வெளியேறு

1 1,103

சிறுகதை

தயங்கி தயங்கித் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கக் காத்திருக்கும்போதுதான் ஜான்சியைப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊருக்குத் திருமணமாகி வந்தவள். வேறு எங்கும் அவள் நின்று பார்த்ததில்லை. ஓரிரு முறை வாகனப் பயணத்தில் எதிரில் பார்த்திருக்கிறேன்.

ஒல்லியான தேகத்தோடு பயத்தைச் சதையாகக் கொண்டு நடமாடும் மாந்தர் ஒன்றில், நிழல் அவள். மிக மெத்த ஒப்பனை ஒன்றும் இல்லாமல் ஊடுருவும் காலை வெயிலைப்போல, எப்போதும் மெல்லியதாகவே இருப்பாள்.

ஊரே கூடியிருக்கும் அம்மன் கோவில் கும்மி ஆட்டத்தில் பார்வையாளர் பகுதியில்கூட அவளைப் பார்க்கமுடியாது. இயேசுவின் பிள்ளைகளும் கும்மி ஆடும் பழக்கம் எங்கள் ஊரில் உண்டு. நானூறு குடும்பம் உள்ள ஊரில், அவளைப் போலவே பலர் இருக்கக்கூடும். எனக்கு அவளைத்தானே தெரியும்..?!

மவுனமாக இருவர்கள் எப்போதும் மவுனமானவர்கள் கிடையாதுதான். தன் வயதை ஒத்த பெண்கள் இருக்கும் இடத்தில் சட்டென்று பூத்துவிடுவார்கள். விரல்களைக் கோர்த்து, தோள்கள் உரசி, கன்னம் தொட்டுப் பேசுபவர்களை நீங்களும் நானும் பெண்களாகத்தான் பார்க்கமுடியும்.

பிடுங்கி நட்டுவைத்த மரம் போலவோ அல்லது பருவம் தவறிய பயிர் போலவோ, திருமணம் முடிந்த சில பெண்கள் மெதுவாகத்தான் நகருகிறார்கள்.

‘என்ன பிரச்னை..?’ என்று கேட்டதற்கு, எனக்குக் கேட்கும்படியான பதில் அவள் சொல்லவில்லை. ஆயில் கேன் கொண்டுவந்து அமர்ந்த மெக்கானிக் எனக்கு நல்ல பழக்கம். சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன், ‘எங்க ஊர்ப் பெண்… நல்லா பார்த்து அனுப்புங்க’ என்று. ஆனால் தயக்கம்.

உடைக்கப்படுகிற மவுனம் ஒன்று, அதீத வேறுபாடாவோ அல்லது விளக்கமுடியாத பற்றாகவோ மாறிவிடக்கூடும் என்று நினைக்கிறேன். அவள் அப்படியே இருக்கட்டும்.

மேல்வீதி பஜனைக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன். கிருஷ்ணஜெயந்தி அன்றுதான் நான் கவனித்திருக்கவேண்டும் அல்லது புரட்டாசி சனிக்கிழமை பஜனையில் இருக்கலாம்.

அழகாகப் பாடும் என்றில்லை. சக்கரைப் பொங்கலுக்குக் காத்திருக்கும் எங்களுக்கு என்ன சங்கீதம் தெரியும்? ஆனால் அந்தப் பாடல் ஏதோ செய்யும். மிக வேகமாக, மிக சத்தமாகப் பேசி விளையாடிய எங்களை, அந்தப் பாடல் மெதுவாகத் திருணையில் அமர்த்தி, வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லும்.

அந்தக் குரலை நாங்கள் வேறு எங்கேயும் எப்போதும் கேட்டிருக்க முடியாது. நாமம் இட்ட அந்தப் பாட்டியை அதற்குப் பின்பாக எத்தனையோ முறை பார்த்தாலும் அவளிடமிருந்து எங்களுக்கு எந்தச் சத்தமும் சொல்லும் வந்ததில்லை. கடைசியாகப் பாட்டி இறந்தபோது அதே பஜனை பாடப்பட்டது. ஆனால் அது அவள் பாடியதுபோல் இல்லை.

இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு என்னிடம் நகர்ந்தார் மெக்கானிக். நிறைய பேசிக்கொண்டோம். ஆனால் எனக்குள் இரண்டு சொற்கள்தான் இருந்தன. ஒரு பாடலும் ஒரு மவுனமும் ஒன்றா? இரண்டும் வேறு வேறல்லவா? தன் துயரை, மகிழ்வை ஒரு பாடலால் வெளிப்படுத்த முடியும் என்றால். மவுனமானவர்களின் துயர் எது? மவுனம் ஒரு துயர்தானா..? அது இயல்பு இல்லையா..? அல்லது மகிழ்வை எப்படி மவுனமானவர்கள் கொண்டாடுகிறார்கள்?

பஜனைப் பாட்டியின் பாடலில் துயர் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஆசுவாசம் என்று எனக்குத் தோன்றியதுண்டு. ஜான்சியைத்தான் என்னால் ஊடுருவ முடியவில்லை. சில நாட்களில் எனக்குத் தோன்றியதுண்டு, இரண்டு பேருக்கும் குழந்தைகள் இல்லை என்ற ஒற்றுமை உண்டென்று.

ஆனால் விஜயா அப்படி இல்லை. எல்லா நேரங்களிளும் ஒரே குரல் அளவோடு பேசுவாள். பேசுவாள் என்பது அத்தோடு முடிவது இல்லை, அவளாக நிறுத்த வழியில்லை. நாமாக விடுவித்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் எனக்கு அவள் குழந்தையாகத் தெரிவாள். தனக்குக் கிடைக்காத ஒன்றாக இருக்கும் குழந்தையை மனத்தால் வளர்க்கத் தொடங்கியவள் அவள்.

எல்லாக் குழந்தைகள் மீதும் அவளுக்கு அன்பு மட்டுமில்லாமல் உரிமையும் இருக்கும். குழந்தையின் தாய் மட்டும் செய்யும் செயலைக்கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வாள். ‘உனக்கு அந்தக் கவலை இல்லையா?’ என்று எனக்குக் கேட்கத் தோன்றும். ஆனால் அதற்கும் அவள் சிரித்துக்கொண்டேதான் பதில் சொல்லுவாள் என்பதால், இதுவரை கேட்கவில்லை.

ஒரே ஊருக்குள் நான் பார்க்கும் இந்த மூன்று முகங்களில் பஜனைப் பாட்டி இல்லை. இனி அவள் மவுனமும் பாடலின் அர்த்தமும் தேவையில்லை.  ஆனால், ஜான்சியின் மவுனத்தை உடைக்க ஒரு குழந்தையால்தான் முடியுமென்றால் இரண்டு தெய்வங்களில் ஒன்று விஜயாவைவிட முதலில் ஜான்சிக்கு அருளட்டுமே!

  • முத்து ஜெயா
Suvadu Book List
1 Comment
  1. Maryam says

    இக்கதை குரலற்றப்பெண்களின் குரலாக ஒலிக்கிறது.. நன்றி முத்து அவர்களே….
    வாழ்த்துகள்..

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More