தவி:ப்பு

6 486

ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு  சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இறங்கியபடி பலர் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த இருண்ட பாதாள வளிமண்டல அறைக்குள் நுழையும்போது, நீண்ட அறையெங்கும் எதிரொலிக்கும்படி கணினி ஒலிப்பெருக்கியின் குரல்.

“விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், இன்னும் எட்டு நிமிடங்களில் முதலாம்  நடை மேடையில் வந்தடையும்“ என்று அறிவிப்பு ஒலிக்கிறது.

தற்போது ரயில்வே நேரப்படி மணி 14:45. மேற்கூரையிலிருந்து தொங்கும் ஒளித்திரை அறிவிப்பு, ரயில் வரும் நேரம், செல்லுமிடம் போன்ற தகவல்களாக நகர்ந்துகொண்டிருந்தது.

பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில் சீருடையணிந்த பணிப்பெண், கணினியின் தொடுதிரையைப் பார்த்தவாறு பணியாற்றுகிறார். அவரது வலதுபுறத்தில் காகிதத்தில் செய்த கப்பல் ஒன்று செய்துவைக்கப்பட்டிருந்தது. அது நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று அடியாழத்தில் பயணம் செய்வதையும் சில இடங்களில் நகரத்தையே கடலாக்கி அதன் மேல் மிதப்பதைப் போலவும் மேலே பறந்தபடி பயணம் செய்வதைக் குறித்துக்கொண்டிருந்தது.

சில்வர் நிறத்தாலான தானியங்கிப் பயணக் கட்டணப் பரிசோதனை வாசலில், பயணிகள் தங்களது பயணச் சீட்டை ஸ்கேன் செய்து உள்ளே சென்றவாறும் வெளியே வந்தபடியும்  இருந்தனர்.

மனிதன் செவ்வக வடிவமுடையவன். மனிதனால் தன் தேவைக்கு வடிமைக்கப்பட்ட அனைத்து நுழைவாயில்களும் செவ்வக வடிவில்தான் இருக்கும். ஆனால் பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில், கை மட்டும் உள்நுழைய அரைவட்ட வடிவ நுழைவாயில் இருந்தது. அதனுள் டிக்கெட் கொடுக்கும் ஒற்றைக் கையும் அதனைப் பெறும் பல கைகளும் நுழைந்தும் பெற்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன.

பயணச்சீட்டு வழங்கும் பெண், தட்டச்சு செய்தபடியே பயணச்சீட்டுகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். தற்போதுதான் பணிக்கு வந்ததைப் போலிருந்தார். காலையிலிருந்து இந்தப் பணியைச் செய்து வந்த  மற்றொரு பெண், ஷிப்ட் முடிந்து வெளியேறும் முனைப்புகளுடன் அந்த அறைக்குள்ளே நின்றவாறிருந்தார்.

வரிசையில் ஒரு எட்டுப் பேர் நின்றிருந்தனர். முதலில் நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், “கிண்டிக்கு ஒரு டிக்கெட்“ என்றார்.

“சார், 20 ரூபாய் கொடுங்க“ என்று கணினியைப் பார்த்தவாறு கூறினார். அவர் 100  ரூபாய் கொடுத்தார். அதை வாங்க மறுத்து, “சில்லறை இல்ல சார்“ என்றார்.

அந்தப் பெரியவருக்கு இரண்டு ஆட்களுக்குப் பின்னால், ஒரு பெண் தனது  ஆறு வயது மகனோடு நின்றுகொண்டிருந்தார். ஒட்டுமொத்தக் காத்திருப்பு வரிசையில் சிறுவனின் இருப்பு, பொருந்தாத அளவில் உயரம் குறைவாக க் காணப்பட்டது.  அவனது தாயின் முகத்தில் ஒரு அவசரப் பார்வை தென்பட்டது.

இந்த 50  வயது மதிக்கத்தக்க ஆண், “என்கிட்டயும் சில்லறை இல்லமா“ என்றார். பயணச்சீட்டு வழங்கும் பெண், இப்போது அவர் தந்த நூறு ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டவாறே அவரைப் பார்க்கிறார். பின்னால் நின்றிருந்த அந்தப் பெண் வரிசையில் இருந்து வெளிவந்து, டிக்கெட் கவுண்ட்டருக்குள் பார்த்து  சிடுசிடுப்பான குரலில்,

“கொஞ்சம் சீக்கிரம்  டிக்கெட் கொடுங்க. என்  பையனுக்கு அவசரமா பாத்ரூம் போகணும்“ என்றார்.

அவசரத்தை அடக்கும் முயற்சியில் சிறுவனின் முகத்தில் ஒப்பனைக்காகப் பூசிய பவுடரில் வியர்வை வழிந்து, திட்டுத் திட்டாகப் படிந்திருந்தது.

“சார், சில்லறை இல்லன்னா ஸ்கேன் பண்ணுங்க சார்” என்றார் பணிப்பெண். மேலும் பயணிகளின் முகத்தை வெறும் சில்லறையாகவே மட்டும் பார்த்துக்கொண்டு, எதையும் காதில் வாங்காமல் விடாப்பிடியாக, மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்யும்படி சொன்னதேயே அலட்சியமாகச் சொன்னார்.

“என்கிட்டே ஸ்கேன் பண்ற வசதி இல்லமா“ என்றார் அவர்.

வரிசையில் நிற்கும் ஒருவர் தன் கால் சட்டைப்பையில் சில்லறைகளைத் துழாவினார்.  கூடி நிற்கும் பயணிகளின் காத்திருப்பு வரிசையைக் கடந்து சென்று, புதியவர் ஒருவர் கண்ணாடி அறையிலிருக்கும் இன்னொரு பணிப்பெண்ணிடம் பேசுகிறார்.

“ஒரு வாரத்துக்கு மட்டும்  ட்ராவல் பண்ற மாதிரி டிக்கெட் வேணும்“ என்றார்.

“நீங்க மெட்ரோ கார்டு வாங்கி யூஸ் பண்ணிக்கோங்க சார்“ என்று அந்தப் பெண் சொல்லக் கேட்டு அவர் விலகிச் செல்கிறார்.

சிறுவன் அந்தக் காகிதக் கப்பலை வினோதமான கண்களுடன் வரிசையில் நின்றபடி பார்த்தான். நகராத இந்த நீண்ட வரிசை, மூச்சுத் திணறலைக் கொண்ட நோயாளி ஒருவன், நீரில்  மூழ்கி நீர்க்குமிழ்களை எதிர்த்துக் கடினமாக சுவாசித்து மூச்சுக்கு முட்டுவதைப் போல உணர்த்தியது.

ஐந்தாவது ஆளாக நிற்கும் 50 வயதுடைய சர்க்கரை பாதிப்புள்ள நபர் ஒருவர் போனில், “சமைச்ச சாப்பாட்ட வீணாக்க வேண்டாம். நான் வீட்ல வந்து சாப்பிட்டுக்கறேன்” என்றார்.

கணினி, தனது பெண் குரலில் அறிவிப்பை வெளியில் நிரப்புகிறது.

“முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக நிலையத்தின் அனைத்து நிலைகளிலும் மின்தூக்கிக்கள் உள்ளன” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில், அச்சிறுவன்  அநாதரவான மனநிலையில் புதையுண்டபோது, தன் கால்சட்டையை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பற்றிக்கொண்டான். அவனுடைய ஒட்டு மொத்தப் புலனடக்கமும் அந்த இறுக்கமான பற்றுதலிலும் முகத்தின் சுழிப்பிலும் இருந்தது. அவன் தன் கண்களை மூடி முகத்தைப் பொத்தினான். அந்த மின்னொளி பரந்த இருண்டஅறை மேலும் இருட்டியது. உறக்கத்தில் நடப்பவன்போல ஒரு அடி முன்னோக்கி வைத்தான்.

பெரிய மனிதனின் வலிமையான குரலில்லாததால், சிறுவன் தன் அம்மாவின் அனுமதிக்காகக் காத்திருந்தான். புது இடம் என்பதால், அம்மா சிறுவனைத் தன் பார்வையிலிருந்து அகலவிடாமல் பார்த்துக்கொண்டாள். அவசரத்தின் நிர்க்கதியில்  நிற்பதால், இந்த நீண்ட அறை அவனுக்கு வினோதமாகவும் அச்சமூட்டுவாதகவும் இருந்தது.

அவன் குரல் அவனுக்குள் மூழ்கியது. ஒரு கட்டத்தில் அவன் வாயிலிருந்து முனகல் சத்தம்கூட வரவில்லை. அவன் உடலிலிருந்து உடனே வெளிவர வேண்டியது அவன் அடக்கி வைத்திருக்கும் சிறுநீர் மட்டுமே.

அவனுக்கு இந்த நரக வேதனை அனுபவிக்கும் நீண்ட அறை தேவையில்லை. உடனடித் தேவை கழிவறை. அதுதான் சொர்க்கம்.

கணினியின் அடுத்த ஒலிபெருக்கி அறிவிப்பு:

“விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், முதலாம் நடைமேடையில் இன்னும் 5 நிமிடத்தில் வந்து சேரும்.“

அறிவிப்பில் வண்டி வரும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்துகொண்டிருந்தது. அவன் சிறுநீரை அடக்கிக் காத்திருக்கும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் கூடிக்கொண்டிருந்தது.

அந்த பணிப்பெண்ணிடம் அனைவருக்கும் தரக்கூடிய அளவில் ஆடம்பரமாகவே சில்லறை இருந்தது. ஆனாலும் அவள் கையில் அவர் தந்த 100 ரூபாய்த் தாளைப் பிடித்தபடி, அவரையும்  மேஜை ட்ராயரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

காத்திருப்பின் அளவுகோல் நிமிட நேரத்திலும் மாறாமல் அப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. சிறுவனுடைய அவசரத்திற்குள் உலகம் மெதுவாக இயங்குவதாகத் தோன்றியது.

அறிவிப்பு, ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்து, ரயில் வரும்  நேரத்தை அறிவிக்க, கடிகார நேரம் கூடிச் செல்லச் செல்ல, மிகவும் குளிரூட்டப்பட்ட அறையிலும் பவுடர் வாசம் கலந்த வியர்வையில் சிறுவனின் குறு மயிர்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தன. சிறுநீரை வெளியேற்ற விடாமல் சூழல் தடுக்க, உள்ளுக்குள் அடக்கமுடியாமல் அவனும் தடுமாறினான்.

பதற்றமான கோணத்தில் அவன் கண்கள் உருமாறி, அங்கிருந்து கழிவறை நோக்கி ஓட முயன்றபோது,  இறுக்கிய அம்மாவின் பிடியை உறுவிக்கொள்ள முனைந்தான். அவனது அம்மா தடுக்கிறார்.

உடம்பில் ஊசி குத்துவதைப் போன்ற ஒரு தவிப்பு. டாக்டரிடம் ஊசி போட்டுக்கொள்ளும்போது, அவன் திமிறினால் அம்மா எப்படிப் பிடிப்பாரோ, அப்படியிருந்தது சிறுவனுக்கு.

மனிதன் பழக்கத்திலும் பழக்கத்திற்காகவும் வாழ்பவன். கட்டுப்பாடுகள் தனிநபரின் பழக்கவழக்கத்தை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது! பழக்கத்தை ஒதுக்கித் தள்ள முடியாமலும் பழக்கவழக்கம் நடைமுறைச் சட்டங்களால் பாதிக்கப்படும்போதும் மனிதன் குழப்பமடைந்து தோல்வியடைகிறான். ஆகவே சட்டம் தடுக்கும்போது பழக்கவழக்கமே ஆட்கொள்ளும். வாழ்க்கையில் தனிநபரைவிட, சமூக நிர்ப்பந்தம் உயர்ந்த அலகு இல்லை.

“கொஞ்சம் பொறுடா.. ஏன்டா இந்த அவசரம் உனக்கு?“ என்று அவனது அம்மா இயற்கைக்கு மாறாகக் கேட்டார். அதிலும் மூன்றாம் மனிதர்கள் முன் எச்சரிக்கப்பட்டது அவனுக்கு எரிச்சலூட்டியது. பொறுமையிழப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச யதார்த்தத்தை உணர ஆரம்பித்தான்.

இதென்ன பெரிய விசயம், இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலப் பணிபெண்ணின் அலட்சியம் இருந்தது.

சிறுவன் எந்த சுயவிருப்பமுமின்றி இருந்தான். அச்சிறுவனின் அப்பாவித்தனமும் வெளிப்படையான குணமும் சுற்றியிருப்பவர்களின் நெஞ்சைக்கூடக் குத்தவில்லை. தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் அவரவர் தங்கள் அவசரத்திலேயே, கவணின் உச்சியைத் தொட்ட கல்போல இருந்தனர். அவசரம், பயணிகளுக்குத்தானேயொழிய, பணிப்பெண்ணுக்கு அல்லவே.

சிறுவனின் அம்மா, “சீக்கிரம் கொடுங்கன்னு சொல்லிட்டே இருக்கேன்ல.. அவசரமா போகணும்“ என்று பொரிந்தாள்.

தற்போது சாப்பிட்டு முடித்த மயக்கத்தோடு, சோம்பலின் பலமான கொட்டாவியை விட்டபடி, முன்னால் நின்ற பயணிக்கு சில்லறையும் டிக்கெட்டும் கொடுத்தார். மனிதனின் அவசரத்திற்குக் குறைந்தபட்ச உதவி செய்யாவிட்டாலும் சிறுவனிடமோ அம்மாவிடமோ, தன் தவறை உணர்ந்ததாக ஒரு புன்னகைகூட முகத்தில் காட்டவில்லை.

சிறுவனின் சித்ரவதைக்குள்ளான காத்திருப்பும் ஏறக்குறைய நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பும் கடந்தன. அந்த அம்மா டிக்கெட் பெறும் கணத்தில்கூட, அவனது அவசரத்திலும் அங்குள்ள காகிதக் கப்பலை ரசித்துக்கொண்டிருந்தான்.

டிக்கெட் பெற்றவுடன், காத்திருப்பின் நேரத்தையும்  வலியையும் ஒருசேரத் தன் பாதத்தில் கடத்தி மிதித்தபடி, சற்று வேகமாக, ஆசுவாசம்  நிறைந்த கழிவறை நோக்கி அம்மாவும் சிறுவனும் விரைந்தனர்.

  • விசாலன்
Suvadu Book List
6 Comments
  1. R.Gomathisankar says

    மிக நுண்ணிய உணர்வுகளை குரலுயர்த்தாமல் சொல்கிற பாவனையில் கதை கவனம் ஈர்க்கிறது.

  2. Anita Srikanth says

    வணக்கம் ஐயா..
    படிக்க படிக்க அந்த குழந்தையோட தவிப்பு கண் முன்னால தெரியுது. சில சூழ்நிலைல நான் இப்டி தவிச்ச தவிப்பு கண் முன்னால வந்து போகுது.. நிஜமாவே இது தவிப்பு தான்.. அருமையான கதை..

  3. M.kaviyarasan says

    நல்லதொரு சிறுகதையொன்றை வாசிக்கக் கொடுத்தமைக்கு சுவடுக்கு நன்றி. கதையின் சொல்முறையமைப்பு அருமை. எவ்வித பிடறலுமில்லாம் செல்லும் போக்கும், இம்மாதிரியான ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. யதார்த்தமாக விவரிக்கிறது. தவிப்பு தவிக்க வைத்திருக்கிறது.

  4. kailash says

    usual narration at at the same time unfamiliar both prose and depth of writing on inner emotionals

  5. Sridhar says

    மேலோட்டத்தில் ஒரு அழுத்தம். இடத்தை நேரத்தை, சூழலை மனதில் பதியவைக்கும் படியான வார்த்தைகள் கொண்ட இயல்பான கதை

  6. Karan says

    No words to describe these short story. I can relate myself with this. Just awesome 👍… Thanks for the recommendation surender..keep rocking 💥

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More