அகாலம்

0 964

சிறுகதை

அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக் கிடக்கும் என்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா? அத்தெருவே அதிர்ச்சியில் குழம்பியிருந்தது. தினமும் அரை லிட்டர் பால் காய்ச்சிக் குடிப்பவளுக்கு என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது? போதாக் குறைக்கு மூத்த மகன் மாதாமாதம் வந்து, அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுத்துவிட்டு, கையில் இரண்டாயிரம் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வார்.

காலையில் எழுந்து கருக்கல் கரையும்வரை, சாவடிச் சண்டையில் முதல் ஆளாய் நிற்பவள். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள். பெரிய வீட்டில் நடுத்தர வசதியோடு வாழ்ந்தவளுக்கு இந்த நிலை; வேதனைதான்.

‘ஒருவேளை அடித்துக் கொன்றிருப்பார்களோ’ என்றுகூட வள்ளிக்குத் தோன்றியது. அவளுக்கு வந்த சந்தேகம் அங்கு வசிப்பவர்களுக்கும் எட்டிப் பார்த்தது. அந்தச் சந்தேகத்தோடே வானத்தைப் பார்த்தாள். வானம் எப்போதும் மெய்மையைப் பிறப்பிக்காது; சிலநேரம் ஏமாற்றிவிடும். அதற்காக வருத்தப்படவும் செய்வாள்.

வாய்க்காலில் தண்ணீர் வராதபோது, வானம் சிரிக்கும். இது பழக்கமானதுதான் என்றாலும் அதை மன அலுப்பாக உதறிவிடுவாள். இன்று உதறுவதற்கு வாய்ப்பில்லை. அந்தளவிற்கு வானம் மப்பும் மந்தாரமுமாக மாறிவிட்டதை எண்ணிக் கவலையொன்றும் கொள்ளவில்லை. மழை பெய்தால் திரும்பவும் பிறக்கி நடவேண்டும். இன்றும் அம்மாதிரியான பிறக்கி நடும் வேலைதான். ஒவ்வொருமுறையும் பிடுங்கி – புதைத்து, பிடுங்கி – புதைத்து, அதே செய்முறை தொடரும்போதெல்லாம், குறுக்கு வலி நொய்யப்புடைத்துவிடும். ஆகவே, தனியாக வரவேண்டாமென்று உடன் ஒருவளையும் அழைத்து வந்திருந்தாள்.

வடமேற்கு மூலையிலும் தெற்கிலும் உரசலின் இணைவால் இடிகளின் பெரும் உறுமல், அப்பொழுதை ரணகளமாக்கியது. வள்ளி நிமிர்ந்த மேனிக்கு வந்து, சுற்றுப்புற வயக்காட்டைக் கண்களால் சுழற்றினாள். எங்கும் பச்சைக் கொழுந்தாக, மிதமான காற்றில் ஆடிக்கொண்டிருந்தன இளவட்ட நாற்றுகள்.

சிலர் முன்னரே நட்டுவிட்டிருந்தனர். இன்னும் சில வயல்கள் கீறிப்போட்டதோடு சரி; நடப்படாமல் அப்படியே கிடந்தன. இதமான குளிர் அவர்களை வாட்டத்தொடங்கியவுடன், கூட வந்தவளும் நிமிரத் தொடங்கினாள்.

“இந்த பெயவுள்ள மழைக்கு வெவஸ்தையே கெடையாதுபோல. இப்போ அடிச்சா நாளைக்கும்லா வரணும்?”

“ஏ… ச்சி… என்ன பேச்சி பேசுற? வந்தா வந்துட்டு போவுது. நான்தான சம்பளந் தாரன். பெறகென்ன?”

“ஆமா நீ சொல்லுவ. ஒம்மவன்  வேலபாக்கா. நாங்கென்ன அப்படியா?”

“அட சும்மா கெட. யாருமே வயக்காட்டுல இல்ல. ஒரு ஈ காக்காகூட இல்ல”

“எனக்கென்ன தெரியும்? நானும் ஒங்கூடத்தான புடுங்கி நடுற..”

என்று சொல்லித் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். பிடுங்கி நடுதல் வயலின் பாதியைத் தாண்டவில்லை. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் தூறல் பட்டுக் குமிழிகளாக உருவாகித் தெறித்தது. லேசான துளிகள் கனமானதாக மாறியவுடன் வள்ளி வரப்பிற்குச் சென்று கொங்காணித் தாளினைப் போட்டுக்கொண்டாள்.

காலையில் அவசரப்படுத்தியதால், அவள் கொண்டு வரவில்லை. சில நிமிடம் நின்றவளுக்கு உடம்பு உதற, பேசாமல் வரப்பிற்கே வந்துவிட்டாள். நல்லவேளையாக, வயலின் வடகிழக்கு மூலையொன்றில் சிறிய அளவிலான குடிசையொன்று போடப்பட்டிருந்தது. அதற்குள் அவள் குத்தக்கால் வைத்து வள்ளியை வேடிக்கை பார்த்திருந்தாள்.

“இங்கிட்டு வாக்கா. மழெ நின்னதுக்கு அப்புறம் நடலாம். ஒலுங்கா இங்கிட்டு வா. நாளைக்கு வேற பாஞ்சாயித்து ஆபிசுக்குப் போகணும்முன்னு சொன்ன… பாத்துக்க”

இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன், பிஞ்சு நாற்றுகளில் சிதைவுகள் ஏற்படாதவாறு வடக்கு ஓரத்திற்கு வந்து, வரப்பு வழியாக உள்ளே புகுந்திருந்தாள். கொங்காணித்தாள் போட்டதால் நனைதலில் தப்பித்திருந்தாலும், பஞ்சாயித்தைப் பற்றி அவள் சொன்னவுடன், கவுன்சிலர் மல்லிகாதான் வள்ளியின் நினைவுக்கு வந்து நின்றாள்.

“என்னக்கா..? வந்து குத்தவச்சதும் என்ன யோசன?”

“இல்ல… மல்லிகா அன்னைக்கு சொன்ன மாதிரியே நடந்துப்பாளா?”

“திடீர்ன்னு என்ன பெருத்த சந்தேகம்?”

“அவளப்பத்தி நேத்துதான் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்துச்சுன்னா அவ்ளோதான். நமக்கு நாமத்தப் போட்ருவா?”

“என்ன… நாமத்த போட்ருவாளா? அந்த எடத்துக்கு வர அஞ்சு லெட்சம் செலவு பண்ணிருக்கா. சும்மாவா? அதுக்கு மேலயும் பண்ணியிருக்கலாம், யாரு கண்டா?. நம்மூர்ல வீடு கட்டி இருந்தாலும் அவ என்ன நம்மாளா? எந்தூர்க்காரியோ?”

என்று இழுத்திழுத்து, பேச்சை நிறுத்தாமல் அவளைப் பற்றிய விவரத்தைப் போட்டுடைத்துக்கொண்டே சென்றாள்.

ஆளும் கட்சியின் உறுதுணையோடு கவுன்சிலர் பதவிக்கு நின்றிருந்தாள். அவளின் கணவன் சரியான வெத்துவேட்டு; மற்றவர்களுக்கு அப்படித்தான் தோற்றமளித்தான். எதிர்த்து நின்று கேள்விக்கேட்கும் அளவிற்கு, பயந்தவன் என்று எண்ணாமல் அவளின் அழகிற்கு அடிமைப்பட்டு போன நிலை. தெரிந்த ஒரு நண்பரின் கோயில் கொடை விழாவிற்குச் சென்றிருந்தபோதுதான் மல்லிகாவைச் சந்தித்திருக்கிறான். காதலுக்குக் கண்ணுமில்லை, சாதியுமில்லை என்றகராதியில் தாலி கட்டிக்கொண்டு வந்தவனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும். கடைசியில் பிறந்தவனுக்கு மட்டும்தான் திருமணமாகவில்லை. அதற்குள் இப்பதவியை வைத்து பேங்க் அக்கவுண்டைத் தேற்றிவிடும்படியான செயல்களில் மும்முரமாக இறங்கியிருக்கிறாள். புதிதாக டிராவல்ஸ் ஒன்றையும் தொடங்கி, மூன்று நவீனக் கார்கள் நேற்றுதான் இறக்குமதி செய்ததாக வள்ளியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். வெள்ளை நிறம், நல்ல உடல்வாகு கொண்டவளுக்கு எல்லாம் கிட்டும்.

கட்சி சார்ந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுவந்தால், அய்ந்தாறு நாட்கள் வீட்டின் கதவு மூடியேதான் கிடக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால், காய்ச்சல் என்றுதான் பதில் வரும். அவள் அந்தமாதிரி இருந்துதான், புதிய புதிய கார்கள் வீட்டு வாசலின் முன் எட்டிப்பார்க்கின்றன என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வரும். எல்லாம் ரகசியம் என்றே தொடர்ந்தாள்.

“ச்சி… என்ன இவ இவ்ளோ மோசமாலா இருக்கா? இவளுக்குப் போயா அன்னைக்கு ஓட்டுக்கேக்க கூடப் போனன்”

அவள் சிரித்திருந்தாள்.

“என்னடி சிரிப்பு வேண்டிக் கெடக்கு?”

“பின்னென்னக்கா… யோசிக்கணும். அவளாம் எத்தன வாழத்தோப்புக்கு போனவ? அப்டி இருந்தவதான் இன்னைக்கு ஆளப் புடிச்சிப் புடிச்சி, கட்சிக்கு வந்து கவுன்சிலரா ஆயிட்டா”

வள்ளி எதுவும் பேசாமல் வயலையே பார்த்திருந்தாள். பெருமழை, அடர்ந்த பனிக் காட்சிகளை மூடி மறைப்பதுபோல், அம்மழை மறைக்கத் தொடங்கியிருந்தது. இம்மழைக்கெல்லாம் அஞ்சாதவளாக இன்னும் அதிகமாகவே அவளிடத்தில் சொல்லியிருந்தாள்.

அந்த வயதானவள் இறப்பின் பின்னணியிலும் இவள்தான் இருப்பதான ஒரு பெரும் சந்தேகத்தையும் வள்ளியின் முன் வைத்தாள்.

“என்ன சொல்ற?”

“ஆமாக்கா. அந்தக் கெழவியோட பேரன் ஆவாதவன்கூட சேந்துட்டு சுத்திட்டுக் கெடக்கான். இருபது வயச தாண்டல. குடிச்சிட்டு கெடக்கான். நீயே பல தடவ பாத்துருப்ப. தெருவே பாத்துருக்கு… கெழவியோட சண்ட போட்டதெல்லாம்”

என்று சொல்லியவுடன், முன் நடந்த சில நிகழ்வுகளை வள்ளி தன் மனத்தில் அலசத் தொடங்கியிருந்தாள்.

சரியாகக் காலை பத்து மணி இருக்கும். பீடிக் கடையில் கூட்டம் அலைமோதியது. வந்திருந்த சேலைகளெல்லாம் பீடிக்கட்டுகளை சைஸ் வாரியாகப் பார்த்து எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேற்கில் குடியிருக்கும் இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர்கள். வள்ளியின் வீடு கிழக்கு வாக்கில் ஒரு கிலோமீட்டர் தூரம். நடந்துதான் வருவாள். அவளும் ஓரமாக அங்கு நின்றிருந்த சீத்தா மர நிழலில் உட்கார்ந்து சைஸ் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் பேச்சுவாக்கில் ஒருவள் சொல்லியதைக் கேட்டிருந்தாள்.

“நம்ம பஞ்சாயத்து போர்ட்ல வேல பாத்த சிலபேர மாத்தப் போறதா கேள்விப்பட்டன். உண்மையா?”

“ஆமா… ஆனா எனக்கு சரியாத் தெரியல. அப்படித்தான் கேள்விபட்டன். இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிலயும் அவங்களுக்குத் தெரிஞ்ச ஆளாத்தான் வேலைல போட்டாங்க. நம்ம கருப்பசாமி மவனையும் போட்டாங்கலா.. வீடு வீடா மருந்தூத்துற வேல, மாசம் அஞ்சாயிரம் சம்பளத்துல”

“இப்பம் அந்த வேலைக்குத்தான் ஒல வச்சிட்டாங்களே. அய்யெல்லாத்தையும் தூக்கிட்டு, அந்தக் கவுன்சிலருக்குத் தெரிஞ்ச ஆளத்தான் போடப்போறதா கேள்விப்பட்டன்”

“அது உண்மதா. அந்த வேலைக்கே ரெண்டு லட்சம் ரூவாயா? அஞ்சு வருசத்துல நீயே கணக்குப் போட்டுப் பாத்துக்க. ஏமாத்து வேல. லைப்ரரி கட்டித் தாரன்னு சொன்னா. அது இதுன்னு இப்பம் பேச்ச மாத்துதா”

இப்பேச்சின் தொடர்ச்சி நிலை எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் அவளுக்கான நேரம் வரவும் பீடிகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினாள். உச்சி வெயில் பலமாக அடித்துக்கொண்டது. முந்தானையால் தலையில் முக்காடு போட்டாள். வீட்டில் பழையதுதான் கிடக்கும். மதியம் புதிதாக எதையும் வதக்க வேண்டாமென்று, போகிற வழியில் வடையினை வாங்கிக்கொண்டு போனால், சாப்பிடத் தோதுவாக இருக்கும்.

அதன்படியே, சிறிது தொலைவில் இந்தியன் பேங்க் எதிர்ப்புறத்தில் முருகையன் டீக்கடை இருந்தது. கடை எப்போதும் திறந்தேதான். முன் கடை என்றால் பின் வீடு. அதனருகில் விறகுக்கடை ஒன்றும் இருந்தது. அதற்குள் அய்ந்தாறு பேர் எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சத்தம் பலமாகக் கேட்டது. ‘ஒருவேளை சண்டை போடுகிறார்களோ’ என்றுகூட டீக்கடையில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. முருகையன் எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை. பிரச்சனைகளுக்குள் போக வேண்டாமென்று, வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

“அண்ணா… நாலு உளுந்தவட”

“அதில்லமா… பருப்பு வட தரட்டுமா?”

“சரி கொடுங்க” என்று பேப்பரில் பொதிந்து கொடுத்ததைக் கூடைக்குள் பத்திரப்படுத்தினாள்.

இந்தக் கொடுக்கல் வாங்கல் உடனே நடந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் பிடித்தன. அப்பிடித்தலுக்குக் காரணம் கூச்சல்தான். அவளின் மகன் இரண்டு மூன்று பேரிடம் வாக்குவாதம் செய்திருந்தான்.

“எங்கள வெளியே தள்ளிட்டு, புதுசா ஒங்கம்மா ஆள போடப் போறாளாம். இதுலாம் தேவயில்லாத வேல. ஏறுக்குமாறா போனா நடக்குறதே வேற”

என்று அவர்களின் மிரட்டும் உடல்மொழி, அருகில் நின்றிருந்த குமாருக்கும் பீதியைக் கிளப்பியது. மிரட்டிவிட்டு தகரக் கதவை ‘டபார்…’ என்று தள்ளிவிட்டுச் சென்றனர்.

நின்றிருந்த இருவரும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டனர். பேசாமல் அம்மாவிற்கு போன் பண்ணிச் சொல்லிவிடலாம் என்று, நடந்ததைச் சொன்ன பிறகு பதட்டம் கலைந்து பெருமூச்சு விட்டான்.

“குமாரு… எங்கம்மாட்ட சொல்லிட்டென். நான் பாத்துக்குறன்னு சொல்லிட்டாங்க. ஒன்னப்பத்தியும் கேட்டாங்க. எப்பம் ரூவா கொண்டுவாரன்னு கேட்டாங்க”

அவன் முழித்தான். ‘பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?’ என்கிற கேள்வி அவனை வாட்டி வதைத்தது. பெரியப்பாக்களிடம் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை. பள்ளிக்குப் போகாமல் ஊர் சுத்திய நம் நடத்தை அப்படி. இப்போது ஒரே பதில் ஆச்சிதான். அவளிடம் கேட்டால் கிடைக்குமா? இதுவும் கேள்விதான். இதே கேள்வியோடு மூன்று, நான்கு நாட்கள் கழிந்தன. கடந்திருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினைதான் தலையில் விடிந்து மறைந்தது. பெருத்த எரிச்சல் – மனச் சலனம் – ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு சண்டை சச்சரவுகள்.

ஒரு மாதத்திற்கு முன்தான் எல்லோருக்கும் சரிசமமாகச் சொத்துபத்துகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், அருகிலுள்ளர்கள் கரிந்து பேசினார்கள்.

‘எதுக்கு இப்பமே பிரிக்கியா? கெழவிக்கு எழுவதத் தாண்டுது. அவ மண்டைய போட்டதுக்கப்புறம் பிரிச்சா என்ன? அப்படி என்ன அவசரம் வேண்டிக் கெடக்கு?’ இந்த வார்த்தைகளெல்லாம் அவர்களின் காதிற்கு எட்டவில்லை. வடக்குப்புறம், தெற்குப்புறம் இருக்கும் வீட்டில் சின்னவர்கள் இருவர் இருக்க வேண்டும். நடுவில் இருக்கும் பெரிய வீட்டில் அம்மா இருக்கட்டும் என்று முடிவானது. மூத்த இரண்டு பேர் தனித்தனியாக வீடு கட்டிக்கொண்டார்கள். கடைசி மகளுக்கு இரண்டு வயல்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் ‘பெரிய வீடும் எங்களுக்குத்தான் வேண்டும்’ என்று மூன்றாவது உள்ளவனின் மனைவி சுசீலா சண்டையிட்டாள். உடன் குமாரையும் கைக்குள் போட்டுக்கொண்டு, கிழவியிடம் அடிக்கடி வார்த்தைச் சண்டைகளும் வாரியல் சண்டைகளும் நடைபெறும்.

ஒருமுறை வீட்டு முற்றத்தில் தண்ணீர் பிடிக்கும்போது வாய்ச் சண்டை முற்றி, ஒரு குடம் தண்ணீரைத் தூக்கி அப்படியே உடம்பில் ஊற்றிவிட்டாள். பக்கத்து வீட்டாளுங்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு, ‘மாமியார இப்படியா கொடுமப் படுத்தணும்… பாதவத்தி’ என்று பார்வையாலேயே துப்பிவிட்டுச் சென்றார்கள்.

“என்னக்கா எதுவும் பேசாம இருக்க? மழெ இப்போதைக்கு விட்டபாடு தெரியல”

அவள் பேச்சிற்கு பதில் வார்த்தை இல்லாமல், அக்குடிசையின் மேல் பட்டுத் தெறித்துச் செல்லும் மழைத் துளிகளின் சத்தம், வள்ளியை அலாதியான ஒரு மௌனத்திற்குக் கொண்டு சென்றது. ‘அப்பும் அது கொலைதான்’ என்று முடிவு செய்துகொண்டாள்.

அந்தக் கிழவி இறந்து நாள் கணக்குக்கூட ஆகவில்லை. திரும்பவும் சண்டை தொடங்கிவிட்டது. கட்டிக்கொடுத்த ஊரிலிருந்து சில பெரியவர்களைக் கூட்டிவந்து நியாயம் பேச வந்துவிட்டாள் மகள். ‘அம்மா கழுத்தல, காதுல உள்ளதெல்லாம் எனக்குத்தான் வேணும்’ என்று அன்றிரவு சரியான குளறுபடி. ‘அஞ்சு பிள்ள பெத்தவளுக்கு வந்த சோதனையா?’ என்று அருகிலிருந்தவர்கள் தங்களின் வருத்தங்களைக் கொட்டிக்கொண்டனர்.

சுசீலா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாள். வயலைக் கொடுத்த பிற்பாடு, நகையின்னா என்ன அர்த்தம்? முறுக்கு கட்டிப் பேசினாள். இப்படியே சிறிது நேரம் வாய்ச் சண்டைகளால் சென்றது. அப்போது எங்கிருந்தோ வந்த குமார்,

“பேசாம எங்க சித்தி சுசீலா சொன்னதுமாரி செய்யுங்க. இல்லன்னா கெழவிய தலவாணில அமுக்கித் தொங்கவிட்டமாரி, எல்லாரும் தூங்கும்போது அமுக்கிக் கொன்னுருவன்”

என்று குடிபோதையில் உளறினான். அங்கு கூடியிருந்தவர்கள் அவனை நாலு சாத்து சாத்தி, ஒரு ஓரத்தில் பேசவிடாதபடி கட்டிப் போட்டனர். இறப்புச் செய்திகேட்டு வந்தவர்களிடத்தில், ‘மாடிப்படிகளிலிருந்து கால் தவறி விழுந்து இறந்தாள்’ என்று சொல்லிச் சமாளித்தனர்.

அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சிலர் ‘அப்படியில்லை’ என்று காதுகடித்தாலும் ‘அவர்களே அப்படிப் பிறழ்வு பேசும்போது, நாம் என்ன செய்ய?’ ஒரு ஓரமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.

காவல்துறையையும் அப்படியே சொல்லி நம்ப வைத்தனர். எல்லாம் அந்த கட்டிக் கிடந்தவனின் வயதுதான் காரணம். மூத்த அண்ணன்கள் இருவரும் ‘ஒன்னா ஒரே எடத்துல கெடந்துட்டு இப்படிப் பண்ணீட்டீயிலே. என்னவும் செஞ்சுக்கங்க’ என்று மனம் தாளாமல், செய்ய வேண்டிய காரியத்தை அன்றே செய்துவிட்டுப் பெருந்துயரோடு சென்றுவிட்டனர்.

 “என்னக்கா பெரிய யோசன? நம்ம பாவம் பண்ணல. அதெ பண்ணவங்களுக்கு அது திருப்பிக் கொடுக்கும். எல்லாத்தையும் வச்சிக்க வாழ்க்க இருக்குதுக்கா. ஆனா வாழ்க்க எதையும் வச்சிக்கிறதில்லக்கா”

குத்த வைத்து உட்கார்ந்தவளை லேசாக ஒரு உளுப்பு உளுப்பிவிட்டாள். உடல் முழுவதும் பரவிய குளிர்ச்சி, வள்ளியைச் சற்று நிலைதடுமாற வைத்தது. உணர்வு வந்தவுடன் வானத்தை நோட்டமிட்டாள். கூடியிருந்த மேகங்கள் கரைந்து, மீண்டும் அந்த இதமான காற்று அப்பகுதியை ஆக்ரமித்திருந்தது.

இதற்கு மேலும் இப்படி இருந்தால் சரியிருக்காதென்று, வயலுக்குத் தன் தலையைத் திருப்பியிருந்தாள்.

தொப்பலாகிய வயலில் நாற்றுகள் மூழ்கியிருக்க, சட்டென்று ஓர் எலி வரப்பைக் கடந்து வாமடையின் அருகிலிருக்கும் கல்லிடுக்கிற்குள் சென்று மறைந்தது. அதைப் பார்த்தவள், ‘எப்படியும் பொறியில் மாட்டுவதற்கான நேரம் வரு’மென்று வாமடையைத் திறக்கச்சென்றாள்.

  • முத்தழகு கவியரசன்
Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More