவற்றிலும். அன்று கடன் வாங்கிக் கழிப்பது பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டு இருக்க, அவள் தன் தந்தையோடு வந்து சேர்ந்தாள். அகண்டு விரிந்த கண்கள் அவளுக்கு. இப்போதும் நான் கண்களை மூடி அவளை நினைக்கும்போது அந்தக் கண்களை மட்டும் அப்படியே என் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. ஆசிரியர் அவள் பெயரைக் கேட்க, அவளின் விரிந்த கண்கள் குளமாகிக்கொண்டிருந்தன. அவளின் தந்தைதான் ‘செண்பகம்’ என்றார்.

நான் இப்போது வைத்திருக்கும் இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்தவளை நினைத்துப் பார்த்தால், அவளின் கண்கள் என்மீது கோபத்தைக் கொட்டியதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் கல்லூரி முடித்துப் பத்து வருடங்களுக்குப் பின் ஒருநாள், வங்கி ஒன்றில் சந்திக்கும்போது தற்செயலாகப் பார்த்தேன். சலான் எழுதப் பேனா இல்லாமல் அருகில் நிற்கும் அவளிடம் கேட்கும்போதுதான் அவளைப் பார்த்தேன். மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அரை விநாடி தேக்கிவைத்த அந்தக் கண்கள், கொஞ்சம் கொஞ்சமாகச் சிவந்து தீயாய் எரிவதை அமைதியாய்ப் பார்த்து ரசித்துக்கொண்டே நின்றேன். “சாந்தி… பேனா குடு; எழுதிட்டுத் தந்துடுறேன்” எனச் சொல்லும்போதே சிரித்துவிட்டேன்.

செண்பகம் கண்களைத் துடைத்தவாறு நான் பார்க்கும் தூரத்தில் அமர்ந்தாள். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள். அருகில் போய் ஆறுதல் சொல்லி, கண்களைத் துடைத்துவிட வேண்டும் எனத் தோன்றியது. பின் ஒருநாள் அம்மாச்சி கொடுத்த மூனு பைசாவில் மதியம் சுட்ட பனங்கிழங்கு வாங்கி அவளுக்கும் கொடுத்தேன். ‘வேண்டாம்’ என்றவள், பின் வாங்கி அதை உரித்துத் தின்னத் தெரியாமல் முழித்தாள். உரித்து நார் எடுத்துக் கொடுத்தேன். ஒருநாள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளின் தந்தை எப்போதும் போல சைக்கிளில் அவளை அழைத்துப்போக வந்திருந்தார். என்னையும் ஏற்றிக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, அவள் வீடு என் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது என்று.

என் அம்மாச்சி என்றாலே ஊரில் அனைவருக்கும் பயம். எனக்கு விவரம் தெரியும்போதே என் தாத்தாவுக்குக் கண்பார்வை குறைந்துவிட்டது. ஐந்து குழந்தைகளையும் படிக்கவைத்து, வளர்த்து, கல்யாணம் செய்துவைத்து என, மொத்தக் குடும்பத்தையும் பார்த்துகொண்டு தாத்தாவையும் பார்த்துக்கொண்டாள். படிப்பறிவு இல்லாததால் யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என எல்லோரிடமும் சண்டைக்கு நின்று, பின்னர் அதுவே அவளின் குணமாகி இருக்கும் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது.

எங்கள் வீட்டின் பின்புறம் மல்லிகைத் தோட்டம் இருக்கும். தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை, முருங்கை என பலவகை மரங்களும் இருக்கும். அதைப் பறித்து பக்கத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சு காசு, பத்து காசு என விற்பதுதான் பிரதானத் தொழில் என் அம்மாச்சிக்கு. முருங்கைக்காய், கருவேப்பிலை எல்லாம் நானும் பலமுறை பறித்துக் கொடுத்திருக்கிறேன். செண்பகமும் நானும் அந்த மல்லிகைத் தோட்டத்துக்குள் கோவில் கட்டி விளையாடுவது என்பது எல்லா விடுமுறை நாட்களிலும் நடக்கும். ஒருநாள் விளையாட்டாகக் கற்களை அவள்மீது எறிய, அவள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வீட்டில் அனைவரும் கூடிவிட்டார்கள். எனக்கு பயத்தில் உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது.

அதுபோலத்தான் அன்று சாந்தியின் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கோபத்தை அடக்கமுடியாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். அன்று வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாருக்கும் முன் என்னை அறைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

கல்லூரி படிக்கும்போது எனது இறுதி ஆண்டு வகுப்பறையின் பக்கத்தில்தான் இளங்கலை ஆங்கிலம் முதலாம் வருட வகுப்பறை. என் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்தான் அந்த ஜன்னலின் வழியே அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து, அருகில் இருக்கும் அவளின் தோழியிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் வகுப்பறையில் ஆசிரியரும் அப்போது இல்லை. ராகிங் செய்யும் எண்ணத்தில் நேரே உள்ளே சென்று அவளின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். சாந்தி என எழுதி இருந்தாள். “சாந்தி… பேனா குடு.. எழுதிட்டுத் தாரேன்” என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள்.

என் அம்மாச்சி, செண்பகத்தின் அப்பா, அம்மா, மாமா என இன்னும் பலர் கூடி நிற்க, நான் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றேன். அப்போது செண்பகம் வாதாம் மரத்தைக் காட்டி, யாரோ இந்தக் காயை அடித்துப் பறிக்கக் கல் எறிந்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறி அழுதாள். நானும் அழ ஆரம்பித்தேன். அம்மாச்சியும் இன்னும் சிலரும் அசிங்க அசிங்கமாகக் கல் எறிந்தவனைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வார்த்தைகளுக்குள் எனக்கு மட்டும் அவர்களே தெரிந்தார்கள். இன்றுவரை அவள் மண்டையை நான்தான் உடைத்தேன் என நானும் யாரிடமும் சொல்லவே இல்லை.

அவள் தலையில் மஞ்சள் தூளும் காப்பித்தூளும் வைத்து அமுக்கினார்கள் என் அம்மாவும் சித்தியும். அவளின் அப்பா சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனைக்குப் பறந்தார். அடுத்தநாள் சுட்ட பனம்பழத்தை அவளுக்காகப் பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன். “வெட்டி நார் உரித்துக் கொடேன்” என்றாள். அதை இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். சாந்தியிடம் “சாந்தி.. சாந்தி..” என முணுமுணுத்தபடி வங்கியில் சுற்றியும் கூட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தித் தப்பித்தேன். சாந்தி கொஞ்சம் சாந்தியடைந்ததாகத் தெரிந்தது. கண்களை ஒருமுறை மூடித் திறந்தவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள், பழைய நினைவுகளையும் சேர்த்தே. தன் கைப்பையிலிருந்து மரப்பேனா ஒன்றை எடுத்து என் கையில் திணித்துவிட்டு யாரையோ தேடினாள்.

அந்த வகுப்பில் அனைவரும் எங்களையே பார்க்க அவள் அந்த டப்பாவைப் பல்லால் கடித்துத் திறந்து, பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினாள். இப்படித்தான் நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு. பின் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் பேனாவைக் கேட்பாள். அல்லது, அந்தப் பேனாவைக் கேட்பதற்காகவே பார்ப்பாள். நான் ‘வா, போ’வில் இருந்து வாடி போடி வரைக்கும் வளர்ந்துவிட்டேன். ஆனால் அவள் மரியாதையைக் குறைத்து என்னைப் பெயர் சொல்லிக்கூட அழைத்ததில்லை.

எங்கள் கல்லூரி இறுதி நாளும் வந்தது. சாந்தியின் கண்கள் பட்டாம்பூச்சிபோலப் படபடக்க, என் முன் வந்து நின்றாள். அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றுகொண்டு இருந்தாள். வார்த்தைகளைத் தேடுவதைக் கண்கள் காட்டிக் கொடுத்தன. சில வார்த்தைகளை விழுங்குவதை அவள் சங்குக் கழுத்து படம்பிடித்துக் காட்டியது. ஒரு வழியாக வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களாக்கி என்னைப் பார்த்துக் கொட்டிவிட இதழ் திறந்தாள்.

“இந்தா.. நீ கேட்ட உன் ராசியான பேனா..” என அவளின் கைகளில் திணித்தேன். அவள் கண்கள் சிவக்க ஏதோ சொல்லவந்தாள்.

செண்பகம் எதுவும் சொல்லாமல் என்னைக் காப்பாற்றினாள் என்பதாலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளுக்கு அழிரப்பர் வைத்த பென்சில் ஒன்றைப் பரிசளித்தேன். ஒருமுறை அழகான மரப்பேனா ஒன்றை என்னிடம் கொடுத்தாள். அதில் அவள் பெயரை எழுதி முகர்ந்து பார்த்திருக்கிறேன். செண்பக வாசனை அதிலும் வந்தது.

அன்று அவர்கள் மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அழுதபடி கை அசைத்தாள். அப்போது அவளின் அப்பா என் அருகில் வந்து, “இந்தப் பேனா எனக்கு ராசியானது. உனக்கு எப்படிக் கிடைத்தது?” எனக் கூறி, பறித்துச் சென்றுவிட்டார். அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் கொடுத்திருக்கிறாள் என்பதை என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை.

புரிந்துகொள்ள முடியாததுதான் வாழ்க்கை. சாந்தியிடம் அன்று பேனாவைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவே இல்லை. அன்று அவள் கடைசியாகச் சொல்ல வந்த வார்த்தையை இப்போது கொட்டப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

“டேய்… இந்தப் பேனாவாவது உன்கிட்டயே இருக்கட்டும்” என்றாள்.

நான் அவளையே பார்த்து நின்றுகொண்டிருக்க, நான்கு கண்களிலிருந்தும் நீர் சுரந்தது. அதன் சுவை உப்பா? இனிப்பா?

  • சேது
Suvadu Book List
1 Comment
  1. Kalidas says

    Super sir padicha enake palaya visayangala njabaga paduthiduchu

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More