சோப்பு வாசனை

4 425

சோப்பு வாசனை – சிறார் கதை

நள்ளிரவு நேரம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா செல்வி, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள். திடீரென யாரோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு விழித்தாள். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள். அம்மாவும் அப்பாவும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

‘இந்த நேரத்தில் பாட்டுச் சத்தம் கேக்குதே! யாரா இருக்கும்? எங்கிருந்து சத்தம் வருகிறது?’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது குளியலறையில் இருந்து சத்தம் வருவது புரிந்தது.

‘இந்த நேரத்தில் யார் குளிக்கிறார்கள்? போய்ப் பார்ப்போம்’ என்று நினைத்தபடி குளியலறைப் பக்கம் சென்றாள் செல்வி. இப்போது சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது.

மெல்ல கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். குளியலறையில் ‘லாலலா.. லாலால்லா லாலலல’ என்று பாடிக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தது கண்ணாடி சோப்பு.

அதைப் பார்த்த சந்தன சோப்பு, “என்ன நண்பா.. இன்னிக்கு ஆட்டமெல்லாம் பயங்கரமா இருக்கு? என்ன விசயம்?” என்று கேட்டது.

“நான் இன்னிக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதான் நடனம் ஆடுறேன். வா நீயும் ஆடு” என்றது கண்ணாடி சோப்பு.  

“எதுக்கு இவ்வளவு சந்தோசம்? எனக்கும் சொன்னா நானும் ஆடுவேன்” என்றது சந்தன சோப்பு.

“இன்னைக்கு இந்த வீட்ல தண்ணி வரல. அதான் கொண்டாட்டமா இருக்கேன்.” கண்ணாடி சோப்பு பதில் சொன்னது.

“எனக்குப் புரியல. அதுக்கும் உன் ஆட்டத்துக்கும் என்ன தொடர்பு?” சந்தேகத்துடன் கேட்டது சந்தன சோப்பு.

“அட மக்கு.. தண்ணி வரலைன்னா என்ன நடக்கும்? இந்த வீட்டுல இருக்கறவங்க யாரும் கை கழுவ முடியாது. குளிக்க முடியாது. அப்போ அவங்க நம்மைப் பயன்படுத்த மாட்டாங்க. நாமும் தேயாம, கரையாம அப்படியே அழகா இருப்போம், இல்லையா? வா ரெண்டு பேரும் சேர்ந்து இதைக் கொண்டாடுவோம்..” என்று சொல்லிவிட்டு,

“லாலலா.. லா.. லாலலா..” என்று பாடியபடி தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்தது கண்ணாடி சோப்பு.

இதைக் கேட்ட சந்தன சோப்பு, “இது ரொம்ப தப்பு.. இப்படி யோசிக்காத..” என்றது.

“உனக்குப் பிடிக்கலைன்னா போ. இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே தண்ணி வராது. அதுவரைக்கும் ஜாலிதான்” என்றது கண்ணாடி சோப்பு.

‘தான் காண்பது கனவா அல்லது நனவா’ என்ற சந்தேகத்துடன் செல்வி பாப்பா திரும்பி வந்து படுத்துக்கொண்டாள். காலையில் எழுந்தவுடன் இதை அப்பா அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

பொழுது விடிந்தது. அன்று விடுமுறை நாள் என்பதால் செல்வியின் அப்பாவும் அம்மாவும் பரபரப்பு எதுவும் இல்லாமல் நிதானமாக எழுந்துகொண்டார்கள். சிறிது நேரம் கழித்து செல்வி பாப்பாவை எழுப்பினார் அப்பா.

“செல்வி கண்ணு.. எழுந்திருடா.. இன்னைக்கு நாம எங்கே போகப் போறோம் தெரியுமா?” என்றார்.

கண் விழித்த செல்வி, “தெரியலையேப்பா.. நீங்களே சொல்லுங்க..” என்றாள் படுக்கையை மடித்து வைத்துக்கொண்டே.

“பக்கத்து ஊர்ல சிலர் பள்ளம் தோண்டும்போது, நம்ம ஊருக்கு தண்ணி வர்ற குழாயை உடைச்சுட்டாங்களாம். அதைச் சரி செய்யுற வரைக்கும் நம்ம ஊருக்குத் தண்ணி வராதாம்” என்றார்.

செல்விக்கு நேற்று இரவு நடந்தது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. அப்பா தொடர்ந்து சொன்னார்.

“தண்ணி லாரி வரச் சொல்லி இருக்கோம். ஆனா அவங்களும் நாளைக்குதான் வருவாங்களாம்” என்றார்.

“அச்சச்சோ.. அப்படின்னா நாம எப்படிப்பா குளிக்கிறது?” என்றாள் செல்வி.

“அதனாலதான்.. நாம இன்னைக்கு..” என்று சொல்லி நிறுத்தினார்.

“அப்பா சொல்லுங்க.. அதனால.. நாம இன்னைக்கு..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் செல்வி.

“பக்கத்துத் தோட்டத்தில் இருக்கிற பம்ப் செட்டுக்கு குளிக்கப் போறோம்.. நீ போய் சோப்பு எடுத்துட்டு சீக்கிரம் வா..” என்றார் அப்பா.

குளியலறையில் இருந்து இதைக் கேட்ட கண்ணாடி சோப்பு திடுக்கிட்டது.

“குளியலறையில் வரும் தண்ணீரின் வேகத்தையே நம்மால் தாங்க முடியாதே.. பம்ப் செட் வேகத்தை எப்படித் தாங்கப் போகிறோம்? நாம ஒரே நாளில் முழுமையா கரைஞ்சு அழிந்து போயிடுவோம்” என்று சொல்லிப் புலம்பியது.

இதைக் கேட்ட சந்தன சோப்பு சிரித்துக்கொண்டே, “பார்த்தாயா.. தண்ணீர் இல்லைன்னா ஜாலியா இருக்கலாம்னு நீ நினைச்ச. ஆனா இப்போ இன்னும் அதிகமான தண்ணீரைச் சமாளிக்கணும்.

ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ.. தண்ணி இருக்கறதாலாதான் மனிதர்கள் நம்மை உருவாக்கறாங்க. வாங்கிப் பயன்படுத்தறாங்க. நமது வேலையே தண்ணீரில் கரைந்து மனிதர்களை சுத்தமா வச்சுக்கறதுதான்.

அதுமட்டும் இல்லாம, ‘சுத்தம் சோறு போடும்’ அப்படின்னு ஒரு பழமொழியே இருக்கு. மனிதர்களைச் சுத்தமா வச்சுக்கறதுதான் நம்ம வேலை. நமக்கான அந்த வேலையைச் செய்ய நாம தயங்கக்கூடாது.

தண்ணீர் இல்லைன்னா நமக்கு இங்கே வேலையே இல்லை. இது உனக்கும் எனக்கும் மட்டும் இல்ல. தண்ணி இல்லைன்னா மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் எதுவுமே இந்த பூமியில் வாழ முடியாது. ஆனா இதைப் புரிஞ்சுக்காத பலர் தண்ணீரை வீணாக்கிட்டு பின்னாடி கஷ்டப்படறாங்க. அதனாலதான் திருவள்ளுவர் தாத்தா, ‘நீரின்றி அமையாது உலகு’ அப்படின்னு சொல்லி இருக்கார்” என்று கூறி முடித்தது.   

“நல்லா புரிஞ்சுகிட்டேன். நாம எல்லாருமே நமக்கான வேலையைச் செய்யத் தயங்கக்கூடாது. இனி என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சிரித்துக்கொண்டே சொன்னது கண்ணாடி சோப்பு.

அப்போது குளியலறைக்கு வந்த செல்வி பாப்பா, சோப்புகளைத் தூக்கிக்கொண்டு பம்ப் செட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள். தாங்களும் பம்ப் செட்டில் குளிக்கப்போகும் மகிழ்ச்சியோடு சோப்புகளும் செல்வியுடன் சேர்ந்து ஓடின.  

  • சாய் சக்தி சர்வி
4 Comments
  1. Nandhini Arumugam says

    எளிமையான கதை..ஆனால் சோப் தான் சுத்தம் தரும் என்பது சற்று நெருடல்.ஆனால் நீர் குறித்த கருத்து super

  2. Indhu says

    சிறப்பான கதை….

  3. miyav says

    சிறப்பு

  4. சுதர்சனம்.E.S says

    Nice simple story with big message which is need of the hour! 👍👏

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More