யாவரும் கேளிர்?!

4 555

சிறுகதை

“குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?” கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி.

“ரொம்பத்தான் அக்கறை.. மில்லுக்குப் போனா குடும்பத்தை மறக்கற ஆளு.. என்னைய சொல்லாதீங்க. எல்லாம் என்னோட கிரகம். அப்புறம் பேசி என்ன பிரயோசனம்..” பதிலுக்குப் பொருமினார் மங்களம்.

“அடேங்கப்பா! கரடிவாவிகாரிக்கு வாயப்பாரு.. உன்கிட்ட போட்டி போட முடியுமா? ஊருக்குள்ள நடக்கிற அத்தன கூட்டத்துலையும் பேச்சால துவம்சம் செய்யும் எனக்கு, வீட்ல நேர் எதிர்தா போ..” என்று, ஆரம்பிக்க இருந்த சண்டையை விளையாட்டாக மடைமாற்றிவிட்டு, நிற்காமல் மெல்ல நழுவினார் கொல்லைப்பக்கம்.

ரவிக்கு திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணி. கம்பீரமான தோரணையும் தெள்ளத் தெளிவான பேச்சும் நேர்மையான நடத்தையும் ரவியைத் தொழிற்சங்கத் தலைவராக உயர்த்தின. ஊதிய உயர்வு, பணி நீட்டிப்பு, போதாக்குறைக்கு வடமாநிலத் தொழிலாளர்களால் பணியிழப்பு என, போராடக் காரணங்களா இல்லை?!

போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் முதலாளிகளுடனான மோதல்களும் தொழிற்சங்கத் தலைவர் ரவியை, சக தோழர்களுக்குப் போராளியாய் அடையாளம் காட்டின. குறிப்பாக, வடமாநிலத்தவரைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகினார் ரவி.

எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் பண்புடையவர். ஆனால் வடமாநிலத்தவரைக் கண்டால் அத்தனை வெறுப்பு அவருக்கு. “இந்த வடக்கனுங்க குறைஞ்ச கூலிக்கு வேலை செய்றதால, நம்மாளுக எத்தன பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க?! நம்ம கோட்டியப்பன், தொழில்ல அனுபவமிக்க ஆளு. பழைய ஆளுக்கு சம்பளம் அதிகமா கொடுக்கணும்னு நிறுத்திட்டு, அவரு சம்பளத்துக்கு இரண்டு பேர வேலைக்கு வைச்சுட்டான் இந்த பாழாப்போன கம்பெனிக்காரன். வேலை போன கவலையில, ஆளே போயிட்டாரு. அவருகூட வயசான ஆளு.. நம்ம பீட்டர் பொண்டாட்டி.. வேலையில்லாதவன்கூட வாழ மாட்டேன்னு, குழந்தைய தூக்கிட்டுப் போயிடுச்சு. நம்ம மில்லு வேலைனுதான்னு இல்ல; தமிழ்நாட்டுக்குள்ள எந்த வேலைக்குப் போனாலும் இவனுகதா இருக்கானுங்க. தொழிற்சங்கத்துக்குப் போனா தொழிலாளிகளோட புலம்பல கேக்கவே அத்தன விசனமா இருக்கு. அவங்க ஊர்லயே இருக்க வேண்டியதுதான? இங்க வந்து உயிரெடுக்குறானுங்க பீடா வாயானுங்க.. ச்சே! அவுங்க ஊர்ல யோசிக்காம ஓட்டுப்போட வேண்டியது; அப்புறம் வேலையில்ல, தண்ணியில்ல,பஞ்சம்னு இங்க வந்து நம்ம வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டியது..” என நார்த் இண்டியன்களை நாறுநாறாய் கிழிப்பார்.

இத்தனைப் பிரதாபங்கள் கொண்ட நம்ம மாவீரர்தான், இப்போது பொஞ்சாதிக்குப் பயந்து கொல்லைப்பக்கம் ஓடியுள்ளார். சரி.. ‘ஊருக்கு பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்டதானே?!’

“ஐயோ.. என்னங்க.. ஓடியாங்க. குட்டியப் பாருங்க..” என மரகதம் போட்ட கூச்சலில், தெருவே கூடியது. வலிப்பால் துடித்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

“அதிகக் காய்ச்சலால் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது. ஈரத்துணியால் சுற்றப்பட்டு குழந்தை நலமாக உள்ளது. ஊசி போடப்பட்டுள்ளது. இன்று இரவு மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவிட்டு, காலையில் போய்க் கொள்ளலாம்” என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவசர அலாரம் மருத்துவரின் அறையில் ஒலித்தது. பேசிக்கொண்டிருந்த மருத்துவர் அறையைவிட்டு வெளியே ஓட, ரவியும் பின்தொடர்ந்தார்.

தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, பதின்ம வயது இளைஞன் ஒருவன் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது ரவிக்கு.

உடன் வந்தவர், “சார், சீக்கிரம் பாருங்க சார்” என பதைபதைத்தார். அவசர சிகிச்சை அறைக்குள் அந்த இளைஞனோடு உள் சென்றார் மருத்துவர். அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பாதியில் விட்டுச் சென்ற மருத்துவருக்காகக் காத்திருந்தார் ரவி. வரவேற்பறைக்கு நேர் எதிராக அமைந்த அவசர சிகிச்சை அறையின் கதவைத் திறந்து மூடும்போது உள்ளே நடப்பவற்றையும் பேசுவதையும் ரவியால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

இதற்கிடையில் அந்த இளைஞனை அழைத்து வந்தவர், மதுபோதையில் இருந்த சில இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்வதைக் கவனித்த ரவி, அவருக்கு உதவ அருகில் சென்றார்.

“என்னங்க பிரச்சனை? என்ன ஆச்சு?” என ரவி கேட்கத் தொடங்கியபோது, மருத்துவர் இவர்களை நோக்கி வேகமாக வந்தார்.

“அந்தப் பையன் கூட வந்தது யாரு? காயங்களைப் பார்த்தா ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியல. என்னாச்சுனு அவனைக் கேட்டா இந்தில என்னமோ சொல்றான்..” என்றார்.

“சார் இந்த நாலு பேரும் அந்தப் பையன அடிச்சுட்டாங்க. நான்தான் தடுத்து இங்க கொண்டு வந்தேன்.”

“அப்போ போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமா?”
டாக்டர் கேட்டவுடன் அந்தக் குடிபோதை ஆசாமிகள் காலில் விழுந்து கதறத் தொடங்கினர்.

“சரி.. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, டாக்டர் திரும்ப அறைக்குத் திரும்பினார்.

ரவியை நோக்கித் திரும்பிய அவர், “அடிபட்ட பையன் வேலை செய்யுற ஹோட்டல்ல நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்; இவங்க நாலு பேரும் வந்ததுலயிருந்து குடிபோதையில பிரச்சனை பண்ணிட்டுதான் இருந்தாங்க. தமிழ் தெரியாத இந்திக்காரப் பையனைக் கூப்பிட்டு, தமிழ்ல ஏதோ சொல்லச் சொன்னாங்க. அவனுக்கு புரியல; திருதிருன்னு முழிச்சான். அவனை கையில் கிடைத்ததை வச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார். நல்லவேளையா நான் போய்த் தடுத்தேன். இல்லைன்னா குடிபோதையில் இருந்த இவனுக, அடிச்சே கொன்னுருப்பானுக, பாவம். மொழி தெரியாதனால இவங்க சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாம இருந்த பையன, ‘பதில் சொல்ல மாட்டியா?’ன்னு கேட்டுக் கேட்டு அடிச்சத பார்க்கவே கொடுமையா இருந்தது சார்.

என்ன கஷ்டமோ.. சொந்த ஊரு, சொந்த பந்தங்களை விட்டு நம்ம ஊரை நம்பி வராங்க. அவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவால்ல. கஷ்டம் கொடுக்கக் கூடாதில்ல சார்.. இவனோட முதலாளிக்கு இவனோட பேருகூடத் தெரியல. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ற அடிமையாகத்தான் நினைக்கிறாங்க, பாவம். இதுல, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறோம்.”

அவர் சொன்னது, ரவிக்கு நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உண்மை மெல்லப் புரிந்தது, தொழிற்சங்கத் தலைவர் ரவிக்கு.

  • நான்சி கோமகன்
Suvadu Book List
4 Comments
  1. Madhu Rajendran says

    ‘சிக்’கென்று இருப்பது தான் சிறுகதை ;. இது சிறுகதை. இது வட இந்திய தொழிலாளர் குறித்த ஒரு பார்வை ; மேம்பட்ட பார்வை ! வேகமான நடை. பாராட்டுகள் !

  2. Vyshu says

    கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி, உங்களுடைய கதை ,ஓர் அருமையான பொருள் விளக்கம்…
    My hearty felicitations..

  3. ம. செ. மோகன் ராஜா says

    சிறுகதை… விறுகதை..!
    வாழ்த்துக்கள்

  4. அ. அசரப் அலி says

    மிகச்சிறப்பான சிறுகதை.
    ஒரு சில அரசியல் கட்சிகள் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எதிர்மறை அரசியல் நடத்தி வரும் நிலையில் அவசியான சிறுகதையாக நினைக்கிறேன்.

    நான்சி அவர்களின் தந்தை கவிஞர் கோமகனின்

    தெற்கில் உதித்த தென்னவன்.
    வடக்கில் இருந்து வந்தவன்
    மேற்கு மலை இடுக்கில் நுழைந்தவன்
    மேகாலயாவில் பிறந்தவன்
    இந்தி பேசும் பேசாத
    இந்தியாவின் மாநிலம்
    எங்கெங்கு வாழ்ந்தாலும்
    உழைப்பாளர் ஓரினம்

    என்ற வரிகளை
    நினைவுபடுத்தும் கதை.

    வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More