மூன்றாம் விதி

4 407

சிறுகதை

பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த வித்துப்புட்டேன். மொபைல்ல நம்பர் இருக்குற அத்தனை பேருட்டையும் முடிஞ்சளவு கறந்துட்டேன். ஒரு ஹால், ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒன்னேமுக்கா செண்ட்டுல அரைகுறையா இந்த வீடு கட்டவே எனக்கு நாலு வருசம் ஆச்சு. அதுக்குள்ள பேங்குக்கு இ.எம்.ஐ வேற கட்ட வேண்டியதாயிருச்சு. இப்படி, இந்த வீட்ட இப்ப கட்டித்தான் ஆகணுமான்னு நினைக்காத நாளே இல்ல.

“வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்”ன்னு பெரியவுக சும்மாவா சொன்னாங்க?! பாதி உசுரும் பாதி உடம்பும் மொத்தமா போயும் முழுசா முடிக்க முடியல. கல்யாணத்தப் பண்ணி பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டு வந்த உடனேயே, நம்மல திருத்தி வழிநடத்த ஆரம்பிச்சுடறாளுக. என்னமோ நாமலாம் தறிகெட்டுத் திரியுற மாதிரியும் இவளுக வந்துதான் நமக்கு வாழ்க்கைய கத்துக் குடுக்குற மாதிரியும் நம்மல முழுசா வேற ஆளாவே மாதிப்புடுறாளுக. எப்படியாவது சொந்தமா ஒரு வீட்ட கட்டிப்புடணுமுன்னு மண்டைக்குள்ள இறங்கி வெதச்சுப்புட்டா மகராசி. ஆனா நம்ம முடிவெடுத்தா மட்டும் எதுவும் நடந்துடுமா என்ன? புள்ளைய இரண்டுக்கு மொட்டை போட்டு, குலதெய்வம் கோயில்ல கயறு கட்டி, வர்றவன் போறவன் சொல்லுற வேண்டுதலை எல்லாம் அவனவன் சொல்லுற மாதிரியே அப்படியே செஞ்ச பொறவுதான் பேங்கு லோன் சாங்சனே ஆச்சு. அதுவும் அந்த அழகர் கோயில் மலை மேல இருக்குற ஆறுபடை வீடுகள்ல ஒன்னான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்குப் போயி, அங்க பக்கத்துல ஏழு கல்லை எடுத்து அடுக்கி வைச்ச பிறகுதான் கிரீன் லைட்டே எரிஞ்சுது, இந்த ஆபரேசன் ஓன் ஹவுஸ் திட்டத்துல.

பத்தாயிரம் ரூபா வாடகை கொடுத்து, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீட்டுல எல்லா வசதியோட, ஊருக்குள்ளேயே பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி, புள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், எல்லாமே பக்கத்துலேயே இருக்குற மாதிரி ஒரு இடத்துல சௌக்கியமா இருந்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப ஊருக்கு வெளியே ரிங் ரோட்டோரம், எந்த வசதியும் இல்லாத, என்ன வேணுமின்னாலும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் வரவேண்டி இருக்கிற இந்த இடத்துல வீட்ட கட்டி, அதுல நம்ம பேர எழுதி சொந்த வீடுனு மார் தட்டிக்கணுமாம். இதுல இந்த இ.எம்.ஐ. மட்டும் பதினஞ்சாயிரம் மாசம் அஞ்சாம் தேதி வந்தா கட்டணும்.

வாழ மரத்துல இருந்து சாப்பாடு வரைக்கும் வெறும் அட்வான்ஸ் மட்டுமே குடுத்து கிரகப்பிரவேசத்துக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன். என் ராசிக்கு ஒம்போது ராசியும் எதிர்த் திசையில இருக்கறதால சிறப்புப் பரிகாரம் பண்ணணுமுன்னு நாலு பக்கத்துக்கு பூசை சாமான் வாங்க லிஸ்ட் வேற தந்தான் அந்த புரோகிதரு. நெருப்புல கொட்டி எரிக்கிறதுக்கு வாங்குன நெய் மட்டுமே ஐநூறு ரூவா. எனக்கு வந்த ஆத்திரத்துல அந்த புரோகிதரையே தூக்கி அந்தத் தீயில போடணுமுன்னு தோனுச்சு. அதுக்கு, எம்பொஞ்சாதி நான் கட்டுன தாலிய எடுத்து அவ கண்ணுல ஒத்திக்கிட்டா. எதிர்பார்த்த மாதிரி ஐநூறு பேத்துக்கு மேல கூட்டம் வந்துருச்சு மதியத்துக்குள்ளேயே. தலைக்கு கொறஞ்சது இருநூறு ரூவா மொய் செஞ்சாலும் இன்னைக்கு ஆகுற செலவுக்கு ஈடாகிருமுன்னு நிம்மதி வந்துருச்சு.

கிரகப்பிரவேசத்துக்காக வீட்டு வாசல்ல பந்தல் போட இடஞ்சலா இருந்த அந்த மரத்துக் கிளைகளை வெட்டிப்போட்ட கொப்பு ஒன்னுல காக்கா கூடு ஒன்னு இருந்திருக்கு. வெட்டுனவன் அதைப் பாக்காம வெட்டிட்டான். வாசல்ல இருந்த அந்த மரத்துல ரெட்டைக் கிளை இருந்தா பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் சண்டை வருமுன்னு அவன் சொன்ன காரணம் ஏத்துகிற மாதிரி இருந்ததால, ஒரு கொப்பை வெட்ட அனுமதிச்சேன். இப்ப அந்தக் காக்கா பாவமுன்னு மனசு வலிக்க அதைப் பாத்தா, அது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாம அடுத்த கொப்புல புதுக் கூடு ஒன்ன கட்டி முடிச்சு குடியேறிடுச்சு ஒரே நாள்ல. காக்காவுக்குலாம் எப்படித்தான் அதுக்குள்ள எல்லா லோனும் கிடைக்குதோ!

இந்த லோன் வாங்குற கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் ஒன்னு இருக்குன்னா, அது அந்த கவர்மெண்டு ஆபீஸ்ல அப்ருவல் வாங்குறதுதான். யாராருக்கு எவ்வளவு கொடுக்கணுமுன்னு ஒருத்தன் சொல்லுவான். அவன் யாருன்னு அந்த ஆபீசுல கண்டுபிடிக்கவே நான் நாலு பேத்துக்கு கத்தை கத்தையா செலவழிச்சது போக, டீ வாங்கிக் குடுக்கவே தனியா ஒரு லோன் போட வேண்டியிருந்துச்சு. அங்க இருக்கிறவன் கால்ல விழுந்து கெஞ்சி, காசையும் கொடுத்தாதான் காரியம் கொஞ்சமாவது நடக்கும்.

ஒவ்வொரு முறை இந்த இடம் ஒருத்தருட்ட இருந்து அடுத்தவனுக்குக் கைமாறும் போதும், இடத்தோட மதிப்புல பத்துல இருந்து இருவது சதவீதம் கவர்மெண்ட்க்கு வரி கட்டிதான் நம்ம பேருக்குக் கிரயம் பண்ணமுடியும். அப்படி இருந்தாலும் அதுல நம்ம இஷ்டப்படி ஒரு வீட்டக் கட்ட நம்மால முடியாதாம். அதைவிட ஒரு கொடுமை என்னன்னா, தண்ணிக்குன்னு போர் ஒன்னு போட்டேன். அதுக்கு கரண்டு கனெக்சன் வாங்கப் போனா, அம்பது மீட்டர் தூரத்துல வாய்கால் ஒன்னு இருக்குன்னு சொல்லி, பி.டபுல்யூ.டி ஆப்பீசுல நோ அப்சக்சன் சர்டிபிக்கேட்டு ஒன்னு கேட்டான். இதுல காமெடி என்னன்னா, அவன் வைச்சுருக்கிற மேப்ல இருக்கிற வாய்கால் நிஜத்தில எங்க இருக்குன்னு அந்த ஏரியாவுல இருக்கிற யாருக்குமே தெரியல. வேலூர்ல இருக்குற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் போய், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசி வாங்குன பின்னாடிதான் இந்த தோசம் தீர்ந்து, அந்த அப்ரூவல் கிடைச்சுது எனக்கு.

ஏழாவது பந்தி சாப்பாடு போய்கிட்டு இருக்கும்போது பாயாசம் தீர்ந்து போச்சுன்னும் அதுக்கு பதிலா சாப்பிட வர்ர எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்கணுமுன்னும் அவ வந்து மூக்க உறிஞ்ச, இல்ல இல்ல, என் ரெத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சுட்டா. பக்கத்தில கடை எதுவும் இல்லாததால மாப்ளைய கூப்ட்டு வண்டியக் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிவர அனுப்ப, அந்த நேரத்துல கவர்மெண்டு வண்டி ரெண்டு வந்து நின்னுச்சு. அதில இருந்து இறங்குன ஆபீசர்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. கிரகப்பிரவேசப் பத்திரிக்கையும் கொடுக்கல. வந்தவங்கள்ல நாலு பேர் அளக்கிற டேப் ஒன்ன எடுத்து, ரோட்டுல இருந்து என் வீடு வரைக்கும் அளந்து பார்த்துட்டு, பின்னாடி இருக்கிற அடுப்படி வரைக்கும் இடிக்கணும், ரிங்ரோடு அகலப்படுத்துறதுக்கு ஆடர் வந்துருச்சு, அடுத்த மாசம் வேலை ஆரம்பிக்கப் போகுது, ஆபீஸ்க்கு வந்து என்னைப் பாருங்கன்னு சொன்னாங்க.

மூக்க உறிஞ்சுகிட்டு பக்கத்துல நின்னவ, மூச்சப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டா. எனக்கு ரெண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனே தெரியாது. முழிச்சுப் பாக்கும்போது ஏதோ எழவு வீட்டுல இருக்குற மாதிரி ஒப்பாரிச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாலு வருசத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு அப்ரூவல் கொடுக்கும்போது இந்தமாதிரி பிராஜெக்ட்லாம் இல்லையாம். இப்ப கவர்மெண்ட்டே மாறிருச்சு, சிட்டியும் பெருசாயிருச்சுன்னு ஏதேதோ சொல்ல, எத்தன சாமிக்கு என்னென்ன பரிகாரமெல்லாம் செஞ்சு ஒழுங்கா நியாயமா ஒழச்சுக் கட்டுன வீட்டுல முழுசா ஒருநாள்கூட இன்னும் குடிபோகல. அதுக்குள்ள இந்த மாதிரி நடக்குதுன்னு அத்தனை சாமி மேலயும் கொலவெறி வந்துருச்சு.

ஓன் ஹவுஸ்க்கு கிரீன் சிக்னல் போட்டு ஆரம்பிச்சு வச்ச, அந்த அழகர்கோயில் மலை மேல ஒய்யாரமா உக்கார்ந்து இருக்குற பழமுதிர்ச்சோலை முருகன நேருக்கு நேர் பார்த்து, நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்கணுமுன்னு பொஞ்சாதி புள்ளைகள கூட்டிகிட்டு வந்து சேர்ந்தேன். அங்கே ரோடுலாம் புதுசா, அகலமா, வண்டிங்க வசதியா போய் வர்ற மாதிரி போட்டிருந்தாங்க. நாங்க வேண்டுதலுக்காக அடுக்கி வைச்ச அந்த ஏழு கல்லு எங்கன்னு தேடினோம். எல்லாரும் வேண்டுதலுக்கு கல்லு அடுக்கி வைக்கிற இடத்தை எல்லாம் எடுத்துதான் இங்கயும் ரோட்ட அகலமா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது.

நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.

  • சேது
Suvadu Book List
4 Comments
  1. GOMATHISANKARR says

    வீடு திரைப் படம் பார்த்த ஞாபகம் வந்தது.

  2. Anita Srikanth says

    எங்க அப்பா வீடு கட்டின நினைவு வருது.
    எங்க அப்பா லோன் எல்லாம் போடலை. ரிட்டயர்ட் ஆன பணத்தில வீடு கட்டினாரு..
    கட்டி முடியிர வரை என்ன பாடுபட்டோம் னு இந்த கதைல இருக்கு…

    //நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.//

    இந்த வரிகளை படிக்கும் போது கண்ணீர் வந்திச்சு…

    அழகான உணர்வுபூர்வமான இதை..

  3. கேசவராஜ் ரங்கநாதன் says

    லோன் வாங்கி வீடு கட்டும் பல பேரின் நிலைமை இது தான் இன்னைக்கு… வாடகை வீட்டுக்கு மாசம் 10000 கொடுக்க சொனங்கிக்கிட்டு 20000 ஈஎம்ஐயில் சொந்த வீடு வாங்கிட்டு போவாங்க… பிறகு தினம் தினம் நெருப்புல நிக்கிற மாதிரியான கடன்கார வாழ்கையை தான் இன்னிக்கு சோ கால்டு மிடில் கிளாஸ் வாழ்ந்துட்டு இருக்காங்க!

  4. பானுரேகா says

    Heart touching ! Home loan க்கு Form 16 la Paydrawing officers கையெழுத்தே போட மாட்டாங்க….EMI சரியா கட்ட மாட்டோமாம்… என்னைக் கூடவா நம்ப மாட்டாங்க அப்படின்னு சிறுபிள்ளைத்தனமா கேட்டுட்டு இருந்தேன்…😍

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More