கத்தாழைப் பள்ளிக்கூடம்

1 274

சிறுகதை

இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான்.

காலால் உரசி அந்தச் செம்மண்ணை மழைக்காலத்தில் ரசிக்கும் விருப்பம் கரிசலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். என்ன நட்டுவைத்தாலும் முளைக்கும் மண் அது. ஆனால் கரிசல் மண் அப்படி இல்லை. ஒவ்வொரு துகளும் சூரியனிலிருந்து உதிர்ந்தது போன்ற வெப்பத்தைத் தனக்குள் வைத்து, எப்போதும் எங்களுக்குக் கடத்திக்கொண்டிருக்கும்.

ஆவணி மழையில்தான் கரிசலை நாங்கள் மிகுதியாகக் கொண்டாடுவோம். சரசரவென்று பெய்யும் மழையில் முழுவதும் சகதியாக, கருமையில் பிறந்த குழந்தையின் கன்னம் போன்று எங்கள் உடலெல்லாம் அந்த மண் ஊரும்.

சிறுவனாக அந்த மண்ணில் உழன்ற கைகளை எவ்வளவு நாள் கழித்துப் பார்த்தாலும் பிசுபிசுப்பு மாறாத ஞாபகம் எல்லாருக்கும் இருக்கும். சரியாக் ஒன்றிரண்டு நாட்களை மட்டும் கழித்துவிட்டப் பார்த்தால், எனக்கும் ஊருக்கும் இடைவெளி இருபத்தியோரு வருடங்கள்.

எல்லாத் தேடலும் முடிந்தது என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருந்தேன். நிறைய கணங்களுக்கு மத்தியில் வாழ்ந்த ஊர், ஒரு ஆசுவாசமான பிரியத்தைத் தந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிஜம்தான்; அன்றைய நாளும் எனக்கு அப்படித்தான் இருந்தது.

விட்டுச் சென்ற இடமல்ல இது. நானாக விலகிச் சென்ற ஒவ்வொன்றையும் தேடினேன். ஆனால் கிடைக்காத ஒன்றைப் பற்றிய கவலை இன்னும் இருக்கிறது.

கத்தாழை முளைக்கும். அதுவும், செழித்துப் பழம் விடும் கத்தாழையை நீங்கள் கடைசியாக எங்காவது பார்த்ததுண்டா? நான் பார்த்திருக்கிறேன், கடைசியாக எங்கள் ஊரில். கத்தாழை என்றதும் சப்பாத்திக் கத்தாழை என்ற வட்ட வடிவக் கத்தாழை அல்ல இது. தென்னங்கீற்றின் சாயலில் வளரும் குருத்துக் கத்தாழை.  

எவ்வளவோ ஓடைகள் இருந்தாலும் அணைக்கட்டு மேட்டில் மட்டும் மேற்குக் கால்வாய் ஓரத்தில் வேலிக்கம்பி வலைபோல் ஒரே உயரத்தில் நெடுந்தூரத்திற்குக் கத்தாழைதான். பச்சைப் பசேரென்று கரிசல் மண்ணில் இரண்டு செடிகளைப் பார்க்கலாம், ஒன்று, கருவேலம் இன்னொன்று கத்தாழை.  

காலையில் எங்களுக்கு அந்த ஓடைதான் எல்லாமும். எல்லாமும் என்பதன் அர்த்தம், அரிய அந்தக் கத்தாழையின் இரண்டு பக்க முட்களுக்கு நடுவில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பார்த்தால் அறியலாம்.

கூரிய கருவேலம் முள்ளை வைத்துக் கத்தாழை நடுவில் எழுதலாம்; படம் வரையலாம்; வெட்டிப் பாதியை எடுத்தும் விடலாம். மருந்துக்காக அப்படி வெட்டிய கத்தாழையை நாங்களும் பார்திருக்கிறேம். சுண்ணாம்பு அடிக்க இப்போது வந்திருக்கும் பிரஸ்க்கு முன்பாகக் கத்தாழை நார்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எங்களுக்கு எழுதத்தான் பிடிக்கும்.

அப்போதைய போதையான வார்த்தைகளை எங்களுக்கு அந்தக் கத்தாழைதான் கற்றுத் தந்தது. இரண்டாவது வார்த்தைப் பள்ளிக்கூடம் அந்தக் கத்தாழைக் காடு. அடுத்த தலைமுறை கழிப்பறையில் எழுதிய சொற்களை நாங்கள் கத்தாழையில் அதற்கு முன்பாகவே எழுதியிருந்தோம்.

முதலில் எழுதி, பின்பு அந்தரங்கப் படம் வரைதலைப் பார்த்துக் குதூகளித்த கூட்டம் நாங்கள். காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளி நேரம் என்றால், சரியாக ஆறு மணியில் இருந்து எட்டரை வரை அந்த ஓடைதான்.

அப்போதுதான் தொடர்கதை ஒன்று எங்களுக்கு அதில் கிடைத்தது. பரிச்சயமான பெயர் உள்ள பெண்ணின் பெயரோடு, இன்னொரு பெயரும் அதில் இருந்ததை முதலில் முருகேசன்தான் கண்டுபிடித்தான்.

முருகேசனுக்குத் தெரியாமல் கத்தாழை ஓடையில் ஒன்றும் நடக்காது. ஓடைக்கும் அவன் வீட்டுக்கும் இருக்கும் தூரம் எங்களைவிடக் குறைவு. ஆனால் அதிகாலை வேளையில் எங்களால் மட்டுமல்ல; முருகேசனால்கூடக் கத்தாழைப் பக்கம் போக முடியாது. பாம்பின் தடமும் அதுதான்.

எந்தப் படம் யார் வரைந்திருக்கக் கூடும். அந்த இரண்டெழுத்து யாருடைய பெயர். இந்தக் குறியீடு, உறுப்புகளில் எதைக் குறிக்கிறது என்பது வரை எங்களுக்குக் கத்தாழை ஆசான் முருகேசன்தான்.

எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, அந்த இரண்டு பெயர்களுக்கான மனிதர்களை முருகேசன் எங்களுக்குச் சொல்லவே இல்லை. நாங்களாக யூகித்துச் சொன்ன எல்லா மனிதர்களையும் அவன் நிராகரித்தான். நிச்சயமாக அந்தப் பெயர்கள் எங்களுக்கு முன்பான தலைமுறையுடையது.

அந்தத் தலைமுறைக்கும் எங்களுக்கும் இடைப்பட்ட பையன் முருகேசன். பெயருக்குக்கூட அண்ணன் என்று அழைக்கமாட்டோம். ஆனால் எல்லா சேட்டை, சச்சரவுக்கு அவன்தான் மூலதாரி.

மணி ஐஸ் வாங்கித் தின்னும்போது முருகேசனுக்கு ஒன்றும் வாங்கிப் பள்ளி மைதானைத்தில் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்குத் தெரியும், ஏதோ ஒன்றை வாங்குவதற்கான கொடுக்கல் இது என்று.

“என்னடா… புதுசா..” என்றான்.

என்னால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை.

“சும்மாண்ணா…” என்று சமாளித்தேன்.

அவனாகவே சொல்லத் தொடங்கினான்.

“அது யாருன்னு தெரியலடா. ஆனா காலைல எழுதுற ஆளு, சாயங்காலம் அதைக் கீறி வச்சிடறாரு. இதுக்காகவே காலைல மொத ஆளா நான் பாக்கப் போயிர்றேன்..” என்ற மழுப்பிய சொல்லை முருகேசன் உதிர்த்தான்.

ஆனால் அது நிஜமல்ல. முருகேசன் பார்த்த எல்லாக் கத்தாழைப் பெயர்களும் அங்கேயே இருந்தன. எதுவும் அழிக்கப்படவில்லை.

எங்களுக்குள்ளகப் பேசி முடிவு செய்த பெண்ணொருத்தியின் திருமணம் மிக வேகமாக நடந்தது. அந்தத் திருமண பற்றிய தகவலில்கூட, நாங்கள் கத்தாழைப் பக்கம்தான் தேடினேன். ஆனால் முருகேசன் அங்கு இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை. பெருசுகள் பெரும்பாலும் கத்தாழை ஓடைக்குள் வரமாட்டார்கள். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். ஒரு மைல் தொலைவில் காலைக் கடனை முடித்துவிட்டு, ஏதாவது ஒரு பம்பு செட் பக்கம் ஒதுங்கி, வேப்பங்குச்சியைப் பல் இடுக்கில் வைத்தவாறு வந்துவிடுவார்கள்.

நாங்கள் முருகேசன்தான் இதற்குக் காரணம் என்று நினைத்திருந்தோம். நிச்சயமாக அதற்கு நேர் எதிரான மனிதர், நிறைய குடியில் விழுந்து மீள முடியாத மனிதராக இருந்தார்.

‘சரி சமமான பொருத்தம்’ என்ற எங்கள் மனது, அப்போது கரிசலைப்போல ஊமையானதுதான். நிலத்தோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்கான வீம்பு, அந்த இரண்டு பேரைப் பிரித்தது. சந்தேகங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டோம். பொது நிகழ்ச்சியில் விழுந்த புன்னகையைப் பார்த்தாகவும் நானே கோடு போட்ட ஒரு பக்கத் தாளைத் தந்ததாகவும் கத்தாழைக் கூட்டணியில் விஷயம் வந்தது.

கடைசியாக, கத்தாழையைத் தேடிக் கிடைக்காதபோது, அவரைப் பற்றிய சேகரிப்பு எனக்கு வேண்டும் எனத் தோன்றியது. ஊரைவிட்டு சற்றுத் தள்ளி, ஆனால் செம்மண் தளத்தில் இரண்டு குழந்தைகளோடு இருக்கிறார் எனத் தகவல் வந்தது.

அத்தோடு நானும் நின்றிருக்கலாம். கற்றாழையோடு அதே ஊரில் இரண்டாவது பெயர் இன்னும் இங்குதான் இருக்கிறது. நானாக ஊகித்த பெண், என் முன்னால் இன்னும் நடமாடுகிறாள். துயரங்களை மென்று விழுங்கி, அவள் போக்கில் போகும் பெண்ணொருத்தியை அந்தக் கத்தாழை விழுங்கிவிட்டதாகவே இன்று நினைக்கிறேன்.

எழுத்து என்னவாக வேண்டும் என்பதற்கான சாட்சி அவள். எந்தத் தவறையும் குற்றம் காணாமல் எல்லாவற்றையும் மறைத்து வாழ முடிந்த ஒற்றை மனுசியாக இன்னும் இருக்கிறாள். நல்லவேளையாக, இன்னோரு தெய்வமாக மாறாமல் உயிரோடு இருக்கிறாள் என்பதே என்னுடைய ஆசுவாசம்.

ஆனால், இப்போது எங்கள் ஊரில் கத்தாழை எங்குமில்லை. முருகேசனும் இப்போது அவ்வளவாக யாருடனும் பேசுவதில்லை.

  • முத்து ஜெயா
1 Comment
  1. Rasal says

    கத்தாழைக் காதலை எங்கே? என்று தேடவைத்து விட்டீர்களே நண்பரே…

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More