கருவாட்டு வாசம்

1 1,242

சிறுகதை

எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தேன். என்னளவில் இந்த வாழ்வு எனக்கான ஒன்று மட்டுமல்ல. பரந்த தியாகமாகத்தான் பிள்ளை வளர்ப்பைக்கூடப் பார்க்கக்கூடிய பக்குவத்தில் இருந்தேன். அப்பாவின் வயது எழுபது இருக்கும். இன்னும் இரண்டு மாதத்தில் எனக்கும்கூட நாற்பத்து நான்கு முடியப் போகிறது.

வராண்டாவின் வெளிச்சம் உறுத்த, மெதுவாக நடக்கலாம் என்று படி இறங்கும்போது செல்வனின் அழைப்பு வந்தது. சந்தர்ப்பங்களைத் தேடாதவன். எது வாழ்வின் எல்லை என்று எனக்கு வந்த கனவு, ஒருபோதும் அவனுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மிகச் சோர்வாக, அவனன் அழைப்பை எடுக்கச் சந்தர்ப்பம் வாய்த்தபோதும்கூட, திருவிழா கலை நிகழ்ச்சியின் மூன்றாவது பாடல் போலப் பேசத் தொடங்குவான். இவனுக்குக் கவலை என்பது என்னவாக இருக்கும் என்று சிலநேரம் நானாகவே நினைத்து, இன்னும் காலம் இருக்கிறது என்று சமாதானத்திற்குள் புகுந்துவிடுவேன்.

மருத்துவ வாசனை என்று ஒன்று இன்னும் விற்கப்படாமல் உலவுகிறது. நடுத்தர வர்க்கத்தின் ஊடாக நடக்கத் தொடங்கினேன். கையும் காலும் வாயும் உள்ளவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் என்பவர்கள் அவரவருக்கு உரிய தனித்த உருவம் என்பதை நான் அவன் மூலமாக அறிவேன் என்பதைச் சொன்னபோது, அதை உன் அப்பாவின் வழியாகக் கண்டேன் எனச் சொன்னவனும் அவன்தான்.

எல்லாவற்றிலும் நிதர்சனமான உண்மை என்று ஒன்று உண்டு என்பதை அவன் வாயிலாகக் கண்டபோது, நான் வாங்கும் சம்பளம் எதற்கானது என்ற அருவருப்புகூட எனக்கு வந்ததுண்டு.

பூ வாங்கும் கடையில் இருக்கும் நாட்காட்டி பற்றி, செல்போன் கடையில் இருக்கும் உடைந்த பாகத்தின் பின் இருக்கும் மனிதரைப் பற்றியெல்லாம் இவனுக்கு என்ன அக்கறை என்று நினைக்கத் தோன்றும். சுவரசியம் நிறைந்த சிறுகதை ஒன்றைச் சேகரிக்கத் தெரிந்தவன் செல்வம்.

அப்பாவை ஊரில் நிறுத்திவிட்டு, கடந்து போன பத்து வருடத்தில், செல்வம், அப்பாவிற்கான முதல் துணை என்றுதான் நினைத்தேன். மிக அருகில் இருப்பது இருப்பு மட்டும்தான். மிக நெருக்கமாக இருப்பதுதான் உணர்வை அறியக்கூடியது என்று எங்கள் இருவரில் எனக்கு மெதுவாகத்தான் தெரிந்தது.

தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்று என்னிடம் கேட்ருந்தால், தவறு செய்யச் சொல்லும் என்றுதான் சொல்லியிருப்பேன். எனக்கும் தனிமைக்குமான தூரம் அவ்வளவுதான். அதுவும், கை நிறைய வந்த இந்தத் தொலைபேசி, தனிமையை ஒரு தொடர்வண்டி வேகத்தில் விரட்டியது.

‘அங்கேயேதான் இருக்க?’ என்றதற்கு, ‘ஆமாம்..’ என்றேன்.

‘இரு வந்துர்றேன்’ என்றவனின் உருவம் வாசலில் யாருடனோ பேசிகொண்டிருந்தது.

என்னிடம் ஏதும் விசாரிக்கவில்லை. அவனாகவே அப்பாவின் உடல்நிலை குறித்த வரைபடத்தைச் சேகரித்துக் கொண்டான். எப்போதும்போல, ‘வா,, டீ சாப்ட்டு வரலாம்’ என்று இருவரும் நடந்தோம். இருபுற மரங்களின் நிழலின் வழியாக விழுந்த வெளிச்சம், பாதையின் ஊடாக எதையும் பேசச் செய்யவில்லை. அவனாகப் பேசுவான். \

‘அப்பாக்கு உடம்பு முடியல.. நீ எதுக்கும் வந்துட்டுப் போ…’ என்றபோது தட்ட முடியவில்லை. மாதம் இவ்வளவு என்று அனுப்பிப் பழக்கப்பட்ட பின்பாக, அப்பாகூட இஎம்ஐ கணக்கில்தான் வந்தார். சில மாதங்களில், செய்தி வழித் தொடர்பில் சின்ன சஞ்சலம் எனக்கும் அப்பாவிற்கும் உண்டு என்பது அவனுக்கும் தெரியும். இதுவரை எதுவும் அதைப்பற்றி செல்வம் பேசியதில்லை. எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாகப் பேசும் தெருச் சண்டை வார்த்தைகள் போலானவன் என்ற பிம்பத்தை, செல்வம் அப்போதுதான் உடைத்தான். நிச்சயமாக அவனுக்குத் தெரியாமல் இருக்காது.

அப்பா பேசும் எதையும் காதில் வாங்காமல் கழிந்த இரண்டு வருடத்தில். ஒரு குற்றசாட்டுகூட செல்வத்திடமிருந்து வந்ததில்லை. நானாகவே ‘சாயங்காலம் பேசுறேன், ஃபிரீயா இருப்பல்ல..?’ என்றபோது ஆமோதித்துக் காத்திருந்தவனிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ, அத்தனையையும் ஒரே சொல்லில் மறுத்தான்.

‘உனக்கு எது சரிந்னு படுதோ அதைச் செய். அவருக்கு எது சரின்னு படுதோ அதை அவர செய்யவிடு.. ஒருபக்கம்தான, அடைச்சிடலாம்னு மட்டும் நினைக்காத. வயசானவங்க கோபம் கொலையைவிட மூர்க்கமானது’ என்றான். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. நானாகவே பேசிகொண்டிருக்கத் தொடங்கிய அழைப்பு, கேட்டுக்கொண்டிருக்கும் அழைப்பாக மாறியது.

அம்மா விட்டுச் சென்ற பின், அப்பாவிற்கு இப்படியான ஆசை இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை. மிகக் குறைவாகப் பேசி, தன்னுடைய வார்த்தைகளைச் சுருக்கிகொண்டார். ஆனால் அதற்கு எதிர்மாறாக இப்போது எல்லாவற்றையும் பேசியே தீர வேண்டும் என்கிறார். எப்போது அலைபேசியை வைப்பார் என்று காத்திருந்து சில நேரம், நானாகவே தூண்டித்தது உண்டு.

அப்பாவிடம் மகன் கேட்க முடியாததையும் மகனிடம் அப்பா சொல்லமுடியாததையும் ஊர் மிக விரைவாகச் சொல்லிவிடுகிறது. அப்பாவிற்கு வேறொரு தொடர்பு உண்டு என்ற செய்தி மெல்ல என்னை அரிக்கத் தொடங்கி, அவருடனான பேச்சை நிறுத்திக்கொள்ளத்தான் முடிந்தது என்னால்.

அதற்குப் பின்பாக நிறைய தகவல்கள். பகல் முழுவதும் அங்குதான் இருக்கிறார். வண்டியில் ஒருநாள் பார்த்தேன். உங்க அப்பா வயசு இருக்கும் என்று நிறைய வந்தன. இந்த வயதில் எதற்காக இவர் இப்படி இருக்கிறார் என்று நானும்கூடக் கூசிப் போனேன். கடந்தமுறை ஊருக்கு வந்து திரும்பியபோது சொத்துப் பத்திரத்தைக்கூட எடுத்து வந்துவிட்டேன். என்னால் இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது. மனைவிக்கு அவரை வெறுக்க மிக எடை கூடிய காரணம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியும் அமைந்தது.

செல்வம் டீயை முடித்து வழக்கம்போலப் பேசிகொண்டிருந்தான். ‘போலாம் வா…’ என்றதும் அவ்விடத்தில் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியேற ஆட்கள் இருந்தார்கள்.

‘யாருடா அவரு…?’

‘தெரியாது மாப்ள… இப்போதான் பழக்கம். அவங்க சொந்தக்காரப் பொண்ணு ஒன்னு நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்து, இப்போ வெளியூர்ல இருக்காங்களாம்…’ என்றான்.

விசாரிக்க எனக்கு நேரம் இல்லை. அப்பாவின் நிலை தெரிந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்ற அவசரத்தில் இருந்தேன் நான்.

‘என்ன சொல்றாங்க செல்வம்? எப்போ டாக்டர பாக்கலாம்…?’

‘என்ன மாப்ள.. அவசரமா போகணுமா?’

‘சே… அதெல்லாம் இல்லடா… புள்ளைங்க வர வேண்டியது இருந்தா, சொல்லணும்ல…’

‘சொல்லிரு மாப்ள… நைட் முடிஞ்சிரும்…’

……..

மருத்துவமனை வாசனை நாசியில் நிறைந்திருந்தது.  

‘கொண்டுவரும்போதே ஒன்னும் இல்ல. நம்மளும் பாவம் பண்ணிறக் கூடாதுன்னுதான பெரும்பாலும் வயசானவங்களைக் கொண்டுவந்து போடுறோம்?! உங்க அப்பாவும் அப்படித்தான்’

எல்லாம் முடியும் வரை, எனக்குப் பழக்கபட்ட மவுனம் கையிருப்பில் இருந்தால் போதும் என்றிருந்தேன். செல்வம், எல்லாம் பேசிவிட வேண்டிய முடிவில் இருந்ததும் தெரிந்தது.

‘வா அப்டி உக்காரலாம்..’ என்று மரத்தைச் சுற்றிய நாற்காலி ஒன்றில் அமர்ந்தோம்.

‘உங்க அப்பாவை நினைக்கும்போதல்லாம் உனக்கு வேறொரு மனுஷியும் ஞாபகம் வருதுல்ல மாப்ள?’

இல்லை என்று சொல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தேன்.

‘தப்புன்னு நாம நினைக்கிற ஒன்னு, எப்பயும் நம்ம கூடயே வருதுல்ல.. நாம சரியா இருக்கிறோம் என்ற திமிருக்கு நாமதான சாட்சி?’

‘நீ எங்க வரேன்னு எனக்குத் தெரியும் செல்வம். எனக்கு அந்த விளக்கம் இனி தேவை இல்லைடா…’

‘நமக்கு எதுதான் தேவை? வசதியான வாழ்வு. அவ்ளோதான…. அதுக்காக இன்னும் எவ்ளோ தூரம் ஓட முடியுமோ அவ்ளோ ஓடலாம். நமக்கு அந்த இலக்கை நோக்கி ஓடச் சொல்லிக் குடுத்தவங்க செஞ்ச தப்பும் அதுதான். இப்போ உங்க அப்பாவுக்கு சாப்பாட்டுக்குக் காசு குடுத்ததும் உன் கடமை முடிஞ்சி போச்சுல்ல… இதையே உங்க அப்பா, இருவது வருசத்துக்கு முன்னாடி செஞ்சிருந்தா அவருக்குப் பேரு என்ன?’

‘நீ நடைமுறைக்கு இல்லாதத பேசுறடா. நானும் எங்க அப்பா எனக்கு என்ன செஞ்சாரோ அதையேதான என் புள்ளைக்கும் செய்றேன்? இதுதான உலக வழக்கம்? வெட்டி நியாயம் பேசி அவரு செஞ்ச தப்ப நியாயப் படித்துற நீ…’

‘சரிதான் மாப்ள.. தியாகம் என்ற வார்த்தையை நாமல்லாம் மறந்து எவ்ளோ நாள் ஆச்சு.. நாம யாருக்காவது அதைச் செஞ்சி ஏமாறும்போது மட்டும்தான் ஞாபகம் வருது. நமக்காக அதைச் செய்பவங்களை நாம கண்டுக்கிறதே இல்லைல…

உங்க அப்பா பண்ணுனது தப்புன்னு நீ நினைக்கிறல்ல… நாம செஞ்சது எல்லாம் சரியா? வயசானவங்க பேசுற வார்த்தைகளையும் நடந்துக்குற முறையையும் நம்மாள தடுக்க முடியலங்குற கோபம்தான நமக்கு இருக்கு…? கடைசிவரை நீ அனுப்புற காசுல சாப்பாடு மட்டும் சாப்ட்டு வாழ்ந்து செத்திருந்தா, நீ இப்போ செய்றத விட வேறென்னா செஞ்சிருப்ப உங்க அப்பாவுக்கு…?’

‘வேறென்ன செய்யணும்டா?’

‘உறவுதான் மாப்ள மனுசனோட பலம். ஒரு மாசம் யாரும் இல்லாம ஒரு உலகத்துல நீயும் நானும் வாழ முடியாதுடா. வீட்டுச் சுவரும் ஓட்டுற வண்டியும் பதில் பேசுற மாதிரி வந்துட்டா, உங்க அப்பாவுக்கு வேற ஒரு மனுஷி தேவைப்பட்டுருக்காது.

‘இவ்வளவு நடந்த பின்னாடியும், ‘எனக்கு வந்த தகவல் இதுதான். நீ என்னப்பா சொல்ல வர்ற?’ன்னு உன்னால கேட்க முடியலைல.. அதுக்கான பதில் அவருகிட்ட இல்லாமலா இருந்துருக்கும்..?’

‘வேறொரு பொம்பளகிட்ட நம்ம அப்பா பேசுறாரு… அவங்க வீட்டுக்குப் போய் வர்றாருன்னு செய்தி வந்ததும் நமக்கு சபலம்தான நினைவுக்கு வருது… ஏன்? அவரு வயசுகூட நமக்கு மறந்து போகுது, இல்லையா? அவ்ளோ அடி முட்டாள்களா மாப்ள நாம…? என்னை விடு. உனக்கு அப்படி யாருமே இல்லையா…? ஒரு மாசம் கூடுதலா காசு கேட்டதும் உனக்கு வேற என்ன ஞாபகம் வந்துருக்கும் உங்க அப்பா மேல…? இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல எவ்ளோ தவிச்சிருப்பாரு?

அதுக்காகவே அவரு அந்தக் காசைச் செலவு பண்ணிருந்தாலும் அது உன் கடமைதானடா மாப்ள? அவருகிட்ட இருந்து வந்ததுதான உனக்கானது எல்லாம்..!

ரொம்பப் பெருமையா சமத்துவம் பத்திப் பேசறோம். ஆனா, அதை முந்தைய தலைமுறை செய்தா நம்மளால ஏத்துக்க முடியல. நாமதான மாப்ள பிற்போக்குவாதிங்க…?’

‘இப்பயும்கூட உங்க அப்பாங்குற ஒரு ஆணுக்காகத்தான மாப்ள பேச முடியுது? இதே இடத்துல உங்க அப்பாகூட பேசப்பட்ட மனுசிக்கு நாம வேற பேருதான வச்சிருக்கோம்?’

செல்வத்தின் வார்த்தைகளிலிருந்து என்னால் மீள முடியவில்லை. சுதந்திரத்தை அனுமதிக்காத மனிதர்களாகத்தானே நம் வாழ்வு நீள்கிறது?

அப்பாவின் பெயர் சொல்லி என்னை அழைத்ததும், இருவரும் போனோம். நாளை காலை பத்து மணிக்குக் கிடைச்சிடும். இன்னும் சில ஆதாரங்களைக் கொண்டுவரச் சொன்னர்கள்.

‘நான் போய்ப் பாக்குறேன். நீ இங்க எங்கயாவது தூங்கு’ என்று சொல்லிவிட்டுப் போனான் செல்வம். அதற்கு முன்பாக ஒரு கேள்வி வைத்தான்.

‘உங்க அப்பாவுக்குக் கருவாடு பிடிக்கும்ல..?’

‘உனக்கு எப்டித் தெரியும்?’ என்றேன்.

‘மிச்சக் கருவாட மொத்தமா விக்க அந்த வீட்டுக்குதான் போறேன்’னு சொன்னன் வியாபாரி. அதுல தெரியும் மாப்ள….’ என்றான். செய்யாத தவறுக்கு மாட்டிக்கொண்டு, பின்பு விடுபட்ட நிமிடம் வந்து போனது அப்போது.

‘நீ இரு… நான் வர்றேன்’ என்று வெளியேறினான்.  

எனக்குத் தூக்கம் வரவில்லை. செல்வதிடம் ஒன்று கேட்கவேண்டும் போல இருந்தது. இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது என்று அவனுக்கு அழைப்பு விடுத்தேன்.

‘என்னடா மாப்ள…?’ அதே உற்சாகக் குரல்.

‘அந்த அம்மாவைப் பாக்கணும்’

  • முத்து ஜெயா
Suvadu Book List
1 Comment
  1. சுதாகரன் says

    வயதான உலகத்தில் தாத்தா இறுதியாக ஆசைப்பட்ட உணவு கருவாடு. இந்த தலைப்பு வாசிக்கத்தூ ண்டியது. கதையின் தொடக்கத்தில் எழுத்தும் பார்வையும் நன்றாக இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More