நூற்று நாற்பது

0 957

சிறுகதை

வாசு அந்த இரும்பு ஜன்னலில் கை நிறைய சில்லறையுடன் கூடிய பணத்தை நீட்டினான்.

அது ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே இருந்த பணியாள், வாசு கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப்  பார்த்தான்.

சில கசங்கிய  நோட்டுகளும் குறிப்பாக அதிகமான அளவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசுகளும் இருந்தன. அந்தப் பணியாள் வாசுவை நிமிர்ந்து  பார்த்தான். அவன் பார்வை ஒரு சொரி நாயைப் பார்ப்பதுபோல் இருந்தது. 

****

வாசுவுக்கு  நேரம் ஆக ஆகக் கைகள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன. பன்னிரெண்டு  மணிக்குக் கடையைத் திறந்துவிடுவார்கள். அதற்குள் காசு ரெடி பண்ண வேண்டும். அங்கே இங்கே என்று தேடி எடுத்ததில் நூற்றிப் பத்து ரூபாய் கிடைத்துவிட்டது. 

மனைவி வழக்கமாகப் பணம் வைத்திருக்கும் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் ஒரு ரூபாய்கூடக் கிடைக்கவில்லை. ‘எப்படிக் கிடைக்கும்? அவள் வைக்கிற எல்லாவற்றையும் லவட்டிக் கொண்டால்..’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். இனி அவளிடம்தான் தஞ்சமடைய வேண்டும். எங்கேனும் நமக்குத் தெரியாத இடத்தில் வைத்திருப்பாள். 

மெதுவாக “உஷா… உஷா…” என்று அழைத்துப் பார்த்தான். அவள் உள் அறையில் இருப்பது தெரிந்தது. பதில் ஏதும் கிடைக்காததால் மெதுவாக எட்டிப் பார்த்தான். இளம் காலையில் குளித்து, தன் அழகிய கேசத்தை மெதுவாக மேலே சுற்றும் பேனில் அலையவிட்டு, நெற்றியில் மெரூன் கலர் பொட்டினை வைத்து, சொல்லச் சொல்லக் கேட்காது இழைத்த மஞ்சளைப் பூசிய முகத்துடன் அவள் கட்டிலில் படுத்திருந்தாள். 

‘இவள் தேவதைக் குலம். அதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று நினைத்துக்கொண்டான். மெதுவாக உள்ளே நுழைந்து அவள் அருகில் சென்று, அவளது இதழின் மேல் மெதுவாகக் கை வைத்து, “இந்த சப்பட்ட  வாய் ரொம்ப அழகுடி உனக்கு…” என்று கூறினான். 

“ஆமா… இந்த டயலாகை இன்னும் எத்தனை வருசத்துக்கு சொல்லுவிங்க.. ரொம்ப போர்” என்ற உஷாவைப் பார்த்து,

“சரி… இன்னைக்கு புதுக் கவிதையில்  உன்னைப் புகழட்டுமா?” என்று வாசு கேட்டான். 

தன் கணவன் ஒரு கவிஞன் என்ற பெருமை மிக அதிகம் உஷாவுக்கு. ஆனால் வீட்டின் நிலைமையைப் புரிந்துகொள்ளவே இயலாத கவிஞனை  எப்படிப் பாராட்டுவது என்றுதான் திகைப்பாள். 

“கவிதை வேண்டாம். அதான் நீங்க எழுதிக் குவிச்சு வச்சிருக்கிங்களே.. சின்னதா ஒரு முத்தம் கொடுத்துட்டு விலகுங்க”

“முத்தம் அப்புறம். முதல்ல கவிதைதான்”

“சரி, ஆரம்பிங்க..”

“அதுக்கு முன்னாடி..”

“என்ன அதுக்கு முன்னாடி?”

“இல்ல.. கவிதை பிடிக்கலைன்னு நீ முத்தம் கொடுக்காம விட்டுட்டா?”

“எப்போ உங்க கவிதை எனக்குப் பிடிக்காம போயிருக்கு?”

“சரி சரி, ஒத்துக்கறேன். இப்போது முதல்ல முத்தமா, இல்ல கவிதையா?”

“ம்ம்.. சரி, கவிதையவே சொல்லுங்க”

“சரி, கொஞ்சம் இடம் விடு. நானும் பக்கத்தில படுத்துக்கறேன்”

உஷா மெதுவாக நகர்ந்து அவனுக்கு அந்தப் பெரிய கட்டிலில் சிறிது இடம் கொடுத்தாள். வாசு அவளை உரசியபடியே படுத்துக்கொண்டான். அவளது வலதுபுறம் முழுதும் அவன் மேல் மெதுக்மெதுக்கென்று உரசியது. 

“போ.. நான் கவிதைய மறந்துடுவேன் போல இருக்கு”

“ஏன்? என்ன ஆச்சு?”

“நீ இப்படி மெதுக் மெதுக்ன்னு இருந்தா..”

உஷா சிரித்தாள். 

“போதும்.. கவிதைய சொல்லுங்க..”

“மான் கொஞ்சிப் புலி நாணும் குற்றாலக் குறிஞ்சி இவள்”

“ஆ..” என்றாள் உஷா. 

“ஒரு வரிதானா?”

“இல்ல, இன்னும் இருக்கு.. சொல்லட்டுமா?”

“வேணாம். இந்த ஒரு வரியே போதும். இந்த வரியில என் இனத்தைச் சொல்லி, வாழும் இடத்தின் சமத்துவ அன்பைச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இருங்க, நானே உங்களுக்கு முத்தம் தரேன்”

“இல்ல, இப்போ வேணாம். நான் முழுக் கவிதையையும் சொல்லிட்டு, முழுசா ராத்திரிக்கு வாங்கிக்கறேன். இப்போதைக்கு.. “

“சொல்லுங்க. இப்போது என்ன?”

“ஒரு முப்பது ரூபா வேணும்”

“அதானே.. எனக்குத் தெரியும். மணி பன்னெண்டுதானே ஆகுது?”

காசு வைக்கும் இடம் எல்லாம் அவள் தேடி எடுத்ததில் இருபது ரூபாய் மட்டுமே கிடைத்தது. 

“நான் நூறு ரூபாய் கிட்ட வச்சிருந்தேனே… நீங்க எடுத்திங்களா?”

“இல்லையே.. நான் எடுக்கல..”

வாசு பொய் சொன்னான்.

“அதுபத்தி எனக்குக் கவலை இல்ல. குடிகாரங்க எப்பவும் குடிக்கிறதுக்கு முன்னாடி பொய் பேசுவாங்க. குடிச்ச பின்னாடி உண்மைக்கு மாறிடுவாங்க..”

“இந்தாங்க.. இருபது ரூபாதான் இருக்கு”  என்று கொடுத்தாள். 

கால் பாட்டில் விலை நூற்று முப்பது ரூபாய்தான். ஆனால் கடைக்காரனிடம் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்தால்தான் சரக்கு தருவான். நூற்று முப்பது  ரூபாய்க்குப் பத்து ரூபாய் லஞ்சம். பால் விலையை மூன்று ரூபாய் குறைக்க முடிந்த அரசால் இந்த லஞ்சத்தை கட்டுப்படுத்த இயலாது போய்விட்டது போலும். 

வாசு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டான். அவன் கைகள் மெதுவாக நடுங்கியபடி இருந்தன.  

“சே..” கைகளை உதறியபடி சாலையில் நடக்க ஆரம்பித்தான். தெரிந்தவர் யாரேனும் வந்தால் பத்து ரூபாய் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி யாரும் அகப்படவில்லை. 

கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அதன் இரும்புக் கதவினைப் பிடித்தபடி பத்து பேருக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தனர். 

‌வாங்கி வைத்துக்கொண்டிருந்தவர்களில் சிலர், கூட்டணி அமைத்து கால் பாட்டிலுக்கு பாகப்பிரிவினை நடத்திக்கொண்டிருந்தனர். 

‌அந்த இடத்தில் தரையெங்கும் தண்ணீர்  நிரம்பியிருந்தது. ‌உள்ளே சென்று குடிக்கும் ‘பார்’ வசதி முடக்கப்பட்டிருந்தது. அதனால் பாட்டில் வாங்கியவர்கள் அந்தக் குறுகலான கடையின் முன்னேயே குடித்துக்கொண்டிருந்தனர். 

‌வாசு சுற்றிலும் பார்த்தான், ‘யாராவது பத்து ரூபாய் கொடுக்கும் நண்பர்கள் இருந்தால் நலமாயிற்றே’ என்று. அப்படி யாரும் ‌இல்லை.

‘சரி.. இருப்பதைக் கொடுப்போம்’ என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த பணத்தைக் கொடுத்தான். மூன்று பேர் அவனை நசுக்கிக்கொண்டிருந்தனர். அவர்களும் இவனைப்போலவே கை நடுக்கக்காரர்களாக இருக்கக்கூடும்.

***

‌”யோவ்..” இந்த வார்த்தை வாசுவின் 

‌காதில் விழுந்து திடுக்கிட வைத்து. எதிரிலிருந்த டாஸ்மாக் பணியாளரைப்  பார்த்தான். 

“எவ்வளவு குடுத்துருக்கிற?”

‌”நூத்து முப்பது ரூவா”

‌”தெனந்தான குடிக்கிற? நுத்து நாப்பதுன்னு உனக்குத் தெரியாதா?”

‌”தெரியும். ஆனா இவ்வளவுதான் இருக்கு.. குடுய்யா.. கை நடுங்குது”

‌”ஏன்யா கடை தொறந்ததும் வந்து உசுர எடுக்கிற?”

‌”சாவு கிராக்கிங்க.. அதோ இன்னும் மூனு நிக்குது” 

‌இது உள்ளே இருந்த வேறொரு பணியாளர். 

‌வாசுவுக்குக் கோபம் தலைக்கேறியது. 

‌”கால் பாட்டில் எவ்வளவு?”

‌”நூத்து நாப்பது ரூபாதான்.. இந்தா உன் காசு” என்று தூக்கி அவன் எதிரிலிருந்த மேசை மேல் வீசினான். ‌சில்லறையும் நோட்டுமாக வாசுவின் காசு அந்த மேசையின் மேல் சிதறியது. 

‌இரண்டு நாணயங்கள் வெளியில் இவன் இருக்கும் இடத்தில் விழுந்தன. வாசு உடனே அந்தக் காசினைப்  பொறுக்கக் குனிந்தான். ‌அதே நேரத்தில் பாட்டில் வாங்க வந்த இன்னொவன் அவனைக் காலால் முட்ட, வாசுவின் தலை அந்த இரும்பு கேட்டில் ‘நங்’கென்று  மோதியது. 

கீழே விழுந்த காசினைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன் மேசை மேல் இருந்த காசை நடுங்கும் கரங்களால் சிரமப்பட்டு எடுத்தான். ‌மொத்தமாக எடுத்ததும் மீண்டும் பணியாளனைக் கேட்டான். 

“குடுப்பியா, குடுக்க மாட்டியா?” 

‌”யோவ். வழிய விடுயா” ‌பணியாளர்கள் மூவரும் ஒன்றாகக் கத்தினர். ‌வாசு அவர்களை உற்றுப் பார்த்தான். ‌அந்த இரும்பு கேட்டினை விடுத்து, சிறிது பின்பக்கம் நகர்ந்தான். ‌தன் வலதுகையில் வைத்திருந்த காசினைப் பிரித்துப் பார்த்தான். 

‌நடுங்கும் கையை உயர்த்தி அந்தப் பணியாளர்களை நோக்கிக் காசை வீசினான். 

“இதையும் வச்சிக்கங்கடா.. உங்க பெண்டாட்டி தாலியில தங்கம் கோக்க”

‌பணியாளர்கள் அவனைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தனர். 

‌”யோவ். இங்கதான மறுபடி வருவ.. இரு” என்றான் ஒருவன். 

‌வாசு ஏதோ வித்தியாசம் உணர்ந்தவனாய்த் தன் கைகளைப் பார்த்தான். அந்தக் கைகள் இப்போது நடுங்காது  இயல்பாய் இருந்தன.

***

‌மறுநாள் காலை உஷாவிடம் தாஜா செய்து நூற்று நாற்பது ரூபாய் பெற்றுக்கொண்டு, வேறு ஒரு டாஸ்மாக் கடையின் முன் , ‘எப்போது திறப்பார்கள்’ என்று கை நடுங்க நின்றுகொண்டிருந்தான்.

  • ‌‌மேகலன் 

Suvadu Book List

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More