ஷ்யாமா போகா

1 1,857

சிறுகதை

காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது. அனைத்தும் விர்ச்சுவல் செர்வர்கள். என்னளவில் எல்லா முயற்சியும் செய்துபார்த்துவிட்டு, அடுத்து இதை க்ளவுட் டீம்தான் சரி பண்ண முடியும் என்கிற புரிதலுக்கு வந்தவுடன், சர்வீஸ் டெஸ்க் இணையதளத்தில்  ஒரு கம்ப்ளெயிண்ட்டை புக் செய்தேன். இனி டீம் அனுப்புகிற பதிலைப் பொறுத்துதான் அடுத்த வேலை. எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். மெயிலைத் திறந்து ஏதாவது வேலை மிச்சமிருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. டைரியைத் திறந்து இன்று செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை ஒரு பார்வை பார்த்தேன். அனைத்தும் செர்வரில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். டீமின் பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அதுவரை..?  ஓய்வு.  

சாட்டை சுழற்றின பம்பரம் போலச் சுழன்றுகொண்டே இருந்துவிட்டு, சுழற்சியைத் திடீரென்று நிறுத்துவது எப்படி? ராட்டினம் தன் அதிவேகச் சுழற்சியைத் திடீரென நிறுத்தினால், அதில் அமர்ந்திருப்பவர் என்ன ஆவார்? மண்டை பரபரத்தது. இன்றென்றில்லை. பரபரப்பான வேலைக்கு நடுவே வரும் இடைவெளியை, ஓய்வு நேரத்தை என்ன செய்வதென்று எப்போதுமே தெரிந்ததில்லை. வெகுகாலம் நின்றிருந்த பெரிய மரத்தை வெட்டிய பிறகான வெற்றிடம் போல உறுத்தும்; துன்புறுத்தும். முன்பில்லாத அளவு இடம் கிடைத்திருக்கிறது, வெளிச்சம் கிடைக்கிறது என்றெல்லாம் மகிழாது.  

கொஞ்சநேரம் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் வேலைப் பளுவிற்குப் பழகியவள். ஒருவிதத்தில் அதற்கு அடிமைப்பட்டிருந்தேன். இப்போது சும்மா இருப்பதின் அழுத்தம் தாளாது ஒரு பதற்றம் உருவானது. அதைச் சரி செய்ய, அலுவலக அறையைவிட்டு உடனே எழுந்து, வெளியே போகவேண்டும் போலத் தோன்றியது. ஆணாக இருந்திருந்தாலோ இன்றைய  தலைமுறையாக இருந்திருந்தாலோ தம் அடிக்கப் போயிருப்பேனோ என்னவோ..  எனக்கு ஏதாவது ஒரு மரத்திடம் போக வேண்டும். குனிந்து அதனடியில் இருந்து எதையாவது பொறுக்க வேண்டும். செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலோடு இலைகள், சருகுகள், கற்கள் குத்தும்படி மரத்தடித் தரையில் நிற்கவோ நடக்கவோ வேண்டும். அதன் மரப்பட்டைகளில் அல்லது புதர்ச்செடிகளில் விரல் முட்டிகளை வலிக்கும்படியாகத் தேய்க்க வேண்டும். When I’m among the Trees-இல் மேரி ஆலிவர் சொல்வதுபோல, ’என்னைப்போல நீயும் ஒளி ஊடுருவவும் பிரதிபலிக்கவும் உருவானவள்தான்’ என்று மரங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்.

சிஸ்டமை லாக் செய்துவிட்டு, லிப்ட்டைத் தவிர்த்துப் படிகளின் வழியாக நான்கு மாடிகள் வளைந்து வளைந்து இறங்கி, ஆபீஸ் கேம்பஸின் வெளிப்பிரகாரத்திற்கு வந்தபோது வெயிலில் கண் கூசியது.

கடைசியாக உடலை வெயில் சுட்டது எப்போது?

தூரத்தில் கதலி மரம். இன்னும் பூக்கவில்லை. அருகே ஏழிலைப்பாலைகள். இப்போதுதான் மொட்டுவிடத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் தில்லியின் அத்தனை ஏழிலைப்பாலை மரங்களும் பூத்து, மொத்த தில்லியும் நறுமணத்தால் நிறைந்திருக்கும். மரத்தடியெங்கும் பூக்கள் உதிர்ந்து தரை மூடிக் கிடக்கும். பூக்கள் உதிர்ந்து கிடக்கிற காட்சியை நினைத்தபோது, நேற்று வீடு முழுக்க அதேபோல, ஆனால் பூக்களுக்குப் பதிலாக பூச்சிகள் நிறைந்து கிடந்த  காட்சி தோன்றியது.

நேற்றிரவு நான் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ பறக்க ஆரம்பித்தது. முதலில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்தது; பிறகு மெதுமெதுவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. தூசியா, சாம்பலா, ஈக்களா? ஏதோவொரு பூச்சியின் படையெடுப்பு என்று புரிந்துகொள்வதற்கு எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தது. அவை வெட்டுக்கிளிகளைப்போல இருந்தன. கடுகைவிடச் சற்றே பெரிய வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள். அவை மட்டும் சற்றுப் பெரியதாக இருந்திருந்தால் பைபிளில் வருகிற வெட்டுக்கிளிகளின் படையெடுப்புபோல இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

அதிகாலை வேலைக்குப் போய், இரவு வீடு திரும்புவள் என்பதால் ஜன்னலைத் திறப்பதே இல்லை. வாசற்கதவையும் வீடு திரும்பியதும் அடைத்துவிடுபவள். எதுவும் திறந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் எழுந்துபோய் ஜன்னல்களையும் கதவையும் சரி பார்த்தேன். அனைத்தும் பூட்டியே இருந்தன.

‘விளக்கை அணைத்தால் பூச்சிகள் போய்விடும்’ என்று நினைத்து, விளக்கை அணைத்தேன். சிறிது நேரத்தில் அத்தனையும் தரையில் விழுந்து இறந்தன. படுக்கையை உதறி வீட்டைப் பெருக்கி அள்ளிக் குப்பையில் கொட்டிய பிறகும் படுக்கைக்குத் திரும்பியபோது நிறைய பூச்சிகள் காணக் கிடைத்தன. நான் களைப்பில் அப்படியே உறங்கிப்போயிருந்தேன். காலை எழுந்தபோது வீடெங்கும் பூச்சிகள் இறந்து கிடந்தன, கறுப்பும் வெள்ளையுமாக, எள்ளை வாரி இறைத்தாற்போல.

அப்படியென்றால் விநோத நிகழ்வு இன்று காலை அல்ல,  நேற்றிரவே ஆரம்பித்திருக்கிறது.

ஏழிலைப்பாலை மரத்தடியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. இந்த மரத்தடிப் பகுதிக்கு அலுவலர்கள் யாரும் வருவதில்லை. சற்றுத் தொலைவில்  கொத்துக்கொத்தாக வெள்ளைப் பூக்களோடு அந்த மரம். 

அதன் ஒரு பெரிய கிளை ஒடிந்து, அதே நேரம் முற்றிலும் உடையாமல்  தொங்கிக்கொண்டிருந்தது. உடைத்தது, இங்கே குடும்பம் குடும்பமாக, நாள் முழுக்க  சேட்டை பண்ணிக்கொண்டுத் திரியும் குரங்குகளாகக்கூட இருக்கலாம். மரத்தில் பாதி இதய வடிவமும் ஒடிந்து கீழே தொங்கிக்கொண்டிருந்த கிளையில் பாதி இதய வடிவமுமாக, அக்கிளை ஒடிந்திருந்து. மரத்தை நோக்கி நடக்க நடக்க, அம்மரத்தில் ஒரு உடைந்த இதயம் சேர்வதும் பிரிவதுமாகக் காட்சிப்பிழையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முடிந்தவரை சேர முயற்சித்து எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகே உடைவதென்பது இதயத்தின் விதி போல; அது மரத்தாலானதென்றாலும்.  

மரத்தருகே வந்திருந்தபோது அதனடியில் நிறைய மலர்கள் உதிர்ந்தன. எனக்குத் தாகூரின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. பெண் குழந்தை ஒன்று அதன் அம்மாவிடம் பேசுவதுபோல அமைந்தது.

  • நான் திடீரென்று சம்பா மலராக மாறி
    உயரமான கிளையில் இருந்தால்
    நீ என்னை அறிந்துகொள்வாயா?
    நீ குளித்து ஈரத்தலையோடு போய்
    பிராத்தனை செய்கிறபோது வருகிற வாசனை
    என்னிடமிருந்து வருகிறது என்று
    நீ அறிந்துகொள்வாயா?
    மதிய உணவுக்குப்பின் நீ
    ராமாயணம் வாசிக்கிறபோது
    உன் புத்தகத்தில் நான்
    என் நிழலைப் படியவிட்டால் 
    அது உன் சிறு குழந்தையின் நிழல் என்று
    நீ அறிந்துகொள்வாயா?
    இரவில் நீ தொழுவத்தில் விளக்கேற்றும்போது
    நான் மீண்டும் மண்ணில் வீழ்ந்து
    உன் குழந்தையாக மாறும்போது
    நான் உன்னிடம் ஒரு கதை சொல்லக் கேட்பேன்
    இவ்வளவு நேரம் எங்கிருந்தேன் என்று
    நீ என்னைக் கேட்பாய்
    சொல்ல மாட்டேன் என்று நான் சொல்வேன் .

சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, உதிர்ந்து கிடந்த மலர்களை எல்லாம் பொறுக்கியெடுத்து உள்ளங்கைகளில் வைத்து, ஆழ முகர்ந்து பார்த்தேன். அதன் வாசம் சற்றே தீவிரமானது. ஒரே நேரத்தில் ஈர்க்கவும் விலக்கவும் செய்ய வைக்கும் தனித்துவமானது.

சற்றுத் தொலைவில், கீழே புல் தரையில் ஒரு சிறிய வெட்டுக்கிளி. எனக்கு மீண்டும் வெட்டுக்கிளிகளைப் போன்ற அந்தப் பொடிப் பூச்சிகள் நினைவுக்கு வந்தன. அவற்றைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும்போலத் தோன்றியது. ஆபீஸ் வருகிற வழியில், சிறிய பூச்சிகள், பச்சைப் பூச்சிகள் என்று பல்வேறு விதமான வார்த்தைகளில் அவற்றை விவரித்து கூகுளில் தேடியபிறகு உத்தேசமாகக் கிடைத்திருந்த அதன் பெயரை, ‘கோகுல் பையா ஜிந்தாபாத்’ என்று என் வழக்கமான கோஷத்தை மனசுக்குள் ஒரு சிரிப்புடன் சொல்லிக்கொண்டு, குனிந்து போனில் கூகுளைத் திறந்து அந்த வார்த்தையை டைப் செய்யப் போனபோதுதான், சத்தமாக ஒரு ஆண் குரல் கேட்டது.

“ஷ்யாமா போகா”

நான் அதிர்ந்தேன். திடுக்கிட்டதில் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழப்போன போனை இறுகப் பற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தேன்.

வழக்கமாக ஆண்கள் அணிகிற சட்டையின் காலர் போலில்லாமல், குர்தா ஜிப்பாவில் இருப்பது போன்ற வட்டமான காலர் வைத்த, சட்டையென்றோ குர்தா என்றோ சொல்ல முடியாத ஒரு கதர்ச் சட்டையில், தானும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தபடி ஒருவர்.

இல்லை; இவர் வேறு ஏதோ கூறியிருக்க வேண்டும்.

“ஷ்யாமா போகா”  மீண்டும் அருகில் இருந்தவர்.

விசித்திர நாளின் தொடர்ச்சியா இது? இது, நான் இப்போது தேட இருந்த வார்த்தை. இன்று காலைதான் முதன்முதலில் தெரிந்துகொண்ட வார்த்தை; நீங்கள் மனத்தில் நினைத்துக்கொண்டிருந்த, நீங்கள் ம‌ட்டுமே அறிந்த அல்லது நீங்கள் அப்போதுதான் எதிர்கொள்ள நேர்ந்த அபூர்வமான ஒரு  விஷயத்தை, நீங்கள் முன் பின் அறியாத ஒருவர் உங்களிடம் வந்து உரக்கச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

Coincidence, Synchronicity, Carl Jung, Serendipity, Kate Beckinsale, John Cusack. என் மூளை malfunctioning பண்ணுகிற கம்ப்யூட்டர் போல, நிறைய வார்த்தைகளைச் சம்பந்தமில்லாமல் துப்பியது.

இன்னும் சற்று நெருங்கி நின்றிருந்தாலும் இருவரின் உடைகளும் தொட்டுக்கொள்ளும்படியான அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம், ‘ஏன் ஷ்யாமா போகா என்று  சொன்னீர்கள்’ என்று கேட்கலாமா?

நான் கேட்க நினைத்ததைப் புரிந்துகொண்டாற்போல, அவரே சொன்னார்.

“இந்த வெட்டுக்கிளியைப் போன்ற மிகச் சிறிய ஷ்யாமா போகா  இந்நேரம் வந்திருக்க வேண்டும்”

‘வந்துவிட்டதே’

சொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை.

“உங்களுக்கு அந்தப் பூ பிடிக்குமா?”

“சம்பா?”

என் மனத்துக்குள் மீண்டும் தாகூரின் வரிகள்.

“நீ என்னை அறிந்துகொள்வாயா?”

மீண்டும் அவரது உரத்த, ஆனால் சோர்வுற்ற குரல்.

‘இவர் மீண்டும் என் மனத்தைப் பிரதிபலிக்கிறார். திஸ் இஸ் டூ மச்’

மனத்துக்குள் முணுமுணுத்தேன்.

“யெஸ்.. நீ என்னை அறிந்துகொள்வாயா?”

அவரைப் பார்த்து முகம் மலரச் சிரித்தேன்.

அவர் சிரிக்கவில்லை. ஒரு சின்ன தடுமாற்றத்தோடு பார்வையை விலக்கி, மீண்டும் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தார்.

“இது ஷ்யாமா போகாக்கள் வருகிற பருவம். அவை நவராத்திரியின் வருகையை அறிவிப்பவை”

நான், திறந்திருந்த கூகுளில் நவராத்திரி 2023 என்று டைப் செய்தேன்.

நாளை நவராத்திரி. ஹா! அடுத்த வியப்பு. என் மனத்தின் இறுக்கங்கள் எல்லாம்  மெல்ல மெல்லத் தளர்ந்துகொண்டிருப்பதும் நான்  வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். இன்னும் சிறிது நேரம் இவருடன் நின்றாலும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். என் இயல்பிற்கு அது வினோதமாகப் பட்டது. நான் அவரிடமிருந்து சற்று விலகி மரத்தின் அந்தப்பக்கமாக நகர்ந்தேன்

“போகா என்றால் பூச்சி. ஷ்யாமா என்றால் கறுப்பு. கறுப்பு, காளியின் வண்ணம். காளி மாதாவின் வருகையை அறிவிக்க வருபவை என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்களே.. உனக்குத் தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா?”

‘உனக்கு?! நம் ஊரில்?!’

எனக்குப் புரிந்துவிட்டது. அவர் என் அருகில் வந்து நின்றது, பழகிய நபர் போலப் பேசுவது, தாகூர், காளி என்றெல்லாம் சொல்வது , எல்லாவற்றுக்கும் இப்போது  விடை கிடைத்தாற்போல இருந்தது. இவர் என்னை வேறு யாரோ என்று நினைத்திருக்கிறார். இங்கே இப்படி அடிக்கடி நடக்கும். என்னை பெங்காலி என்றோ  மலையாளி என்றோ நினைத்துக்கொண்டு நிறைய பேர் பழக நெருங்குவது.

“நீங்கள் என்னை வேறு யாரோவென நினைத்துக்கொண்டீர்கள் போல. நான் தமிழ். பெங்காலி இல்லை”

“தமிழென்றால், பிறகு நீங்கள் அந்த மலரை சம்பா என்று ஏன் அழைத்தீர்கள்?”

உண்மைதான். தமிழிலிலோ ஆங்கிலத்திலோ இல்லாமல், இதை சம்பா என்று ஏன் சொன்னேன்? எனக்கே தெரியவில்லை.

‘இன்று ஒரு வினோதமாக நாள். அதனால்தான்’

மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் போலப் பட்டது. திரும்பி அவரை ஏறிட்டபோது, அவர் அவசர அவசரமாகப் பார்வையை அந்த முறிந்த மரக்கிளையின்புறம் திருப்பினார்.

இப்போதுதான் கவனித்தேன்.  கலைந்த தலை, கசங்கி அழுக்கடைந்திருந்த ஆடை. எங்கோ புழுதியில் விழுந்து, புரண்டு எழுந்து வந்தாற்போல. இப்படி ஒரு கோலத்தில் செக்யூரிடி எப்படி உள்ளே விட்டார்? கழுத்தில் அடையாள அட்டைகூட இல்லை. தொளதொளப்பான சட்டையும் பேண்ட்டும், ஹேங்கரில் தொங்கவிட்டதுபோலத் தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன.  பேண்ட் அவரது மெலிந்த தேகத்தின் காரணமாக, நேராக இல்லாமல் சுருங்கிச் சுருங்கி தரை வரைக்கும்  இருந்தது. 

வருத்தமா, கவலையா, குழப்பமா, இல்லை வெறும் யோசனையா? என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தத்தில், ‘இயல்பாக இல்லை; உணர்ச்சிகளற்ற வெறுமையில் நிற்கிறார்’ என்று தோன்றியது.

நெருங்கிப் போய் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல நினைத்தேன். நினைத்த மாத்திரத்தில் உடல் சிலிர்த்துக்கொண்டேன். நானா இப்படி நினைத்தேன்? பொது இடத்தில், கூட்ட நெரிசலில், யாராவது தவறுதலாகத் தொட்டுவிட்டால்கூட அதிர்ச்சியடைந்து பின்வாங்குகிற நானா? ஏன் இவர் கைளைப் பற்றிக்கொள்ள  யோசித்தேன்? இங்கிருந்து கிளம்புவது நல்லது.

சிந்தனையை அலுவக வேலையின் பக்கம் திருப்பினேன். இந்நேரம் எத்தனை மெயில்கள் வந்திருக்கும்? ஆபீஸ் போனில் எத்தனை பேர் கூப்பிட்டிருப்பார்கள்? அறைக்கும் திரும்ப வேண்டும்; இவரிடம் கூடுதலாகப் பேசவும் வேண்டும். அபூர்வமாகத்தான் இப்படி என் எண்ண அலைவரிசையோடு ஒத்துப் போகிறவர்கள் கிடைக்கிறார்கள். வேகமாகத் திறந்துவிட்ட இருபக்கக் கதவுபோல, நிற்பதற்கும் போவதற்கும் நடுவே முடிவெடுக்க முடியாமல் மனம் அல்லாடியது.

என் இண்ட்ரோவெர்ட் குணத்தை மீறிக் கேடேன்.

“நீங்க எந்த டிவிஷன்?”

“வெல்ஃபேர் டிவிஷன்”

“ஓ லைப்ரரிக்கு அடுத்த அறை?”

“ஆமாம். ஆனால் இரண்டாவது தளமில்லை. மூன்றாவது”

“நான் நான்காவது தளம்”

பதிலில்லை.

“நாம் எப்படியும் இதற்கு முன்பு உரையாடி இருப்போம்”

அவர் என்னை ஏறிட்டபோது, கண்களில் தெரிந்தது அதிர்ச்சியா, இல்லையா?

“நான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. இங்கே எல்லா அதிகாரிகளும் ஏதாவதொரு ஐடி சார்ந்த வேலைக்காக என்னைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அதனால் அப்படிச் சொன்னேன்”

மறுபடியும் பதிலில்லை.

“சரி, நான் போக வேண்டும். உங்களை எப்போதாவது அறையில் வந்து சந்திக்கிறேன்”

மீண்டும் மவுனம். எனக்கு சற்றே அவமானமாக இருந்தது. காரணம், இப்படி ஒருவரிடம் வலியப் பேசுவது எனக்குப் புதியது. வலியப் பேசுவது, உணர்ச்சிகளைக் காட்டுவது என்பதெல்லாம் என்னளவில் என் ஆன்மாவை நிர்வாணமாக நிற்கவைப்பது போன்றது.

நான் கிளம்பினேன்.

“டூ யூ நோ? நவராத்திரி முடியும்போது ஷ்யாமா போகாக்களின் வருகையும் நின்றுவிடும் “

இதை ஏன் சொல்கிறார்? சிலருடைய உரையாடல்கள் ஒன் வே ட்ராபிக் போல, தன் உலகத்தை மட்டுமே சுற்றுவது. சற்று முன்பு ஏற்பட்டிருந்த ஈர்ப்பு இப்போது சலிப்பாக மாறியது. சம்பாவின் நறுமணம்போல, ஒரே நேரத்தில் ஈர்க்கவும் விலக்கவும் செய்கிறாய் என்று சொல்ல நினைத்ததை மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். நடக்க ஆரம்பித்த நான், மனம் கேட்காமல் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தபடியே இருந்தார். நெருங்கி வந்து என் கையிலிருந்த பூக்களில் ஒன்றை எடுத்து, என் தலையருகே கொண்டு வந்தார். என் கன்னமெல்லாம் ஜில்லென்று ஏதோ பரவுவதுபோலிருந்தது. அதை அவர் கவனித்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வும் கூடவே ஏற்பட்டது.

ஏதோ புரிந்துகொண்டாற்போல இருவரும் ஒரே குரலில் சொன்னோம்.. அல்லது கேட்டோம்,

“நீ என்னை அறிந்துகொள்வாயா?”

என் காதோரத்தில் சில்லென்று அவரது விரலோ அல்லது பூவோ தொட, நான் வெடுக்கென்று பின் வாங்கினேன்.

“நான் உன்னிடம் சொல்ல மாட்டேன் என்று நம் இந்த உரையாடலை முடிக்க வேண்டும் இல்லையா?”

சொல்லிவிட்டுப் பின்னங்கையால் கன்னத்தைத் தேய்த்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

அறைக்குத் திரும்பி, அதுவரை கையில் வைத்திருந்த பூக்களை டேபிள் மீது வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சர்வீஸ் டெஸ்கிலிருந்து கம்ப்ளெயிண்ட்டுக்குப் பதில் மெயில் வந்திருந்தது. சில காரணங்கள் தெரிவித்து, அடுத்த நாளைக்கான டைம் ஸ்லாட் கொடுத்திருந்தார்கள். நான் வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று மெயில், போன், வாட்சப் என்று ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்து ஏமாற்றமடைந்தேன். மீண்டும் ஓய்வு. சாப்பிடக்கூட நேரம் கொடுக்காத அலுவலகமா இன்று என்னை இத்தனை விடுதலையாக வைத்திருக்கிறது?

ஆபீஸ் போன் ஒலித்தது.

திங்க் ஆஃப் த ஏஞ்சலோ ஸ்பீக் ஆஃப் த டெவிலோ.. இதோ வந்துவிட்டது  வேலை.

“மேடம் எங்கள் இண்ட்ராநெட்டில் ஒரு பிரச்சனை. என்ன செய்வது?”

“எந்த டிவிஷன்னு சொல்லுங்க, எஞ்சினியரை அனுப்புறேன்”

“வெல்ஃபேர்”

“ஓ..! ரூம் நம்பர்?  205 ஆ, 305ஆ? ”

“305”

“சரி”

305 என்றால் மூன்றாவது தளம். கீழே பார்த்தவருடைய அறை. அழைத்தது அவரேதானா?

இதுவரை யாருடைய அறைக்கும் நான் போய் சரி செய்து கொடுத்ததில்லை. நான் வகிக்கும் பதவிக்கு அது பொருந்தாதது. எள் என்றால் எண்ணெயாக, சொன்ன வேலையைச் செய்து முடிக்க, கீழே எஞ்சினியர்கள் இருக்கிறார்கள். நான் போகிறேன் என்று தெரிந்தால் அவர்கள் தடுப்பார்கள். நான் போவது சரியில்லை.

லிஃப்டில் நான் மூன்றை அழுத்தியபோது, லைப்ரரியிலிருந்து இரண்டு முறை மெயில் அனுப்பி நினைவுபடுத்தியிருந்த, வெகு நாட்களாக லைப்ரரிக்கு ரிட்டர்ன் செய்யவேண்டிய புத்தகங்கள் இரண்டும் என் கையில் இருந்தன.

305 அறை, நான்கு அதிகாரிகள் இரண்டு அசிஸ்டண்டுகள் அமரும்படி, விசாலமாக இருந்தது. நான் கீழே பார்த்தவரைத் தேடினேன். கிடைக்கவில்லை. இன்னும் அவர், தன் அறைக்குத் திரும்பவில்லை போல.

“மேடம்.. நீங்க இங்கே?

“போன் வந்ததே”

“யார் சார் ஐடி டிவிஷனுக்குக் கால் பண்ணினது?” ஒரு அசிஸ்டெண்ட் எழுந்து சத்தமாக் கேட்டார்.

எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்களே தவிர, பதிலில்லை.

“ஆஷிக்கை அனுப்பியிருக்கலாமே மேடம்..”

“இல்லை. லைப்ரரியில் புத்தகம் திருப்ப வேண்டியிருந்தது. அப்படியே பிரச்சனை என்னவென்று கேட்டுப் போவோம்னு”

“சரி உட்காருங்க. டீ குடிச்சுட்டுப் போகலாம்”

வற்புறுத்தி டீ பிஸ்கட் வரவழைத்தார்கள். அந்தநேரத்தில் சில இணையதளங்கள் உபயோகிப்பது குறித்து சந்தேகங்கள் கேட்டார்கள். நான் விளக்கினேன். “மேற்கொண்டு பிரச்சினை என்றால் போன் பண்ணுங்கள்” என்றேன். எழுந்தபோது கேட்டேன்.

“அந்த சார் எங்கே?”

“யார்? எல்லாருமே இங்கே இருக்கோமே!”

யார்..? அட! அவர் பேர் கேட்கவில்லை. பதவியும் கேட்கவில்லை. என் தவறு.

“ஒரு.. பெங்காலி சார்”

“அவங்க இப்போ இங்கே கிடையாது மேடம். முன்ன இருந்தாங்க”

அதனால்தான் குர்தியில் வந்திருக்கிறார் போல.

“மாறுதலாகிட்டாரா?”

அறை நிசப்தமானது.

“எங்க டிவிஷன்ல் ஒரே ஒரு பெங்காலி சார்தான் இருந்தாங்க மேடம். இப்போ அவங்க இல்லை”

“இன்னிக்கு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். கீழே பார்த்தேன்”

இப்போது ஒரு மேடம் பேசினார்கள்,

“போன நவராத்திரியோட மேடம். எனக்கு ஞாபகம் இருக்கு”

“ஆமா உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கும்..”

வேறொருவர் இடை மறித்தார்.

“ஆமா சார். ரெண்டு நாள் லீவு போட்டா, எட்டு நாள் லீவு வர்ற மாதிரி இருந்தது. நான் லீவு அப்ளை பண்ணிட்டு, சார் வந்தா அப்ரூவல் வாங்கலாம்னு காத்திருந்தேன். சார் வரவேயில்லை”

“அப்புறமும் நீங்கதான் லீவ் லெட்டரை டேபிள்ல வச்சுட்டுக் கிளம்பிட்டீங்களே..”

மறுபடியும் அந்த மேடத்தைச் சீண்டினார்.

“நான் என்ன பண்றது சார்..? அம்மா ஊர்ல உடம்பு முடியாம இருந்தாங்க. எனக்குப் போயே ஆக வேண்டியிருந்தது. ஏற்கனவே ஊருக்கு டிக்கெட் வேற போட்டிருந்தேன். மேலும், அன்னிக்கு அவங்க மனைவி இறந்த விஷயம் நமக்கெல்லாம் லேட்டாதானே தெரிஞ்சது.. சொல்லுங்க”

நான் அதிர்ச்சியடைந்து அமைதியானேன். அவரது கோலமும் வெறுமையும் புரிகிறாற்போல இருந்தது.  நான் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எல்லாம் சரியாகும்’ என்று சொல்லியிருக்க வேண்டும்.

“சார் ரொம்ப சென்சிடிவ்.  இலக்கியம், தாகூர், பூக்கள்னு இப்படியே இருப்பார். நாங்க எல்லாம் போரடிச்சா டீக்கடைக்குப் போவோம். சார் மரத்தடில போய் நின்னுட்டு வருவார்”

“இப்பவும் அங்கேதான் நிற்கிறார்”

ஒரு அசிஸ்டண்ட் எழுந்து, என்னை நோக்கி வந்தார்.

“வண்டில போகும்போது ஏதோ பொடிப்பூச்சி மொத்தமா பறந்திருக்கு. சார் லேசா தடுமாறினதுலதான் விபத்து.  புதுசா கல்யாணம் ஆகியிருந்தது. ஆனாலும் மனைவின்னா உயிரு”

சொல்லிகொண்டே மொபைலைத் திறந்து சரசரவென்று உருட்டி, ஒரு புகைப்படத்தில் நிறுத்தி அதை என்முன் நீட்டினார்.

கை நிறைய மெகந்தியும் சிவப்பு வெள்ளை வளையல்களும் அணிந்தபடி, கழுத்தைப் பின்புறம் திருப்பிக் கூந்தலைக் காட்டியபடி இளம்பெண்.

“சார் தைரியமானவங்கதான். ஆனா மென்மையானவங்க. பத்தாம் நாள் மனைவிக்குக் காரியம் முடிச்ச கையோட தொங்கிட்டாங்க” 

சற்றுமுன் பார்த்ததைப்போல் உணர்ச்சிகளற்றதாக இல்லாமல், காதலோடும் முகம் கொள்ளாத சிரிப்போடும் அவள் காதோரக் கூந்தலில் ஒரு சம்பா மலர்க் கொத்தைச் சூட்டிக்கொண்டிருந்தார் அவர்.

  • வனிதா ரெஜி
1 Comment
  1. Sankar T A B says

    Very Good Narration..

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More