வேர்

0 499

சிறுகதை

ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.

இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று பள்ளிக்காலத்தில் கிடைத்தது. இப்போது இருக்கும் வாந்தி மாத்திரைகள் இல்லாத காலம். எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்து பசுமையை அதற்குண்டான இளம் சாரளைக் கொண்டு நகர்த்திய நாள் அது.

சுமை என்ற ஒன்று இல்லாத காலம் இருந்ததில்லை அப்பாவிற்கு. ‘அவளுக்கு இல்லாம என்ன?’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பகிராத குணம் அது. அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் ஒரே பெண்தான் நான் அவர்களுக்கு. பெரியதாக சண்டை ஏதும் நடந்ததாக ஞாபகம் இல்லை.

‘இன்றைக்கு ஏன் இத்தனை ஆராய்ச்சி?’ என்று தோன்றிய நொடியில், காரின் சத்தம் கேட்டுக் கலைந்து கைப்பையோடு வெளியேறி தொற்றிக்கொண்டேன்.

பழைய வீட்டிலிருந்து இந்தப் பயணம் தொடங்கியிருந்தால் இந்நேரம் அப்பா கதவருகில் வந்து நிற்பார். எல்லா தைரியங்களை கற்றுத் தந்துவிட்டாலும் இன்னும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதற்கான சந்தேகமது.

‘என்ன பார்த்தாலும் எல்லாம் பார்க்க முடியாது’ என்பதை அம்மா ஒருமுறை வேறொரு மொழியில் சொல்லும்போது அவருக்கு இன்னும் இரக்கம் வந்தது.

பெண் பார்த்துவிட்டுப் போனவர்களைப் பற்றித் தனியாகக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்துகொண்டு வந்து சமர்ப்பித்தார். தேர்வுத் தாளில் என் மதிப்பெண்ணைக் கூட்டி சரி பார்க்கும் மனநிலையில் வளர்த்தவருக்கு வேறென்ன தெரியும்!

ஒன்று நூறு அல்ல; ஆயிரம் முறை எந்த அர்த்தத்தில் கேட்டாலும் எனக்கென்று எந்தத் தனிப்பட்ட விருப்பமுமில்லை என்று நானாகவே நேரடியாகச் சொன்ன பின்புதான் திருமணத்தின் அடுத்த பக்கத்தைப் பார்க்கப் போனார்.

அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“நீ சாப்பிடல.. என்ன பண்ணப் போற…?”

அவளுக்கு வேறென்ன கேட்கத் தெரியும்? நிழலில் வளர்ந்த செடி அவள். புதிதாக எதையும் அனுமதிக்காத பூங்காச் செடி. அப்பாவையும் என்னையும் தவிர வேறொரு உலகம் அறியாதவள். ஒருவேளை நானும் அம்மாவை ஒத்திருந்தால், இந்தப் பயணத்திற்குத் தேவை இருந்திருக்காதுதான்.

பறக்கத் தொடங்கி, பேசும் நேரம் நீண்டு, ஒரே மாதத்தில் இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டோம் என்ற முதல் பொய் வானம் போல நீலமாய் இருந்த நாள் அது. என்னுடைய வருமானத்தையும் இன்ன பிற சாகச விருப்பங்களையும் சொல்லிகொண்டிருந்தேன் அப்போது.

எதிரிலிருந்து வரும் வார்த்தைகளின் கனத்தைக் கூர்ந்து கவனிக்கும் சாகசத்தை அப்பா எனக்குக் கற்றுகொடுக்கவில்லை.

துணை என்ற ஒன்றை இருபாலரும் இவ்வளவு உணர்வுகளைக் கொண்டு அணுகவேண்டிய அவசியமில்லை என்பதை நான் புரிந்துகொள்ள இருபது மாதங்களாயின.

‘நடுவில் அறுத்தாலும் வளரும் மரம் உள்ளபோது, மனிதனுக்கு வேர் இல்லாமலா போகும்?’ என்ற சொலவடை எதன் வழியாக வந்ததோ?! இதோ, இந்தப் பயணமும் அதன் வழியாகத்தான் நிகழ்ந்தது.

எனக்காக இளையராஜாவை நிறுத்தி வைத்துவிட்டு, உணவகம் ஒன்றில் நுழைந்தார் ஓட்டுநர். பசிக்கிறது. எதையாவது விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“நான் வீட்டுல சாப்பிட்டு வந்துட்டேன்… நீங்க சாப்பிடுங்க” என்று விலகிக்கொண்டார்.

மணி பத்தைத் தாண்டியிருந்தது. மாநகரத்தை நோக்கிய சாலையில் இருக்கும் உணவகம் அது. மென்சூட்டில் வந்த சப்பாத்தியை, அன்றொரு நாள் மாத்திரை விழுங்கியதைப் போல விழுங்கினேன். ‘நீ அப்படியேதான் இருக்கிறாய் ‘என்ற குற்றவுணர்வும் வந்து போனது. வெகுவிரைவாக வாகனம் ஏறி அமர்ந்து பயணமானோம்.

கடைசியாக, அடம்பிடித்த குழந்தையின் வாயில் திணித்த மிச்சச் சோற்றோடு ஒரு தகப்பன் அங்கிருந்தான். எனக்கு அப்பாவைத் தவிர வேறொருவரை அங்கு நிறுத்தி ஒப்பிட முடியவில்லை.

‘இனி உன்னோடு வாழ முடியாது’ என்ற வாக்கியம் நேரடியாக வரும்வரை காத்திருக்கப் பழகியவள் எவ்வளவு முட்டாளாக இருப்பாள்?! ஆம், நான் முட்டாள்தான். இல்லையென்றால் அப்படிக் கேட்டிருப்பேனா?

‘இந்தப் புகைப்படத்தில் இருப்பவள் யார்?’

பரவலாக திருமணத்திற்கு முன்பு பேசிய பொய்யைப் போல, ஏதாவது சொல்லியிருக்கலாம். ‘மவுனம் பொய்யைவிடக் கனமானது’ என்று யார் எனக்கு சொல்லித் தந்தார்கள்?!

இரண்டாம் நாள் இரவில், இருவரில், எனக்கு எந்த நெருடலும் இல்லைதான். மிக வேகமாக வெளியேறிப்போன உன் குற்றவுணர்வு, என்னுடன் படுக்கையில்தான் இருந்தது. நீ மறந்து, விட்டுச் சென்றுவிட்டாய்.

ஒரு கேள்வியில் இத்தனை பதில் கிடைக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. என் அப்பாவை நீ, ‘வா’ என்றாவது அழைத்திருக்கலாம். மகளைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலும் மரியாதையைக்கூட எதிர்பார்ப்பதில்லை.

‘எனக்கு வெளியில் வேலை இருக்கிறது. நீ உன் வீட்டில் இரு’ என்று சொன்ன நீ, ரயில் நிலைய வாசல் வரை ஏன் எதுவும் சொல்லவில்லை?

எல்லா அழைப்புகளிலும் விருப்பமில்லாமல் பேசிய உன் வார்த்தைகள் என் வீட்டுச் சுவற்றில்கூட இல்லை.

ஆண்கள் என்றால் தைரியசாலிகள் என்ற மனநிலையை, கண்டிப்பாக நான் என் அப்பாவிடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் வாழ்வில் தைரியம் என்பது வேறொன்று.

இருபுறமும் காவேரி, எந்த இரைச்சலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சொல்லப்போனால், நதியின் வாழ்வுதானே பெண்ணின் வாழ்வு! வேறு வழியில்லாமல் இருவரும் தானாக உருவாக்கியதைப் பெருமையாகக் கருதாமல் கரைந்துபோகிறார்கள். நதிதானே இங்கே கடலை உருவாக்கியது?!

வேறு காட்சி வேண்டாம் என்று கண்ணாடியை ஏற்றிக்கொண்டேன்.

“முதல்ல அவருக்கு சொல்லு. இல்ல.. நான் சொல்லட்டா?” அம்மாதான் தொடங்கினாள்.

சில சம்பவங்களை உடனடியாகக் கடத்திவிடுவதுதான் சரி எனப் புரிந்துகொண்ட சந்தர்ப்பமது.

“அதுக்கு என்ன…?” என்ற உன் கேள்வி, திருமண வாழ்வில் முதன்முறையாக எனக்கு கண்ணீரைத் தந்தது.

“நான் ரெண்டு நாள்ல வந்துருவேன்… அப்படியே இரு” என்பதன் அர்த்தம், ‘எந்தக் கற்பனையும் என் கற்பமும் வேண்டாம்’ என்ற அறிகுறியாக எனக்குத் தென்படவில்லை.

அம்மாவை வெளியில் அமர்த்திவிட்டுதான் பேசத் தொடங்கினோம். எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை என்கிற வார்த்தைகளை மிக நாசூக்காக வெளியில் கொட்டிக் கிளறிக்கொண்டிருந்தாய். மீண்டும் ஒருமுறை நான் அழத் தயாராக இல்லை என்பதே உனக்கு அதிர்ச்சியாகவும் ஆசுவசமாகவும் இருந்திருக்கலாம்.

எனக்கு அங்கேயும் ஒரு ஆறுதல் இருந்தது. என் அப்பாவின் தேர்வு தவறானது என்பதை, அவர் அறியாமலே இறந்து போனது.

குழந்தை எனக்கு வேண்டாம் என்பதை, எவ்வளவு அழகாக உன்னால் சொல்ல முடிந்தது?! ‘உன் வாழ்வு எதிர்காலம் இல்லாமல் போகும்’ என்று எனக்கு நீ தந்த அறிவுரை, தேவையான ஒன்றுதான். அதனால்தான் உன் கையெழுத்து கொண்டு கரு கலைத்தேன். நாளை அது கேட்கும் கேள்விகளுக்கும் உன்னிடம் மவுனம்தானே இருக்கும்? இதோ, மாநகர எல்லை வந்துவிட்டது. நாளைய இறுதித் தீர்ப்பில் எல்லாம் முடிந்துபோகும்.

என்னிடம் எல்லாப் பெண்கள் முன்வைக்கும் கேள்வி இருக்கிறது. ‘என்னைவிட எதில் அவள் உயர்ந்தவள்?’ என்ற கேள்வி. நிச்சயமாக நான் அதைக் கேட்கமாட்டேன்.

உன்னைவிட நானும் தாழ்ந்துவிடவில்லை என்ற நம்பிக்கை வந்த பின்பு, உன் மவுனத்தைவிட இந்த வாழ்வு பெரியதாகத் தெரிகிறது.

அன்பைச் சுமந்து வளர்ந்தவளிடம் வேறென்ன வெளிவரும்? எப்படி எல்லாப் பெண்களும் உனக்கு ஒன்றுபோல் இல்லையோ, அப்படியே எனக்கும் எல்லா ஆண்களும் ஒன்றுபோல் இல்லை.

‘நீ வெட்டியது மேல் கிளைதான். எனக்கு இன்னும் வேர் இருக்கிறது’ என்ற எண்ணம் வந்தபோது அனிச்சையாக இளையராஜா பாடிக்கொண்டிருந்தார். நன்றாகத் தூக்கம் வந்தது.

  • முத்து ஜெயா
Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More