அக்கா

1 419

சிறுகதை

“அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு…”

சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?!

இரவு தூங்கியவர் காலையில் எழவேயில்லையாம். கதறி அழுதான் அண்ணன். ‘இப்படி விடியத்தான் காத்திருந்ததா இந்த ஞாயிறு’ என்று ஒரு கணம் நாளினைச் சபித்துத்கொண்டது நாக்கு.

“அக்காவுக்கு சொல்லிட்டியாண்ணே?”

அடுத்த வார்த்தையாய் இதுதான் வந்து விழுந்தது கதிரிடமிருந்து.

“இப்பத்தான்டா டாக்டரக் கூட்டியாந்து கன்பஃர்ம் பண்ணேன். முதல்ல ஒனக்குத்தான் போடுறேன். இனிமேத்தான் எல்லாருக்கும் சொல்லணும். சொல்லாம இருப்பனா? நீ வா பேசிக்கலாம்.”

அலுவலகத்துக்கும் மகளின் பள்ளிக்கும் விடுமுறை சொல்லி, வாடகைக் காருக்கு முகவரி தந்து என்று ஒருவழியாக அடித்துப் பிடித்துக் கிளம்பி அவன் பறந்த வேகத்திற்கு, காருக்கு வெளியே நகரம் நகர்வேனா என்றது.

போன மாதம்தான் தன் மகளும் பேத்தியும் விடுமுறைக்கு வந்திருப்பதால், கொள்ளுப் பேத்தியோடு அப்பா இருக்கட்டும் என்று சொல்லி அப்பாவை அழைத்துப் போயிருந்தான் செல்வம். எதையாவது காரணம் சொல்லி, தங்களோடு அப்பாவின் இருப்பை நீட்டித்துக் கொள்வதில் இருவருக்குமே அப்படியொரு தாகம்.

“அக்கா ஊருக்குப் போனதும் நீங்க இங்க வந்துடணும் தாத்தா” என்று கையைப் பிடித்துக்கொண்டு சிணுங்கிய கதிரின் மகளுக்கு, ‘பத்து நாளில் வந்துவிடுவேன்’ என்று சமாதானம் செய்துவிட்டுப் போன அப்பா, இப்போது வராமலேயே போயிருந்தார்.

எண்பத்திரண்டு ஆகிறது. உழைத்துக் கழிக்கத்தான் அவரைச் சபித்திருந்தது போல இந்தப் பிறப்பு. ஊரில் விவசாயம் பொய்த்துப் போய் மூன்று பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொண்டு மதுரைப் பக்கம் பஞ்சம் பிழைக்க வந்த சம்சாரி. பேப்பர் போடுவது, தேங்காய் பறிப்பது, சுண்ணாம்பு அடிப்பது, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது என்று ஆட்டங்காட்டிய வாழ்வு, ஒருகட்டத்தில் அதுவே அசந்துபோய் அம்மன் கோயிலுக்கு அருகே பூக்கடையே நிரந்தரப் பிழைப்பு என்ற நிலைக்கு வந்திருந்தது. விடியலிலேயே பூ மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த சரக்கை, மொத்தக் குடும்பமும் நாள் முழுக்கக் கட்டிக்கொண்டிருக்கும். அப்படி மணத்துப் போனதுதான் இப்போதைய இந்த வாழ்வு.

பூக்கடை வாசத்தில் பிழைப்போடு பிழைப்பாக, ஒரு முனைப்போடு
படித்ததனால், செல்வம் மதுரையிலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகவும் கதிர், சென்னையில் ஒரு தனியார் அலுவலகப் பணியிலுமாகத் திருமணம் குழந்தையென்று குடும்பம் விருத்தியாகி நிமிர்ந்தபோது, அதற்காகவே காத்திருந்ததைப் போல விடைபெற்றுக்கொண்டாள் அம்மா.

வாலறுந்த பட்டம் போல, தன் உயிரறுந்து போனதில் அப்பாவின் ஓட்டமத்தனையும் அம்மாவின் மூச்சோடே ஒடுங்கிப் போனது. அம்மாவுக்குப் பிறகான நாட்களெல்லாம் அம்மாவின் நினைவுகளாக அப்பாவைத் தின்றுகொண்டிருந்தன. ஒட்டுமொத்த தைரியமும் அம்மாவோடு கரைந்து போயிருந்தும் பயமுறுத்துகிற வீட்டுக் கடனுக்காக வேண்டி, ‘ஓடுகிற வரைக்கும் ஓடுகிறேனே’ என்று சொன்ன அப்பாவை மகன்களது அதட்டல்தான் வீட்டோடு நிறுத்தியிருந்தது. வயதும் விசனமும் ஒருசேர மூத்திருக்க, உறக்கமில்லாப் பொழுதுகளோடு உழன்றுகொண்டிருந்தவர். பழுத்தால் உதிரவேண்டும் என்பது என்ன நியதியோ?

“சார்… டீ சாப்பிடலாமா?” டிரைவர் அழைத்தபோது திருச்சி வந்திருந்தது. மகள் உறக்கத்திலிருந்தாள்.

“நேரத்துக்குச் சாப்பிடாம இந்த டீயக் குடிச்சேதான் பொழப்பு பொழப்புன்னு ஓடுனாரு ஒங்கப்பா. இந்நேரம் நம்மளோட இருந்திருந்தா நாலு டீ குடிச்சிருப்பாரு, இல்லங்க..”
என்று கவிதா சொல்ல, ‘இனி இப்படித்தான் போல. ஆண்டாண்டு கால உறவின் பிணைப்பும் உயிர்ப்பும் இறுதியில் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கிப் போகின்றன’ என்பதன் நிதர்சனம் உறைக்கையில் டீயும் கசப்புத் தட்டியது கதிருக்கு.

மூன்று பிள்ளைகளை வளர்த்துக் கரையேற்றியது போக, ஒரு மச்சு வீடு கட்டிக்கொண்டதுதான் அப்பாவின் வாழ்நாள் சாதனையாக மிஞ்சியிருந்தது. பிழைக்க வந்த இடத்தில் எப்படியாவது முளைத்து எழுந்துவிட வேண்டுமென்ற வீம்பும் வாழ்ந்தேயாக வேண்டுமென்ற வைராக்கியமுமாக அப்பா வாழ்க்கையைப் படித்திருந்தார். கூடவேயிருந்து செல்வமும் கதிரும் அப்பாவைப் படித்திருந்தார்கள். ஆனால் எவர் எடுத்துச் சொல்லியும் எட்டாவதைத் தாண்டாத அக்கா ஜெயா மட்டும் எப்போதும் எதையும் யாரையும் படிக்கத் தலைப்படவேயில்லை.

வீட்டில் மொத்தப் பேருக்குமே அக்கா என்றால் எப்போதுமே ஒருவித பயமும் பதற்றமும்தான். கோபமும் பிடிவாதமும் அழிச்சாட்டியமும் அவள் கூடவே பிறந்தவை. எதிலும் நிறைவு காணாத கண்கள். எத்தனைதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சிலிர்த்துக்கொண்டு நிற்பாள்.

‘கெடக்கட்டும்.. நாளப் பின்ன வந்தா, குத்த வச்சுக்க புடி மண்ணு வேணும்ல’ என்ற கணக்கில் ஊரில் விட்டு வந்த ஒரு துண்டு நிலத்தையும்  அடிமாட்டு விலைக்கு விற்றுத்தான் அக்காவின் கல்யாணம் முடிந்திருந்தது. அதிலும் ஏகப்பட்ட குறை அவளுக்கு. காப்பிப்பொடி கலரில் இன்னும் கொஞ்சம் கனத்த கரை போட்ட பட்டு எடுத்திருக்கலாம்… காதுத் தோடு இன்னுங்கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்… அம்மாவின் அந்த எட்டுக்கல்லு பேசரியைத் தனக்குப் போட்டிருக்கலாம்… எலுமிச்சம் பழக்கார வீட்டு அன்னக்கொடி புருசனைப்போல இல்லாவிட்டாலும் மாப்பிள்ளையை இன்னும் கொஞ்சம் லட்சணமாகப் பார்த்திருக்கலாம்.. என்று வளர்ந்துகொண்டே போகிற அவளது குறைகளுக்கெல்லாம் காது கிடைத்தால் போதும்; இன்றைக்குப் பூராவும் கண்ணைக் கசக்கிக்கொண்டிருப்பாள்.

எப்போது பிறந்த வீட்டுக்கு வந்தாலும் இரண்டே நாளில் சந்தி சிரிக்கச் செய்துவிட்டு, ‘இனி இந்தப் பக்கமே வரமாட்டேன்’ என்று மூக்கைச் சிந்திவிட்டுப் போவாள்.  எண்ணி ஆறு மாதத்தில் புதிதாய் ஒரு பட்டியலோடு வந்து நிற்பாள். ‘பகல் கொள்ளை தோத்தது போங்க’ என்பாள் அம்மா.

“விடுமா.. யார்ட்ட கேக்குறா அவ? செல்லுபடியாகுற எடத்துலதானே சிணுங்க முடியும்?!” சிரித்துக் கடந்துவிடுவார் அப்பா.

இரண்டு அக்காக்களோடு பிறந்த அப்பாவுக்கு, செத்துப்போன அவரது பெரியக்காளின் சாயலும் குணமுமாகப் பிறந்திருப்பதாக மகளின் மீது வாஞ்சை அதிகம். அதனாலேயே அவளது கல்யாண குணங்கள் அத்தனையும் பொறுத்துக்கொள்ளுகிற அப்பா.

“அதட்டவும் கொட்டவும், அக்கா தங்கச்சி இருக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா செல்வம். மாமஞ்சீரு நீங்க செய்ய.. அத்த சீரு அவ செய்யன்னு.. மனசாரக் குடுக்கவும் மனசார வாங்கிக்கவும் பொறந்தவன்னு ஒருத்தி இருக்க, புண்ணியம்ல பண்ணியிருக்கணும்..” என்று அவளது அதிகாரத்தையும் ஏவல் கேவல்களையும் மகன்களிடம் பூசி மெழுகுவார்.

அப்படியெல்லாம் பூசி மெழுகி வைத்துக்கொண்ட அக்காதான், அம்மா இறந்த கருமாதி வீட்டில், “வீட்ட தம்பிக வச்சுக்கட்டும். அம்மாவோட பண்ட பாத்திரம், பட்டுச்சேலை, காது கழுத்துல கெடந்த பத்துப் பவுனும் பொறந்த மக எனக்கு வந்தாகணும், சொல்லிப்புட்டேன்” என்று, சபையில் ஆங்காரமாக நின்றாடியபோது அப்பா ரொம்பவே ஆடிப்போனார்.

“ஏத்தா.. அம்புட்டுச் செரமத்துலயும் ஊருக்காட்ட வித்து , நீ கேட்டதுக்கும் மேலயே ஒம்மனசு குளுரக் குளுர நிறைவா செஞ்சுட்டேன். விடுத்தா பாத்துக்கலாம். இத்தோடயா போச்சு? இன்னும் எம்புட்டோ இருக்கு.  மலையாட்டமா இருக்காங்கெ ஒந்தம்பிக ரெண்டு பேரும். அப்டில்லாம் விட்டுறுவாங்கெளா உன்ன?

இப்ப பாத்திரம் பண்டம், சேல கீலன்னு நீ கேட்டத எடுத்துக்க தாயீ. ஒனக்கே தெரியும்.. அடுத்தடுத்து ஒந்தம்பிங்க கல்யாணச் செலவு ஒங்கம்மா வைத்தியச் செலவுன்னு வம்பாடு பட்டுக் கட்டுன வீடும் பேங்கு அடமானத்துல இருக்கு. இன்னும் எனக்கு எத்தன நாளு விதிச்சுருக்கோ தெரியல. அதுக்குள்ள ஒங்கம்மா நகை அதுயிதுன்னு கொஞ்சம் சேத்துப் புடிச்சுத் தேத்தி வீட்ட மீட்டுறுவேன். நாம்பொழச்ச இந்தப் பொழப்புக்கு, ஒந் தம்பிக தலையிலக் கடனக் கட்டிட்டுப் போன பாவத்த வேற நான் தூக்கிட்டுப் போகணுமாத்தா..?”

“எப்புடியோ வீடு அவனுகளுக்குத்தானே? அதுல எனக்கென்னா பங்கா கேக்கப் போறேன்? அப்புடில்லாம் பேராச புடிச்சவ இல்ல நானு. ஆத்தா சொத்து மகளுக்குத்தே. என்னைய ஏமாத்தப் பாக்காதிக. நான் விட மாட்டேன் ஆமா, சொல்லிப்புட்டேன்.”

“இருக்கற நகையெல்லாம் ஒன்ட்ட குடுத்துட்டு, வெறுங் கடனை மட்டும் ஒந்தம்பிக தலையில கட்டச் சொல்றியே, நியாயமாத்தா? அவனுக குடும்பம் பாத்து கடெங்கட்டி வீட்டை மீட்டு எந்தக் காலத்துல எந்திரிச்சு நிக்க?”

ம்ஹும். எந்த நியாயமும் செல்லுபடியாகவில்லை அக்காவின் தராசுக்கு முன்னே. தெரிந்த கதைதான்.

“சரி விடுத்தா. நீ முடிவு பண்ணிட்டு பேசுற. நா என்னத்தச் சொல்ல? தோடு வளையலுன்னு அஞ்சு பவுன மனசார வாங்கிக்க. ஆத்தா கழுத்துச் செயினு மட்டும் அப்பனோட இருக்கட்டும். ஏம் மிச்ச நாளுக்கு ஒரு பிடிப்பு வேணாமா? நீயே சொல்லு..”

அப்பாவின் இறுதியான உறுதியிலும் சபையின் தீர்ப்பிலுமாக, அஞ்சு பவுனு குறைந்துபோன ஆத்திரம் அக்காவிற்கு.

‘இனி இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டுத் தூற்றியவாறு சாபமிட்டுவிட்டு, மறக்காமல் பண்ட பாத்திரங்களோடு போனவள்தான். வருடம் பதினாறு முடிந்தது. இந்த முறை அக்கா சொன்னபடியே செய்தாள்.

“வந்துருவா கழுத. எங்குட்டுப் போயிருவா..” மகன்களைத் தேற்றுவதாகத் தன்னை ஆற்றிக்கொண்டிருந்தார் அப்பா.

காலங்கள் உருண்டோடி இருந்தாலும் கசப்புகளென்னவோ எல்லாருக்குள்ளும் உருண்டு திரண்டிருந்தன. கடைசியாக இப்போது அப்பாவைப் பார்க்கவாவது அக்கா வருவாளா, தெரியவில்லை.

வீட்டுக்குள் நுழையும்போதே செல்வம் கதறிக்கொண்டு ஓடி வந்தான். கண்ணாடிப் பெட்டிக்குள் இப்பவும் அப்பா உறங்குவது போலவேதான் இருந்தார். பட்டு வேட்டி சட்டையில் அப்பாவைப் பார்க்கப் பார்க்கப் பொங்கிக்கொண்டு வந்தது துக்கம். செல்வம் தன் மகளின் திருமணத்திற்கு எடுத்துக் கொடுத்தது. 

“ரொம்ப வெளீர்னு இருக்கு.. வேணாண்டா. சொன்னாக் கேளுங்கடா. விடுங்கடா என்னிய..”  என்று பிடிவாதம் பிடித்தவரை, மல்லுக்கட்டி முகூர்த்தம் வரைக்கும் கட்ட வைத்திருந்தார்கள். சாதாரண வேட்டி சட்டைக்கு மாறின பின்புதான் சாதாரணமாக இருந்தார் அவர்.

வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, கதிர் நினைத்தது போலவே அக்கா இன்னும் வந்திருக்கவில்லை.

“சென்னையிலேர்ந்து நீ வந்து எறங்கிட்ட. இங்கன அழகர்கோயில்ல இருந்துகிட்டு இன்னும் வந்துச்சாப் பாரு.. காலையிலேர்ந்து நாலஞ்சு ஆள அனுப்பியாச்சு. என்ன செய்யக் காத்திருக்கோ?” என்று செல்வம் புலம்பிக்கொண்டிருந்தான்.

“நல்ல சாவுப்பா. கொடுத்து வச்சவரு. மேலுக்கு சொகமில்லன்னு கெடக்காம வைக்காம,
யாருக்கும் தொந்தரவில்லாம தூக்கத்துலயே போய்ச் சேர்றது யாருக்குக் கிடைக்கும்!” என்பதான பெருமூச்சுகளுக்கிடையே, அழுகையும் புழுக்கமுமாக வியர்த்துக் கிடந்த நேரத்தை நெளிந்துகொண்டே போக்கிக்கொண்டிருந்த பெருசுகளின் குரல்கள், மெல்ல மெல்லக் காரியங்களை விரட்டத் தொடங்கின.

“ஏப்பா செல்வம்.. வர்ற சனம் வந்துகிட்டே இருக்கட்டுமப்பா. அதுக்குள்ள நாம காரியத்த ஒவ்வொன்னாப் பாத்துக்கிட்டே இருப்போம். நேரம் போவுது பாரு..”

நீர்க்குடத்துக்கு சருவம் எண்ணி, கோடிச் சீரெடுக்க சம்பந்தக்கார மக்களை அழைத்துக்கொண்டிருக்கையில் குடும்பத்தோடு வந்து இறங்கினாள் அக்கா. துள்ளத் துடிக்க, அழுகையோ ஆர்ப்பாட்டமோ எதுவுமில்லை. கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னிக்கொள்ள, குனிந்த தலை நிமிராமல்  உள்ளே போனாள்.
இடையே காணாமல் போயிருந்த காலம், அவளை யாரோவாய்க் காட்டியது.

கண்ணாடிப் பெட்டியின்மீது உரசிக் கொள்ளாத தூரத்தில் நின்றபடி அப்பாவின் முகத்தோடு உறைந்திருந்தவள், “அக்கா..” என்றழைத்தபடி பின்னாலேயே செல்வமும் கதிரும் வந்து நிற்க, சட்டென்று முன்னுக்கு நகர்ந்து குவிந்திருந்த மாலைகளைப் புறந்தள்ளிக்கொண்டே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டாள்.

கோடியெடுத்து, நீர்க்குடம் தூக்கி, குளிப்பாட்டி, நெய்ப் பந்தம் பிடித்து, அப்பாவைத் தூக்குகையில், என்ன நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை..  ஓடி வந்து அப்பாவைத் தூக்கவிடாது மறித்துக்கொண்டு, மேலே விழுந்து புரண்டு ஓங்காரமாய்க் குரலெடுக்கிறாள்.

“எப்பா.. எப்பா.. என்னை வுட்டுப் போறியாப்பா..? எப்பா… என்னை வுட்டுப் போறியாப்பா..? இப்டி ஒன்னப் பாக்கத்தான் நா காத்திருந்தனா..? எங்கிட்டாச்சும் நீ நல்லா இருக்கேன்னுதானே நான் இருந்தேன் இனி நா ஒன்ன எப்பப் பாப்பேன்… எங்கிட்டுப் பாப்பேன்..”

சற்று ஓய்ந்திருந்த கூட்டம், இப்போது தன்னிச்சையாய்ச் சேர்ந்து கலங்கியது.

“அய்யோ… அய்யோ… எனக்கு இனி யாரு இருக்கா…? நா இனி கேக்கத்தான் யாரு இருக்கா.. குடுக்கத்தான் யாரு இருக்கா..? என் வீம்பெல்லாம் செல்லாக் காசாப் போச்சே.. போச்சே..  இனி நா யாருக்கிட்ட வீம்பு காமிக்க..? இப்டி என்னை அனாதையாக்கிட்டுப் போவிகளா.. போவிகளா… எந்திருச்சு வாங்கப்பா.. எப்பா.. எந்திரிச்சு வாங்கப்பா..”

அதுகாறும் உள்ளிருந்து கொன்றுகொண்டிருந்த ஏதோவொன்று உடைப்பெடுத்துக் கொள்ள, காழ்ப்புகளும் கசப்புகளும் கண்ணீராய்ப் பெருகியோட, கலங்கிக் கரைந்து போனார்கள் கதிரும் செல்வமும்.

பூப்பல்லக்கில் யாத்திரைக்கு ஏறிக்கொண்டது யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க முடியாத அப்பாவின் உடல். கழுத்து கொள்ளாத மாலை. வாகனம் வழியத் தோரணம். பாதையெங்கும் பூக்கள். இவருக்கெனவே பூத்திருக்குமோ! தன் கைகளால் இதுபோல் எத்தனை மாலைகளைக் கட்டியிருப்பார் அப்பா! இன்றிவருக்கு எந்த விரல்கள் மாலை கட்டியிருக்கும்?!

“அப்பா.. அப்பா..” என்று வெறித்தனமாக இறைந்தபடி பல்லக்கின் பின்னாலேயே அக்கா ஓட,

“மரணத்தினால் சில கோபங்கள் தீரும்…

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்…

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்…”

என்ற வைரமுத்துவின் வரிகளைத் தேய்த்தபடி தூரத்தே நகர்ந்திருந்தது சொர்க்க ரதம்.

எல்லாம் முடிந்தது. அப்பாவுக்குப் பிடித்த சிய்யமும் வெள்ளைப் பணியாரமுமாக எட்டுக்குப் படைத்து, கருமாதிக் காரியங்கள் எல்லாமும் எந்தக் குறையுமின்றி நடந்தேறின.

தூக்கிக்கொண்டு போகயில் துயருடைத்ததுதான். அதன்பிறகு பேச்சில்லை, மூச்சில்லை. பழுத்துக் கனத்ததொரு மெளனத்தை இறுக்கக் கட்டியபடி, காட்சியாகிற காரியங்களுக்கெல்லாம் சாட்சியாக நின்றுவிட்டுப் போயிருந்தாள் அக்கா.

உறவுகளெல்லாம் கலைந்து, வீடு இயல்புக்குத் திரும்ப முயன்றுகொண்டிருந்தது. வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் பழைய போட்டோ ஆல்பங்களைத் தூசி தட்டி எடுத்து, அப்பாவையும் அம்மாவையும் புரட்டிக்கொண்டிருந்தார்கள்.

அப்பாவின் மடியில் கனகாம்பரம் எட்டிப் பார்க்கும் ரெட்டைச் சடைகளோடு நெடுநெடுவென ஒட்டடைக்குச்சி அக்கா,
அரைக்கால் சட்டையில் விரல் சூப்பியவாறு செல்வமும் கைப்பிள்ளையாகக் கதிரும் அம்மாவின் மடிக்கொருவராக,
பூக்கடையில் மாலை கட்டிக்கொண்டு அப்பா, பக்கத்திலேயே செம்பருத்திச் செண்டுகளோடு அம்மா. அக்காவின் திருமண நிகழ்வில் அப்பாவின் கைகளுக்குள்
தன்னைப் பிணைத்துக் கொண்டு வெட்கம் பாரிக்க நிற்கும் அக்கா.
புரட்டப் புரட்டப் புரட்டிப் போட்டது கடந்து வந்த பாதை. ஒரு கனவு போல அத்தனையும் கடந்திருந்தது.

மொட்டைமாடியை வெறித்துக் கிடந்தான் கதிர். ஒரு நேர்க்கொட்டில் அருகருகே இருந்த அந்த மூன்று நட்சத்திரங்களும் தன் பங்குக்குப் படம் காட்டிச் சிரித்தன.

நண்டும் சிண்டுமாக இருக்கையில், “எல்லா நச்சத்திரமும் தூரந்தூரமா இருக்கு. இது மூனும் மட்டும் ஏம்ப்பா பக்கத்துல பக்கத்துல இருக்கு?” என்ற கதிருக்கு,

“நடுவுல இருக்கது ஒங்கக்கா. அது ரெண்டும் நீயும் ஒங்கண்ணனும்” என்றார் அப்பா.

“அப்ப நீங்களும் அம்மாவும்…?”

“ந்தா… வானமா விருஞ்சு கெடக்குறது நானும் அவளுந்தான். எங்க தலையிலதான்டா தூக்கி வச்சிருக்கோம் ஒங்க மூனு பேத்தயும்..”

“ஹைய்யா.. நாந்தான் நட்ட நடுவுல ஜம்முனு இருக்கேன் ஒங்க தலையில.. ஏம்பா?” அப்போது குதித்துச் சிரித்த அக்காவுக்கு, அதெல்லாம் இப்போது நினைவில் இருக்குமா தெரியவில்லை. 

“இங்கயா இருக்க? இந்தா..”  சின்ன நகை டப்பாவைக் கதிரிடம் தந்தபடி பக்கத்தில் வந்து அமர்ந்தான் செல்வம்.

கதிர் புரியாது விழிக்க, “இது கதிரோடது. அவன்ட்ட குடுத்துடணும்னு அப்பா சொல்லிட்டே இருப்பாரு. வச்சுக்க. அம்மாவுக்குன்னு நீ ஆசையா வாங்கிப் போட்ட செயினு.”

டப்பாவைத் திறந்து செயினை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தபோது மஞ்சள் முகமாக அமமா சிரித்தாள்.

கட்டிய வீடு தின்று செரித்திருந்ததில், அம்மாவின் தாலிச் செயினும் அடக்கம். ஒரு வைராக்கியத்தோடு தன் முதல் மாதச் சம்பளத்தில் இதைச் சாதித்திருந்தான் கதிர்.

“அண்ணே.. ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு.. நாம ரெண்டு பேரு இருந்தும் புடிமானதுக்கு இந்தச் செயினு வேணும்னு ஏன்ணே சொன்னாரு அப்பா. நம்ம மேல நம்பிக்கை இல்லியாண்ணே?”

“அட லூசுப் பயலே.. அப்டிச் சொல்லித்தானே உன் செயின நிறுத்தி வச்சாரு? உன் சம்பாத்தியத்துல அம்மாவுக்குன்னு நீ ஆசை ஆசையா செஞ்சு போட்டு அழகு பார்த்தது. இது ஒனக்கு எவ்வளவு முக்கியம்னு அவருக்குத் தெரியும்டா.

“என்னடா பாக்குற? அப்பாவுக்கு அக்கா செல்லந்தான். அதுக்காக உன்னையும் என்னையும் எப்பயாச்சும் விட்டுக் குடுத்துருக்காரா?”

அக்கா மட்டும் ஏன் இப்படி? எப்போதோ அப்பா சொன்னது நினைவிலாடியது.

‘நல்ல புள்ளதாண்டா அவ. அவளுக்குப் பொறகு பத்து வருசம் கழிச்சுத்தானே அடுத்தடுத்து நீங்க ரெண்டு பேரும்.. அதுவரக்கிம்  ஒத்தயாவே இருந்துட்டால்ல.. அதாம் போல. அழுகுறான்னு நம்மளும் குடுத்துக் கெடுத்துட்டமோ என்னமோ.. ஒங்க மூனு பேத்துக்கும் தீவாளி முறுக்க ஒங்கம்மா பங்கு வைக்கயில கூட, எனக்குப் பத்து முறுக்கு கூட வையின்னு அடம் புடிக்கும் கழுத. எதுக்கும் போதாத மனசு. அதுவுமில்லாம, அடம்புடுச்சு சாதிச்சுக்க பொறந்த வீடு கூட இல்லேன்னா பொட்டப் புள்ளெக எங்கதான்டா போகும்?”

பாவாடைச் சட்டையில் முறுக்குக்கு முணங்கி நிற்கிற அக்காவை நினைத்துப் பார்க்கையில், சிரிப்பு வந்தது கதிருக்கு. விரலிடுக்கில் வழிந்த செயினைத் திரட்டியெடுத்துப் பார்த்தவாறே,

“ஏன்ணே.. நாளக்கி அக்காவப் பாத்துட்டு வருவமா?” என்றான்.

  • அன்பு மணிவேல்
1 Comment
  1. Anita Srikanth says

    என்ன ஒரு அழகான கதை..
    கடைசில அக்காவை போயி பார்த்திட்டு வருவோமா னு கேக்குற கேள்வில தெரியுது..அந்த செயினை அக்காட்ட தந்திருவாங்க னு…
    பாசம் னா இப்டி இருக்கணும்..
    எங்க அப்பாவும் ஒருநாள் ராத்திரி தூங்கினவர்..அடுத்த நாள் காலைல எந்திரிக்கலை.. இந்த அப்பாவோட மரணம் கொஞ்சம் என்னை அழ வெச்சிடுச்சு…

    அழகா எழுதி இருக்கீங்க…

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More